(6)

எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி

வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்

அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை

பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே.


பதவுரை

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்

ஏழ் படி கால் தொடங்கி

-

என் பிதாவும் அவருடைய பிதாவும் அவருடைய பிதாவும் அவருடைய பிதாவும் அவருடையபாட்டனுமாகிய ஏழு தலைமுறையாக

வந்து

-

(உரிய காலங்களில்) வந்து

வழி வழி

-

முறைதப்பாமல்

ஆள் செய்கின்றோம்

-

கைங்கரியம் பண்ணுகிறோம்

திரு ஓணம் திருவிழவில்

-

ச்ரவண நக்ஷத்ரமென்கிற திருநாளிலே

அந்தி அம்போதில்

-

அழகிய ஸரயம் ஸந்தியாகாலத்தில்

அரி உரு ஆகி

-

நரஸிம்ஹமூர்த்தியாய்த் தோன்றி

அரியை

-

(ஆச்ரிதனான ப்ரஹலாதனுக்குப்) பகைவனான இரணியனை

அழித்தவனை

-

கொன்றொழித்த பெருமானுக்கு

பந்தனை தீர

-

(அன்றைய) அனுக்கம் தீரும்படி

பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுவதும்

-

மங்களாசாஸநம் செய்வோம்.


ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - ‘‘வாழாட்பட்டு’’ என்கிற பாசுரத்தில் அநந்யப்ரயோஜநர்களான முமுக்ஷூக்களை யழைத்தாரென்றோ; அழைக்கும்போது ‘‘ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள்’’ என்று தம்முடைய பெருமையைச் சொல்லியழைத்தார்.  அப்படி அழைக்கப்பட்ட அநந்யப்ரயோஜகர்கள் ‘நாங்களும் உம்மைப் போலவே ஏழுதலைமுறையாக அடிமை செய்கிறவர்கள்’ என்று தங்களுடைய பெருமையையும், எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் பண்ணுகிறவர்களென்கிற தங்களுடைய தினசரியையும் சொல்லிக்கொண்டு வந்து சேர்ந்ததாக இப்பாசுரம் அருளிச் செய்யப்படுகிறது.

‘என் தந்தை’ என்பது எந்தையென மருவிற்று.  ஏழ்படிகால் - ‘படி’யென்பதற்கு உடம்பு என்று பொருள்; அச்சொல் தலைமுறையைக் காட்டுகிறது.  எங்களுடைய ஸந்ததியில் ஒருவர் தப்பாமல் எல்லாரும் ஆட்செய்பவர்கள் என்பதற்காக வழிவழியென்கிறார்.

(திருவோணத் திருவிழாவில் இத்யாதி) எம்பெருமான் எந்த நக்ஷத்திரத்தில் அவதரித்தாலும் அவையெல்லாம் . . . . . . . . . . . . . . . .  என்று வேதத்தில் சொன்னபடி விஷ்ணு நக்ஷத்ரமாகிய திருவோண நக்ஷத்திரத்தின் அம்சமாயிருக்கத்தக்கவை யாகையாலும், விசேஷித்துத் திருநக்ஷத்திரம் சொல்லாத அவதாரங்களுக்கெல்லாம் இதையே நக்ஷத்திரமாகக் கொள்வது உசிதமாகையாலும் ‘‘திருவோணத் திருவிழாவில் ; அரியுருவாகி’’ என்றார்.  ச்ரோணா என்னும் வடசொல் ஓணமெனத் திரிந்தது.  அரியுரு ஹிம்ஹமென்னும் பொருளதான ஹரியென்னும் வடசொல் அரியென்று விகாரப்பட்டிருக்கின்றது.  ‘‘நரஹரியாகி’’ என்னாமல் ‘அரியுருவாகி’ என்றது பிரதானமான சிரஸ்ஸு ஸிம்ஹமாயிருப்பதனாலாம்.  தூணிலே நரசிங்கமாகத் தோன்றி இரணியனைக் கொன்று ப்ரஹ்லாதனைக் காத்தருளின இதிஹாஸம் ப்ரஸித்தம்.

பந்தநா (. . . ) என்னும் வடசொல் பந்தனையெனத் திரிந்தது; அனுக்கம் என்று பொருள்.


English Translation

My father’s father’s father’s father and his grandfather before him, over seven generations have performed service to the Lord.  In the asterism of sravanam, at dusck, the Lord came as the man-lion and tore apart the foe.  End your suffering, join us! Sing ‘Many years, many thousands of years Pallandu’.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain