(629)

கஞ்சைக் காய்ந்த கருவில்லி கடைக்க ணென்னும் சிறைக்கோலால்

நெஞ்சூ டுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை

அஞ்சே லென்னா னவனொருவன் அவன்மார் வணிந்த வனமாலை

வஞ்சி யாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே

 

பதவுரை

கஞ்சை

-

கம்ஸனை

காய்ந்த

-

தொலைத்தவனாயும்

கரு வில்லி

-

பெரியவில் போன்ற புருவத்தையுடைனாயு மிருக்கிற கண்ணபிரானுடைய

கடைக்கண் என்னும்

-

கடைக்கண்ணாகிற

சிறை கோலால்

-

சிறகையுடைய அம்பாலே

நெஞ்சுஊடுருவ

-

நெஞ்சமுழுதும்

வேவுண்டு

-

வெந்து போம்படியாகப் பெற்று

நிலையும் தளர்ந்து

-

நிலைமைகுலைந்து

நைவனை

-

வருந்துகின்ற என்னை நோக்கி

அஞசேல் என்னானவன் ஒருவன்

-

“பயப்படாதே“ என்றொருவார்த்தையும் சொல்லாதவனாய் விஜாதீயனான

அவன்

-

அப்பெருமான்

மார்வு அணிந்த

-

(தனது) திருமார்பில் சாத்தியருளின

வனமாலை

-

வனமாலையை

வஞ்சியாதே

-

மோசம்பண்ணாமல்

தரும் ஆகில்

-

கொடுத்தருள்வனாகில்

கொணர்ந்து

-

(அம்மாலையைக்) கொண்டு வந்து

மார்வில்

-

(என்னுடைய) மார்பிலே

புரட்டீர்

-

(நெஞ்சினுள் வெப்பம் தீருமாறு) புரட்டுங்கள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கம்ஸனைக் கொண்றொழித்தவனும் சார்ங்கவில்போன்ற திருப்புருவங்களையுடையனுமான கண்ணபிரானுடைய கடாக்ஷங்களிலே நான் மிகவும் ஈடுபட்டு ஆற்றமாட்டாமல் நிலை தளரந்துபோக நின்றேன், இப்படிப்பட்ட நிலைமையில் வேறு உதவியொன்றுஞ் செய்யாமற்போனாலும் “நானிருக்கிறேன், பயப்படாதே“ என்றொரு வாய்ச்சொல்லாவது சொல்லலாமே அவன், அதுவும் சொல்லக் காணோம் நீங்களாவது அவனிடஞ்சென்று என்பரிதாப நிலைமையை விண்ணப்பஞ்செய்து அவனையே ஸகாக்ஷாத்தாக இங்கு அழைத்துவர முடியாமற் போனாலும் அவன் திருமார்பிலே சாத்திய வனமாலையையாவது கொடுக்குமாறு கேளுங்கள் அவனும் அதனை வஞசியாமல் கொடுத்தருளினானாகில் கொணர்ந்து நெஞ்சூடுருவ வேவுண்ட எனது நெஞ்சில் தாபம் ஆறும்படி மார்பிலே புரட்டுங்கள் என்கிறாள்.

கஞ்சன் என்றசொல் இங்கே  கஞ்சு எனச் சிதைந்து கடக்கிறது. காய்ந்த - காய்தல் - கோபித்தலாய், அதன்காரியமான முடித்தலைச்சொல்லுகிறது, கம்ஸனைமுடித்த -என்றதாயிற்று. கருவில்லி “வில் போன்ற புருவத்தை யுடையவன்“ சொல்லியிருப்பது - முற்றுமை. இதனை வடநூலார் அலங்கார ஸாஸ்தரத்தில் ரூபகாதிசயோக்தி என்பர்.

கடைக்கணென்னும் சிறைக்கோலால் -“ஏழையராவி புண்ணும் இணைக்கூற்றாங் கொலோவறியேன், ஆழியங்கண்ணபிரான் திருக்கண்கள்கொலோ“ என்றும், பாவியேன்றன்னையடுகின்ற கமலக்கண்ணதோர்“ என்றுமு சொல்லுகிறபடியே எம்பெருமானுடைய திருக்கணோக்கம் விஸ்லேஷதஸையிலே, மிகவும் துன்பப்படுத்தவற்றாதல் பற்றி “கடைக்கணென்னுஞ் சிறைக்கோலால் நெஞ்சூடுருவ்வேவுண்டு“ என்கிறாள். “ஆஸ்ரிதரோடு வாசியற எல்லாரையும் கோலாலேகொல்லுவன் எம்பெருமான்“ என்று அழகிய மணவாளச்சீயர் ரஸோக்தியாக அருளிச்செய்யும்படி. அதாவது - “கொல்லாமாக்கோல் கொலைசெய்து பாரதப்போர் எல்லாச்சேனையும் இரு நிலத்தவித்த வெந்தாய்“ (திருவாய்மொழி   ?????  ) என்கையாலெ அநாஸ்ரிதரைக் கொல்லுகைக்கு ஒரு யாலே ஆஸ்ரிதலைக் கொல்லுகைக்கும் ஒருகோல் பரிகரமாயிற்று என்க. சிறைக்கோல் - கோல் என்று அம்புக்குப் பெயர், சிறைக்கோலென்றது - இறகுகளையுடைய அம்பு என்றபடி அல்லது, சிறைச்சாலையில் உபயோகிக்கப்படும் அடிகோல் என்றும் பொருள்கொள்ளலாம் ஹிம்ஸிப்பதில் வல்லமைவாய்ந்தகோல் என்பது தேர்ந்தகருத்து. ஸாதாரணமான அம்புகளைப்போல் தோல்புரையைபட்டு நில்லாமல் நெஞசிலேபட்டு மர்மஸ்பர்ஸியாய்ப் பெறுக்கவொண்ணாத துன்பத்தைத் தருகின்றமை தோன்ற “நெஞ்சூடுவ்வேவுண்டு“ என்கிறாள். அம்புபட்டால் நாலடி நடந்துசென்று பிறகு தளர்த்தியுண்டாகும், அவனுடைய நோக்கிற அம்புபட்டால் “நிலையுந்தளர்ந்து நைவேனே“ என்கிறாள் நைவேனை - ஸந்திபந்தங்கள் குலைந்து ஸைதில்பத்தை படைத்த என்னை என்றபடி.

வனமாலை -“***“ (ஆபதபத்மம் யாமாலா வநமோலேதி ஸ மதா, எனபர் வடநூலார், வனம் என்பதற்கு பல்பொருள்களில் அழகு என்னும் பொருளையும், துளஸி என்னும் பெர்ருளையும் இங்கே விவக்ஷித்து, அழகியமாலை, அல்லது - திருத்துழாய்மாலை என்றுபொருள் கொள்வதம் நன்றே. வஞசியாதே தருமாகில் - நீங்கள் அப்பெருமானிடத்துச் சென்று “ஆண்டாளுக்காக உன் மார்வணிந்த வனமாலையைக் கொடுத்தருள்“ என்று கேட்டால்“ அவன் * வஞ்சக் கள்வன் மாமாயனாகையாலே தன்னுடைய புன் முறுவலைக் காட்டி கடாக்ஷவிக்ஷண சாதுரியத்தைக் காட்டியும் உங்களைமயக்கி நீங்கள் வந்தகாரியத்தை மறந்தொழியும்படி செய்து மோசப் பண்ணிவிட்டாலும் விடுவன். அப்படி வஞசனை பண்ணாமல் திருமார்வுமாலையைத் தந்தருளினானாகில்அதனைக் கொணர்ந்து என் தலையில் சூட்டப் பாராமல் புண்பட்டவிடத்தில் பரிஹரிக்க வேண்டுமாதல்பற்றி மார்பிலே புரட்டி * நெஞ்சூடுருவ்வேவுண்ட தாபமெல்லாம் தணியும்படி செய்யுங்கள் என்கிறாள். அவன்றன்னையே முடிந்தது. அணையவேணுமென்று பட்டஆசை மாலையிலே சென்று முடிந்தது.

 

English Translation

The demon killer Krishna, with his bow-like eyebrows and arrow-sharp gaze, has pierced and seared my bosom; alas, my spirit is ebbing. He does not show himself and say, “Fear not”. If he parts with his Vanamala, without playing false, bring it here and rub it on my chest.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain