(595)

கோங்கல ரும்பொழில்மா லிருஞ்சோலயில் கொன்றைகள்மேல்

தூங்குபொன் மாலைகளோ டுடனாய்நின்று தூங்குகின்றேன்

பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் சார்ங்கவில்

நாணொலியும் தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ

 

பதவுரை

கோங்குஅலரும் பொழில்

-

கோங்கு மரங்கள் மலரப் பெற்றசோலைகளையுடைய

மாலிருஞ் சோலையில்

-

திருமாலிருஞ் சோலை மலையில்

கொன்றைகள் மேல்

-

கொன்றைமரங்களின் மேல்

தூங்கு

-

தொங்குகின்ற

பொன்மாலைகளோடு உடனாய் நின்று

-

பொன் நிறமான பூமாலை களோடுஸமமாக

தூங்குகின்றேன்

-

வாளா கிடக்கின்றேன்

பூ கொள்

-

அழகு பொருந்திய

திருமுகத்து

-

திருப்பவளத்திலே

மடுத்து

-

வைத்து

ஊதிய

-

ஊதப்படுகிற

சங்கு

-

ஸ்ரீபாஞ்சஜந்யத்தினுடைய

ஒலியும்

-

த்வநியும்

சார்ங்கம் வில்நாண் ஒலியும்

-

சார்ங்கமென்னும் வில்லின் நாணோசையும்

தலைப்பெய்வது

-

ஸமீபிப்பது

எஞ்ஞான்று கொல்

-

என்றைக்கோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாசுரத்தின் கருத்து மிகவும் ஆழ்ந்தது. திருமாலிருஞ் சோலைமலையிற் கொன்றை மரங்களின்மீது தொங்குகின்ற கொன்றைப்பூ மாலைகளோ டொப்ப நானும் தூங்குகின்றேன் என்று கூறுகின்ற ஆண்டாளுடைய கருத்து யாதெனில்; - கேண்மின்; திருமாலிருஞ்சோலைமலையில் ஸாத்விக புருஷர்கள் ஏறிப்போவர்களேயன்றி ராஜஸ தாமஸ புருஷர்கள் ஏறிப்போகமாட்டார்கள். கொன்றைமலர்கள் சிவன் முதலிய தேவதாந்தரங்களின் ஆராதனைக்கு உபயோகப்படக்கூடியவை யாதலால் அம்மலர்கள் ராஜஸ தாமஸ புருஷர்கட்கு உபயுக்தமாகுமேயன்றி ஸாத்வித புருஷர்கட்கு அவைகொண்டு பயனில்லை. இனி ஸாத்விகமாத்ரப்ராப்யமான திருமாலிருஞ் சோலைமலையில் மலர்கின்ற கொன்றை மலர்கட்கு ஏதாவது உபயோகமுண்டோவென்று சிந்தித்தால், அவை அங்கே மலர்ந்து அங்கே வீழ்வதொழிய வேறொருபயோகமும் அவற்றுக்கு இல்லையென்றே சொல்லவேண்டும். ஆகவே, அம்மலர்களின் ஜன்மம் எப்படி விணோ அப்படியே என் ஜன்மமும் வீணாயிற்றே! என்கிறாள்.

“தாமஸ புருஷர்கள் புகுரும் தேஸமன்று, ஸாத்விகர் இதுகொண்டு காரியங்கொள்ளார்கள், பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து பகவதரஹமான வஸ்து இங்ஙனே இழந்திருந்து க்லேஸப்படுவதே!“ என்ற விடாக்கியான ஸ்ரீஸூக்தியின் போக்யதையை நோக்குமின்.

“கன்னவிலுங் காட்டகத்தோர் வல்லிக்கடிமலரின், நன்னறுவாசம் மற்றாரானு மெய்தாமே, மன்னும் வறுநிலத்து வாளாங்கு உகுத்தலுபோல், என்னுடைய பெண்மையு மென்னலனு மென்முலையும், மன்னுமலர் மங்கைமைந்தன் கணபுரத்துப் பொன்மலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல் என்னிவைதான் வாளா எனக்கே பொறையாகி, முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர், மன்னமருந்தறிவீரில்லையே!“ என்ற பெரிய திருமடற் பாசுரங்கள் இங்கு நினைக்கத்தக்கண்.

(பூங்கொள் திருமுகத்து இத்யாதி) கண்ணபிரானை யன்றி மற்று எவனையும் கனவிலுங் கருதாதிருக்க ருக்மிணிப்பிராட்டிக்கு ஸிஸுபாலனோடு விவாஹம் நடப்பதாகக் கோடித்து ஸித்தமாயிருந்த ஸமயத்தில் கண்ணபிரானது வரவை எதிர்பார்த்திருந்த அப்பிராட்டியின் நெஞ்சு முறிந்துபோய் இனி நாம் உயிர்துறப்பதே நல்லுபாயம் என்று தீர்மானித்திருந்த க்ஷணத்தில் கண்ணபிரான் பதறி ஓடிவந்து புறச்சோலையிலே நின்று தனது ஸ்ரீபாஞ்சஜந்யத்தை ஊத, அவ்வோசையானது அந்த ருக்மணிப்பிராட்டியின் செவிபுகுந்து எப்படிப்பட்ட ஆநந்தத்தை உண்டாக்கிற்றோ அப்படிப்பட்ட ஆநந்தம் எனக்கு என்றைக்கு உண்டாகும்!; இராவணனானவன் ஸீதையிடம் வந்து இராமபிரான் இறந்தானாக ஒரு பொய்க்கூற்றுக் கூறி மாயஸிரஸ்ஸைக் காட்டினபோது அப்பிராட்டி வருந்திக்கிடக்கும் க்ஷணத்தில் இராமபிரான் கடற்கரையிலே நின்று தனது சார்ங்கவில்லை ஒலிப்பிக்க, அவ்வொலியானது ஸீதையின் செவியிற்புகுந்து எப்படிப்பட்ட ஆநந்தத்தை உண்டாக்கிற்றோ அப்படிப்பட்ட ஆநந்தம் எனக்கு என்றைக்கு உண்டாகும்! என்கிறாள்.

“இரண்டாவதாரத்தில் இரண்டு பிராட்டிக்கு உதவினது தனக்கொருத்திக்குமே வேண்டும்படியாயாய்த்து இவள் தஸை, சிசுபாலன் ஸவயம் வாரார்த்தமாக ஒருப்பட்ட மையத்திலே, புறச்சோலையிலே ஸ்ரீபாஞ்ச ஜந்யகோஷமானது வந்து செவிப்பட்டு தரிப்பித்தது ருக்மிணிபிராட்டியை, ராவணன் மாயாஸிரஸ்ஸைக் காட்டினபோது ஸ்ரீ சார்ங்கத்தின் ஜ்யாகோஷமானது வந்து செவிப்பட்டு தரிப்பித்து ஸ்ரீஜநக்ராஜன் திருமகளை, இரண்டாவதாரத்திலுள்ளவையும் மடுத்தொலிக்க வேண்டும்படியாயாய்த்து இவள்விடாய், அவர்களளவல்ல வாய்த்து இவளாற்றாமை“ என்ற வியாக்கியான ஸ்ரீ ஸூக்தியை அநுஸந்திப்பது.

 

English Translation

Amid the Kongu trees that blossom in Malirumsolai, I lie in a vain, drooping like strings of the Konrai flower. When, O When will I hear the twang of his Sarnga bow, and the boom of the conch blowing on his sweet lips?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain