(628)

பாலா லிலையில் துயில்கொண்ட பரமன் வலைப்பட் டிருந்தேனை

வேலால் துன்னம் பெய்தாற்போல் வேண்டிற் றெல்லாம் பேசாதே

கோலால் நிரைமேய்த் தாயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி நீலார்

தண்ணந் துழாய்கொண்டென் நெறிமேன் குழல்மேல் சூட்டீரே

 

பதவுரை

பால்ஆலிலையில்

-

பால் பாயும் பருவத்தையுடைய ஆலந்தளிரிலே

துயில் கொண்ட

-

கண்வளர்ந்தருளின

பரமன்

-

பெருமானுடைய

வலை

-

வலையிலே

பட்டிருந்தேனை

-

அகப்பட்டுக் கொண்டிருக்கிற என்னைக் குறித்து

வேலால் துன்னம் பெய்தால் போல்

-

வேலாயுதத்தை யிட்டுத் துளைத்தாற்போல் (கொடுமையாக)

வேண்டிற்று எல்லாம் பேசாதே

-

உங்களுக்குத்தோன்றின படியெல்லாம் சொல்வதைத்தவிர்ந்து

ஆயன் ஆய்

-

இடைப்பிள்ளையாய்

கோலால்

-

(இடைச்சாதிக்கு உரிய) கோலைக்கொண்டு

நிரை மேய்த்து

-

பசுக்கூட்டங்களை மேய்த்தவனாய்

குடந்தை கிடந்த

-

திருக்குடந்தையில் திருக்கண்வளர்ந்தருளுமவனாய்

குடம் ஆடி

-

குடக்கூடத்தாடினவனுமான கண்ணபிரானுடைய

நீல்ஆர் தண்அம் துழாய் கொண்டு

-

பசுமை பொருந்திக் குளிர்ந்து அழகிய திருத்துழாயைக் கொண்டுவந்து

நெறி மென்

-

நெறிப்புக் கொண்டதாயும் மிருதுவாயு மிருந்துள்ள

என் குழல்மேல்

-

எனகூந்தலிலே

சூட்டீர்

-

சூட்டுங்கள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தாய்மார்களே! நீங்கள் எனக்கு ஹிதஞ்சொல்வதாக நினைத்துப் பல பேச்சுக்களைப் பேசுகிறீர்கள், எப்படியாவது என்நெஞ்சைக் கண்ணபிரானிடத்தில் நின்றும் மீட்கவேணுமென்று பார்க்கிறீர்கள், நான் அவ்விஷயத்தில் அவகாஹிப்பதற்குமுன்பு நீங்கள் ஹிதஞ்சொல்லியிருந்தால் ஒரு கால் ப்ரயோஜநப்பட்டிருக்கலாம், வெள்ளம் கடந்தபின்பு அணை கட்டுவாரைப்போலே, அவ்விஷயத்திலே நான் அற்றுத் தீர்ந்தபின்பு என்னை நீங்கள் மீட்கப்பார்த்துப் பயனென்? நானோ, “பாலகனென்று பரிபவஞ்செய்யேல் பண்டொருநாள், ஆலினிலை வளர்ந்த சிறுக்கனவனிவன்“ என்னும் படியான கண்ணபிரானாகிற வலையிலே சிக்கிக் கொண்டேன், அதில் தப்பநீங்க என்னாலும் முடியாது, உங்களாலும் தப்புவிக்கமுடியாது, இப்படிப்பட்ட நிலைமையில் சொல்வதானது வெறும் பேச்சாயில்லை, வேலாயுதத்தையிட்டுத் துளைக்கிறாப்போல் அத்தனை பாதகமாயிரா நின்றது. இப்போது எனக்கு நீங்கள் உண்மையாக ஏதாவது நன்மைசெய்ய விரும்புதிரேல், ஸௌஸீல்ப ஸௌலப்யாதி குணங்கள் விளங்கநின்ற அக்கண்ணபிரானுடைய ஸம்பந்தம் பெற்றதொரு திருத்துழாய்மலரைக் கொணர்ந்து என் குழலிலே சூட்டுங்கள் அதுவே எனக்குற்ற நன்மையாகும் என்கிறாள்.

பாலாலிலே என்றது பால்பாயும் பருவமான ஆலிலே என்றபடியாய் மிகவும் இளைசான இலையைச் சொன்னபடி. கல்பத்தின் முடிவில் உலகங்களையெல்லாம் எம்பெருமான் தன்திருவயிற்றில் வைத்து ஓர் ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருள்வதாக நூறுகொள்கை.

“வலைப்பட்டிருந்தேனே“ என்றவிடத்து வியாக்கியான ஸ்ரீஸூக்தி “பெரியாழ்வார் மகளிறே, பரிவரில்லாதவிடத்திலே சாய்ந்தானென்று அதிலே நெஞ்சை வைத்திருக்கையாலே கால்வாங்கிப் போகமாட்டாதே சிறைப்பட்டிருந்தாள்காணும்“

 

English Translation

I am caught in the dragnet of the child-who-slept-on-a-fig-leaf. Pray restrain yourselves; your words are piercing me like spears. Go bring the cool Tulasi worn by the cowherd pot-dancer, who is sleeping soundly in Kudandai, and wrap it on my soft-hair coiffure.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain