(633)

வெற்றிக் கருள கொடியான்றன் மீமீ தாடா வுலகத்து

வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பே யாக வளர்த்தாளே

குற்ற மற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத்தோளோடு

அற்ற குற்ற மவைதீர அணைய வமுக்கிக் கட்டீரே

 

பதவுரை

கருளன் வெற்றிகொடியான் தன்மீது ஆடாஉலகத்து

-

பெரிய திருவடியை வெற்றிக் கொடியாகவுடைய எம்பெருமானுடைய ஆணையை மீறிச் செல்லக் கடவதல்லாத இவ்வுலகத்தில்   (எம்பெருமானுடைய ஆணைக்கு உட்பட்டதான இவ்வுலகத்தில்)

பெற்றதாய்

-

அவனைப்பெற்றதாயாகிய யசோதையானவள் (தனது புத்திரனை)

வெற்ற வெறிதே

-

ஒருவர்க்கும் பயனின்றியே, (பயனில்லையென்கிற மாத்திரமேயோ?)

வேம்பு ஆகவே

-

வேப்பங்காய்போல் வைக்கும்படியாகவே

வளர்த்தான்

-

வளர்த்துவாராநின்றான்.

குற்றம் அற்ற

-

(அவனைத் தவிர்த்து வேறொருவன் விரும்புகையாகிற) குற்றம் இல்லாத

முலை தன்னை

-

(என்னுடைய) ஸ்தநங்களை

குமரன்

-

யௌவனத்தோடு தோள் தீண்டியான அப்பெருமானுடைய

கோலம் பணைதோளோடு

-

அழகியதாயும் கற்பகக்கிளைபோன்ற தாயுமுள்ள திருத்தோள்களோடே,

அற்ற குற்றம்அவை தீர

-

(என்னைக்கைவிட்டு) அவற்றுக்கே அற்றுத் தீர்ந்தகுற்றம் தீரும்படி

அணைய அமுக்கி கட்டீர்

-

அமுக்கி யணைத்துக்கட்டிவிடுங்கள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில், “ந்தகோபன்மகனென்னுங் கொடியகடிய திருமாலால்“ என்று -டிபற்றதகப்பனை, வெறுத்துக்கூறினாள், இப்பாட்டில் பெற்றதாயை வெறுத்துக்கூறுகின்றாள். கண்ணபிரான் இவ்வளவு தீம்பனாயிருப்பதற்குக் காரணம் -யசோதை அவனை வளர்த்த பொல்லாங்கு என்றிருக்கிறாள். அவள் செவ்வையாக நியமித்து பயபக்திகளுண்டாம்படி ஸக்ஷித்து வளர்த்திருப்பளாகில் இவன் இப்படித் தீம்பனாயிருக்கமாட்டான், “அஞ்சவுரப்பாளசோதை ஆணாடவிட்டிட்டிருக்கும்“ என்னவேண்டும்படி அவள் இவளைத்தான் தோன்றியாக விட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததனால் இவன் தலைவிரித்தாடும் தீம்பனாகப் பெற்றான் என்றிருக்கிறாள். “பெற்றதாய் வெற்றவேறிதேவேம் பேயாக வளர்த்தாள் என்ற அந்வயக்ரமம் ஒரு பலினைவிரும்பிப் பிறர்க்கு அநர்த்தத்தை விளைப்பாருண்டு, அங்ஙனன்றியே யஸோதை நிஷ்ப்ரயோஜநமாகவே பராநர்த்தத்தை விளைக்க இவனை வளர்த்தாளே! என்கிறாள். வேம்பேயாக என்றவிடத்திலே வியாக்கியான ஸ்ரீஸூக்தி - “வேம்பும் கரும்புமாக வளர்க்கையன்றிக்கே வெறும்வேம்பேயாக வளர்த்தாள், அவன்வேம்பானது வளர்த்த பொல்லாங்கு என்றிருக்கிறாள்“ என்பதாம். வெற்றவேறிதே - சிறிதும் பலனில்லாதபடி என்கை. ஒருவகைக் குறிப்பிடைச்சொல். “செக்கஞ்செகவென்று“ “கன்னங்கரேலென்று“ என்னுமாபோலே வெற்றவேறிதே என்பதும் ஒருவகை வழக்கச்சொல் “வேம்புபோலே வளர்த்தாள்“ என்னாமல், “வேம்பேயாக வளர்த்தாள்“ என்றது - தீம்பின்மிகுதியாலேயுண்டான வைரஸ்யாதிஸயத்தைக்காட்டும்.

அவன் அப்படி வேம்பாயிருந்தாலும் “வேம்பின்புழு வேம்பன்றியுண்ணாது“ என்னுங்கணக்கிலே என்முலைகளானவை அந்த வேம்பிலே பணைத்தகிளைகளோடே அணையத்தான் ஆசைப்படாநின்றன, ஆகையாலே அவன் தோளையும் என் முலையையும் ஒன்றுசேர்த்து விலங்கிட்டு வையுங்களென்கிறாள் பின்னடிகளில்.

அவன் இத்தனை தீப்பனாய் உபக்ஷேத்திருக்கச்செய்தேயும் “அவரைப் பிராய்ந் தொடங்கி யென்றுமாதரித் தெழுந்தவ்வென் தடமுலைகள், துவரைப் பிரானுக்கே சங்கற்பித்து“ என்றும் “கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர் கோவிந்தனுக்கல்லால் வாயில்போகா“ என்றும் அவனையொழிய வேறொரு முகம்நோக்காதிருக்கும் முலைகளைக் “குற்றமற்றமுலை“ என்கிறாள்.

அற்றகுற்றமவைதீர என்பதற்கு - இம்முலைகள் இதுவரையில் அவனைப் பிரிந்திருந்த குறைதீரும்படி என்று சிலர் பொருள்கூறுவரேனும், அது வியாக்கியான ஸ்ரீஸூக்தியோடு பொருந்தாது. “அத்தோளோடே அற்ற தாய்த்து இம்முலைகள், இங்கே குடியிருப்பாய் அங்கே க்ருதஸங்கேதமாயாய்த் திருக்கிறது இவை. என்னைக் கூடாதே அங்கே அற்றகுறைதீரும்படி.“ என்றிறே பெரியவாச்சான்பிள்ளையருச்செய்துள்ளது.

“இவ்வுலகத்து வெற்றவெறிதே பெற்றதாய் வேம்பேயாக வளர்த்தாள்“ என்று இவ்வளவே சொல்லப் போதுமாயிருக்க, “வெற்றிக் கருளக் கொடியான்றன் மீமீதாட வுலகத்து“ என்று கருளக்கொடியுடையனான பகவானுடைய ஆணைணைமீறிச் செல்லக்கடவதல்லாத இவ்வுலகத்திலே என்று சொல்லுகைக்குக் கருத்தென் என்னில், எம்பெருமான் தன் ஆஜ்ஞையாலே எல்லாரையும் கீழ்ப்படுத்தி எதுவும் எல்லைகடந்து நடவாமல் ஒரு மரியாதையாய் நடந்துவரும்படி விஜயத்வஜமெடுத்துச் செங்கோல் செலுத்தா நின்றவுலகத்திலே எல்லா மரியாதைகளும்கெட்டு மனம்போனபோக்கே செய்யுமவனான ஒருபிள்ளையைப் பெற்றாள் யசோதை - என்கிறாளெனக்கொள்க.

 

English Translation

He moves like a despot in the world sporting a vicious bird-banner. His mother repents bitterly that she brought up a useless son. Bring the insolent youth to justice; bind him up firmly-by his beautiful arms to my faultless breasts.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain