(3772)

உறுமோ பாவி யேனுக்கிவ் வுலகம் மூன்றும் உடன்நிறைய,

சிறுமா மேனி நிமிர்த்தவென் செந்தா மரைக்கண் திருக்குறளன்

நறுமா விரைநாண் மலரடிக்கீழ்ப் புகுதல் அன்றி அவனடியார்,

சிறுமா மனிச ராயென்னை ஆண்டா ரிங்கே திரியவே.

 

பதவுரை

சிறு மா மனிசர் ஆய்

-

வடிவில் சிறுத்து அறிவில் பெருத்தவர்களாயிருந்து கொண்டு

என்னை ஆண்டார்

-

என்னை யீடுபடுத்திக் கொண்டவர்களான

அவன் அடியார்

-

பாகவதர்கள்

இங்கே திரிய

-

இந்நிலவுலகில் இருக்க

அன்றி

-

அன்னவர்களுக்கு அடிமை பூண்டிருப்பது தவிர

இவ் வுலகம் மூன்றும் உடன் நிறைய சிறு மா மேனி நிமிர்ந்த

-

இம்மூவுலகங்களும் ஏக காலத்தில் இடமடையும் படி தனது சிறிய பெரிய திருமேனியை வளரச்செய்த

செம்தாமரை கண் எண் திருகுறளன்

-

புண்டரீகாக்ஷனாய் எனக்கினியனான ஸ்ரீவாமநனுடைய

நறு மா விரை நாள் மலர் அடிகீழ் புகுதல் பாவியேனுக்கு உறுமோ

-

மிக்க பரிமளம் வாய்ந்த திருவடித்தாமரைகளிலே சென்று சேர்தல் எனக்குத் தகுமோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் பாகவத சேஷத்வப்ரயுக்தமான ஆனந்தமானது ஐச்வர்யகைல்ல்ய போகங்களிற் காட்டிலும் மேம்பட்டது என்றார். ஐச்வர்ய கைவல்யங்களிற் காட்டிலும் விலக்ஷணமான பகவல்லாபமுண்டானாலும் இங்கேயிருந்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை செய்கையோடொவ்வாது என்கிறாப்பாட்டில். உலகமளந்த பொன்னடிக்கு நல்லரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் இங்கேயிருந்து என்னையடிமை கொண்டால் உலகமளந்தவன் திருவடிவாரத்திலே அடிமை செய்வதும் இப்புருஷார்த்த்த்தோடொவ்வாது என்கிறார்.

இம்மூவுலகங்களும் ஏக்காலத்திலே நிறையும்படியாகச் சிறிய திருமேனியைப் பெரிய திருமேனியாக்கி வளர்ந்து உலகமுழுதும் வியாபித்த செந்தாமரைக்கண்ணனுடைய திருவடிகளின்கீழேயிருந்து கைங்கரியம் செய்வதானது பாவியேனுக்கு உறுமோ? உற்றதாகுமோ? உற்றதாகாது என்றவாறு. ஏனென்னில், அவனடியார் சிறுமாமனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய, அன்றி –அதைத்தவிர்த்து, நறுமாவியை நாண்மலரடிக்கிழ்ப்புகுதல் உறுமோ? பகவானளவிலே செல்லுகை எனக்கு உறுமோ?

சீறுமாமனிசர் என்றவிடத்து பட்டருடைய இதிஹாஸம் கேண்மின், பட்டர் சிறு பிராயத்திலே ஒருநாள், ஆழ்வான் திருவாய்மொழி அநுஸந்திக்கும்போது இப்பாட்டில் சிறுமாமனிசராய் என்றதைக்கேட்டு, “சிறுமாமனிசரென்றால் சிறியராயும் பெரியராயுமுள்ள மனிசர் என்று பொருளல்லவா? ஒன்றுக்கொன்று எதிர்த்தட்டான சிறுமை பெருமை என்கிற குணங்களிரண்டும் ஒரு பொருளிடத்து ஒன்று சேர்ந்திருக்குமோ? ஆழ்வார் சிறுமாமனிசரென்று இரண்டையும் ஒருவரிடத்தே சேர அருளிச்செய்த்து பொருந்துவது எங்ஙனே? என்று திருத்தந்தையாரை வினாவினர், அதற்கு ஆழ்வான் ஆலோசித்து “பிள்ளாய்! நன்கு வினாவினாய், உனக்கு உபநயனமாகாமையால் இப்போது வேதசாஸ்திரங்களைக்கொண்டு விடைசொல்ல்லாகாது, ஆகிலும் ப்ரத்யக்ஷத்திற் காட்டுகிறோங்காண்“ என்று சொல்லச் சில பெரியோர்களைக்காட்டி, திருமேனி சிறுத்து ஞானம் பெருத்திருக்கிற சிறியாச்சான் அருளாளப் பெருமாளெம்பெருமானார் போல்வாரைச் சிறுமாமனிசரென்னத் தட்டில்லையே, முதலியாண்டான் எம்பார் முதலிய பெரியோர்கள் உலகத்தாரோடொக்க அன்னபானாதிகள் கொள்வதோடு எம்பெருமான் பக்கலீடுபடுவதிற் பரமபதத்து நிர்யஸூரிகளைப் போலுதலால் இப்படிப்பட்டவர்கள் சிறுமாமனிசரென்னத் தக்கவரன்றோ? இங்ஙனமே வடிவு சிறுத்து மஹிமை பெருத்தவர்களும், மனிதரென்று பார்க்கும்போது சிறுமை தோன்றிலும், பகவத் பக்தி ஞானம் அனுட்டானம் முதலிய நற்குணங்களை நோக்குமளவில் நித்ய முக்தர்களினும் மேன்மைபெற்று விளங்குகிறவர்களுமான மஹாபுருஷர்களையே ஆழ்வார் சிறுமாமனிசரென்று குறித்தருளினர்“ என்றருளிச்செய்ய, பட்டர் அதுகேட்டு, தகும் தகும் என்று இசைவுகொண்டனர்.

 

English Translation

Is it proper for me to join the lotus feet of the beautiful manikin with lotus eyes, -who extended his small frame and took the worlds, -when his devotees, great humble men, my masters, roam the Earth?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain