(587)

சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்

இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்

மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட

சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ

 

பதவுரை

திரு மாலிருஞ்சோலை எங்கும்

-

திருமாலிருஞ்சோலையில் பார்த்த பார்த்த விடமெங்கும்

இந்திர கோபங்கள்

-

பட்டுப்பூச்சிகளானவை

செம்

-

சிவந்த

சிந்துரம் பொடி போல்

-

ஸிந்தூரப்பொடிபோல

எழுந்து

-

மேலெழுந்து

பரந்திட்டன

-

பரவிக்கிடக்கின்றன

ஆல்

-

அந்தோ!

அன்று

-

(கடலைக் கடைந்து அமுதமளிக்கவேணுமென்று தேவர்கள் சரணம் புகுந்துவேண்டின) அக்காலத்திலே

மந்தரம்

-

மந்தரமலை

நாட்டி

-

(பாற்கடலில் மத்தாத) நாட்டி

(கடல் கடைந்து)

கொழு மதுரம்

-

மிகவும் மதுரமான

சாறு

-

அம்ருதரஸத்தை

கொண்ட

-

எடுத்துக்கொண்ட

சுந்தரம் தோள் உடையான்

-

ஸ்ரீ ஸுந்தர பாஹு நாதனுடைய

சுழலையில் நின்று

-

சூழ்வலையில் நின்றும்

உய்தும் கொல்

-

பிழைப்போமோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மழைக்காலத்திலே பட்டுப்பூச்சிகள் விசேஷமாகப் பறக்கும், அவை காதலனுடைய அதரத்தின் பழுப்புக்கு ஸ்மாரகங்களாய் இருக்குமாதலால் தலைவிக்கு உத்தீபகமாயிருக்கும். ஐயோ! திருமாலிருஞ்சோலைப் புறமெங்கும் பட்டுப்பூச்சி மயமாய்விட்டதே, விச்லேஷகாலத்திலே இவை வந்துதோற்றினால் இனி உயர்தரிக்க வழியுண்டேவென்று வருந்துகின்றாள். “இந்திரகோபங்கள் எம்பெருமான் கனிவாயொப்பான், சிந்தும்புறபில் தென் திருமாலிருஞ்சோலையே“ என்று பெரியாழ்வார் திருமொழி இங்கே நினைக்கத்தக்கது.

எம்பெருமானுடைய வடிவுக்குப் போலியான திருமலைக் கண்ணாலே ஸேவித்துக்கொண்டிருந்தாகிலும் ஒருவாறு தரித்திருப்போமென்று பார்த்தால் அதற்கும் ஆசையில்லாதபடி பாழும் பட்டுப்பூச்சிகள் அம்மலைச் சூழ்ந்து கொண்டு மறைக்கின்றனவே! என்று கருத்தாகவுங் கொள்ளலாம்.

மந்தரம்நாட்டி மதுரக்கொழுஞ்சோறு கொண்ட வரலாறு கீழ்விவரிக்கப்பட்டுள்ளது. அந்தச் சரித்திரத்தை ஆண்டாள் இங்கெடுத்து அநுஸந்தித்ததற்க்கு கருத்து யாதெனில், ஒருவரிடத்தில் ஒன்றுகொள்ள நினைத்தால் பின்னை அவர்கட்கு ஒன்றும் மிகாதபடி ஸாரமானவற்றைக் கொள்ளைகொள்பவனன்றோ அவன்!; மந்தரமலையைக் கடலின் நடுநெஞ்சிலே நட்டு நெருங்கிக் கடையுமவன்னறோ அவன்! ஒருவரால் கலக்கவொண்ணாத பெரிய தத்வங்களையுங் கலக்கி ஸாராம்ஸத்தைக் கொள்ளை கொள்ள வல்லவனன்றோ அவன்!; அப்படிப்பட்டவன் அபலையானவென்னை அழியச் செய்கிறானென்றால் இஃது என்ன அற்புதம்? என்றவாறு.

மதுரச்சாறு என்று அம்ருதரஸத்தைச் சொல்லிற்றாய், மதுரக்கொழுஞ்சாறு என்று அதிற்காட்டிலும் போக்யதைவிஞ்சிய பெரியவிராட்டியாரைச் சொல்லிற்றாகலாம். தேவர்கட்கு அமுதமெடுத்துக்கொடுக்கிற வியாஜத்தினால் லோகோத்தரமான அமுதமென்னலாம்படியான் பிராட்டியை ஸம்பாதித்துக் கொண்டானிறே; “விண்ணவரமுதுண அமுதில்வரும் பெண்ணமுதுண்ட வெம்பெருமானே! என்ற திருமங்கையாழ்வார் ஸ்ரீஸூக்தியை நோக்குக. கூரத்தாழ்வான அருளிய ஸுந்தரபாஹுஸ்தவத்தில் “***“ (உத்திகமந்தராத்ரி) என்கிற நான்காவதுச்லோகத்தின் முற்பாதியில் இவ்விசேஷார்த்தம் நன்கு விளங்கக் காண்க.

சுழலை - சூழ்ச்சி, அதாவது - வஞ்சகர்செய்யும் தந்திரம். இங்கு திருமாலிருஞ்சோலையழகர்செய்த தந்திரமாவது - தாம் நேராக எழுந்தருளாமல் தமது வடிவுக்கு ஸமாரகங்களான மேகங்களை வரக்காட்டுதல், இந்திரகோபங்களைப் பரவச்செய்தல் முதலிய காரியங்களினால் ஆண்டாளுக்கு உத்தீபநஞ்செய்தல். சுழலையில் நின்று உயதுங்கொலோ? என்றது - இந்த ஆபத்தைத் தப்பிப் பிழைக்க நம்மாலாகாது என்றபடி. ஒரு பெரியகைகாரன் நம்மை அகப்படுத்துதனையேயுள்ளது என்கிறாள்.

சிந்தூரம், இந்திரகோபம், மந்தரம், மதுரம், சுந்தரம்= வடசொல் விகாரங்கள். உய்து= உய் என்னும் வினைப்பகுதியடியாப் பிறந்த தன்மைப்பன்மை வினைமுற்று.

 

English Translation

Alas, like Sindoor powder spilled over Malirumsolai, red cochineal insects swarm and flies everywhere, the Lord with beautiful arms planted the mountain shaft, and churned for ambrosia; how can I stand in its vortex and live?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain