(627)

கண்ண னென்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை

புண்ணில் புளிப்பெய் தாற்போலப் புறநின் றழகு பேசாதே

பெண்ணின் வருத்த மறியாத பெருமா னரையில் பீதக

வண்ண ஆடை கொண்டுஎன்னை வாட்டம் தணிய வீசீரே

 

பதவுரை

கண்ணன் என்னும்

-

ஸ்ரீக்ருஷ்ணனென்கிற

கரு தெய்வம்

-

கரியதொரு பரதேவதையினுடைய

காட்சி

-

காட்சியிலே

பழகி கிடப்பேனே

-

பழகிக்கிடக்கிற என்னைக் குறித்து (ஓ! தாய்மார்களே! நீங்கள்)

புறம்நின்று

-

அசலாக இருந்துகொண்டு

புண்ணில் புளிபெய்தால் போல

-

புண்ணிலே புளி ரஸத்தைச் சொரிந்தாற்போல்

அழகுபேசாதே

-

பணிக்கை சொல்வதைத் தவிர்ந்து,

பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில்

-

பெண் பிறந்தாருடைய வருத்தத்தை அறியாதவனான கண்ணபெருமானுடைய திருவரையில் சாத்திய

பீதக வண்ணம் ஆடைகொண்டு

-

பீதாம்பரத்தைக் கொண்டுவந்து

வாட்டம் தணிய

-

(என்னுடைய) விரஹ தாபம் தீரும்படி

என்னை வீசீர்

-

என்மேல் வீசுங்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரானுடைய காட்சியிலேயே பழகிக்கிடக்கிற என்னை நோக்கி நீங்கள் ஹிதோபதேஸம் செய்வதானது புண்ணிலே புளிரஸத்தைச் சொரியுமா போலேயிராநின்றது, ‘பெண்ணே! நீ அப்படியிருந்தால் அழகாயிருக்கும், இப்படியிருந்தால் அழகாயிருக்கும்‘ என்று நீங்கள் எனக்குச் சொல்லுகிறவார்த்தைகள் போதும், எனக்குநீங்கள் ஒன்றும் அழகுபேசவேண்டா, உண்மையாக எனக்கு ஏதாவது நன்மைபெறுவிக்க வேணுமென்ற கருத்து உங்களுக்குண்டாகில், பெண்பிறந்தார் படும்பாட்டை அறியாதவனான கண்ணபிரானுடைய திருவரையிற் பீதாம்பரத்தைக் கொணர்ந்து அத்தாலேவீசி என்னுடைய தாபத்தைத் தணிக்கப்பாருங்கள் என்கிறாள்.

கண்ணனென்றால் எல்லார்க்கும் மிகவும் எளியவன் என்று ப்ரஸித்தமாயிருந்தது, அந்த ப்ரஸித்தியானது இப்போது மாறிப்போய் அவன் பரதேவதையாய்விட்டான் - ஸௌல பயம்மாறிப் பரத்வம் பொலியநின்றானென்றுங் கருத்துத் தோன்றக் கண்ணனென்னங் கருந்தெய்வம் என்கிறாள். காட்சி - தர்ஸநம், அது பழகிக்கிடக்கையாவது -இப்போது அவன் ஸேவைஸாதிக்காவிட்டாலும் முன்பு ஸேவைஸரத்தித்தபடியை ஸமரித்துக்கொண்டாகிலும் தரித்திருப்போமென்றால் அதுவும் முடியாதபடி முன்புகண்டகாட்சி நினைவுக்குவாராமல் அவ்வழி புல்முடிப்போகை. அவனைஸேவித்து நெடுநாளாயிற்றுப்போலும். ஒரு பகலாயிரமுழியாய்த் தோற்றமிறே இனி, “கண்ணனென்னுங்கருந்தெய்வங் காட்சிபழகிக்கிடப்பேனே“ என்பதற்கு ‘கண்ணபிரானைக்காணவேணு மென்பதையே அநளரதம் உருப்போட்டுக்கொண்டிருக்கிற என்னைக்றித்து‘ என்றும் பொருள்கொள்ளலாம். பழகுதலாவது -அப்யாஸம்பண்ணுதல், ஒன்றையே பலகால்ஆவ்ருத்திபண்ணுதல். புண்ணில் புளிப்பெய்தாலொக்குந் தீமை“ என்றார் பெரியாழ்வாரும். புண்ணிலே புளிரஸத்தைச் சொரிந்தால் பாதை பொறுக்கமுடியாது. புறநின்று - எனக்கு நீங்கள் அந்தரங்கர்களாக இருந்து வார்த்தை சொல்லவேண்டியது தவிர்த்து அசலாகநின்று வார்த்தை சொல்லுவது என்னே! என்கிறாள். புறம் நிற்கையாவது - அசலாரென்று தோற்றும்படியாக நிற்கை. அழகுபேசுகையாவது - பணிக்கைசொல்லுகை. எனக்கு நீங்கள் பணிக்கை சொல்லவேண்டாமென்றாள்.

“பெண்ணின் வருத்தமளியாத பெருமான்“ என்றவிடத்திலே வியாக்கியான ஸ்ரீஸூக்தி - “முலையெழுந்தார்படி மோவாயெழுந்தார்க்குத் தெரியாதிறேஎன்று பட்டரருளிச்செய்தாராக ப்ரஸித்தமிறே“ -(மோவாயெழுகை யாவது - மீசைமுளைக்கை.)

“அரையில் பீதகவண்ண வாடைகொண்டு - என்கிறாளே, திருவரையில் சாத்தின பீதாம்பரமாகவேயிருக்க வேணுமென்று என்ன நிர்ப்பந்தம்? மேலிட்ட உத்தரீயமானாலாகாதோ? என்று நஞ்சீயர் பட்டரைக்கேட்க. “ஆண்டாள் கண்ணபிரானுடைய ஸ்வேதபரிமளத்திலே மிகவும் ஆசை கொண்டவள் காணும், மேலிட்ட உத்தரீயத்தில் அது ஆசைதீரக்கிடைக்குமென்று ‘அரையிற் பீதகவண்ணவாடைகொண்டு‘ என்கிறாள்“ என்றருளிச்செய்தாராம்.

பீதகவண்ணவாடை - பீதமென்ற வடசொல் சுப்ரத்யயமேற்றுப் பீதகமென்றாயிற்று, பீதகவண்ணம் - பொன்வர்ணமான, ஆடை - அதாவது பீதாம்பரம். ஆண்டாளுடைய தாபத்தின்மிகுதியைக் கண்ட தாய்மார்கள் விசிறியைக் கொணர்ந்து அதனால் விசிறத் தொடங்க, நீங்கள் இதனால் என்னுடைய தாபத்தைத் தணிக்கமுடியாது, அவனுடைய பீதாம்பரத்தைக் கொணர்ந்து அத்தால் விசிறினால்தான் வாட்டந்தணியுமென்கிறாள் - என்று ஒருகால் அழகிய மணவாளச்சீயர் உபந்யஸித்தருளினபடி.

 

English Translation

I lie possessed by a dark god called Krishna. Pray do not stand and talk wisdom, pouring tamarind over a wound. Alas, the Lord does not understand the maiden’s pangs. Unrobed him of his yellow vestment and fan me out of my swoon with it.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain