(3607)

கேட்பார்கள் கேசவன் கீர்த்தியல் லால்மற்றூம் கேட்பரோ,

கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுக ளேவையும்,

சேட்பால் பழம்பகைவன் சிசு பாலன், திருவடி

தாட்பால் அடைந்த தன்மை யறிவாரை யறிந்துமே?

 

பதவுரை

கேட்பார்

-

எம்பெருமானுடைய நிந்தைகளையேகா தாரக்கேட்கவேணுமென்கிற விருப்பமுடையவர்களுக்குங் கூட

செவி சுடு

-

கர்ணகடோரமான

கீழ்மை வசவுகளேவையும்

-

மிகத் தண்ணிய தூஷணைகளையிட்டு தூஷிக்குமவனாய்

சேண் பால் பழம் பகைவன் சிசுபாலன்

-

நெடுங்காலத்துப் பகைவனான சிசுபாலனுங்கூட

திரு அடி

-

ஸ்லாமியான கண்ண பிரானுடைய

தாள் பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்தும்

-

திருவடிகளிலே ஸாயுஜ்யம்பெற்றபடியை யறிவாரை அறிந்து வைத்தும்,

கேட்பார்கள்

-

நல்லது கேட்க வேணுமென்றிருக்குமவர்கள்

கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ

-

எம்பெருமானுடைய கீர்த்திகளை யொழிய வேறொன்று கேட்பாரோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நிச்சலும் சிந்திப்பது தவிர வேறொன்றுமறியாத சிசுபாலனையுமுட்படத் தன் திருவடிகளிலே சேர்த்துக் கொண்ட மஹாகுணத்தையறிந்தவர்கள் அப்படிப் பட்ட குணவானுடைய திருக்குணங்களையன்றோ காதாரக் கேட்கவேணுமென்கிறார்.

கேட்பார்கள் என்றது—செவிடராயிருக்கை யன்றிக்கே செவிப்புலனையுடையவர்கள் என்றபடி. கேசவன் கீர்த்தியைக் கேட்பதே காதுக்கு ப்ரயோஜனமென்ற தாயிற்று தொண்டர்க்கு  இனியானைக் கேளாச்செவிகள் செவியல்ல கேட்டாமே என்றார் திருமங்கையாழ்வாரும். காது குளிர கேட்கவேண்டிய கேசவன்கீர்த்திந்களில் ஒரு கீர்த்தியை யெடுத்துரைக்கின்றார் மேல் மூன்றடிகளில்.

எம்பெருமானை நிந்திப்பவர்கள் பலருளர் என்றாலும் சிசுபாலனைப் போல் நிந்திப்பவர்கள் இலர். அவன் நிந்திப்பது எங்ஙனேயிருக்குமென்னில்; (கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளேவையும்) இங்கே ‘கேட்பார்’ என்றதற்கு ஆசாரியர்கள் அருளிச்செய்யும் பொருள் ஆச்சரியமானது. ஈடு;-“பகவந்நிந்தைக்கு ஜீவனம் வைத்துக்கேட்கும் தண்ணியர்களுங் கூடப் பொறுக்க மாட்டாமை செவி புதைத்து இத்தனை அதிரச் சொன்னாய், இப்படி சொல்லப்பெறாய் காண், என்று சொல்லும் படியான வசவுகளே வைகை” என்பதாம். அதாவது பகவத் ஸன்னிதிகளிலே வேதபாராயணம் செய்தல் அருளிச் செயலோதுதல் மற்றும் ஸ்ரீராமாயண பகவத்கீதாதி பாராயணஞ் செய்தல் முதலானவற்றுக்காக மஹாதார்மிகர்கள் நிதியேற்படுத்தி உபகரிப்பது போலே’ பகவானை இரவும் பகலும் நிந்திப்பவர்களுக்கு நாங்கள் நிதி வைத்திருக்கிறோம்’ என்று சொல்லி மிகுந்த ஆதரத்தோடு பகவந்நமிந்தனைகளைக் கேட்பாரும் சிலர் இருக்கக் கூடுமே; அப்படிப்பட்டவர்களுங் கூடசிசுபாலன் செய்யும் பகவாநிந்தைகளைக் கேட்குமளவில் ‘அப்பப்ப! இவ்வளவு கடோரமாக நிந்திக்கை தகுதியன்று; இது எங்களாலும் கேட்கப்போகவில்லை’ என்றுசொல்லிக் காதை மூடிக் கொள்ளும்படியிருக்குமாம். அப்படிப்பட்ட கொடிய நிந்தகனாம் சிசுபாலன். அவன் இப்பிறவியில் மாத்திரமன்று பகைவனானது; மற்றும் பல ஜன்மங்களிலே இப்படிப்பகைவனாயிருந்தா னென்கிறது சேட்பால் பழம்பகைவன் என்று. ப்ரதிபவமபராத்து: என்றார் ஆளவந்தாரும். அவனுக்குங் கூட தன் திருவடிவாரத்தில் அத்தாணிச்சேவகத்தை யளித்திட்டானன்றோ அருட்கடலான எம்பெருமான். திருமழிசைப்பிரானும் திருச்சந்த விருத்தத்திலே வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர் செய்து நின்ன செற்றத்தீயில் வெந்தவர்க்கும் வந்து உனையெய்தலாகுமென்பர்’ என்றருளிச்செய்தார். சிசுபாலனிடத்தில் என்ன நன்மை கண்டு எம்பெருமான் இங்ஙனே அருள்செய்தானென்னில்; வைகிறவனுக்கும் பேர் சொல்லி வையவேணுமே; ஆகவே நாமஸங்கீர்த்தந ஸீக்ருதம் பெரியதுங் கண்டானாயிற்று எம்பெருமான்.

திருவடிதாட்பாலடைந்த—திருவடியென்றது ஸ்வாமிவாசகம் பூத்த்திருவடி தாள்கள் என்ற இராமானுச நூற்றந்தாதியுங் காண்க.

“தாட்பாலடைந்த தன்மையறிந்துமே” என்றாலே போதுமாயிருக்க, “தன்மையறிவாரையறிந்துமே” என்றது ஏதுக்காக வென்னில்; முதலடியிலே கேட்பார்கள் மற்றுங் கேட்பரோ என்று சொல்லியிருக்கையாலே, கேட்குமவர்கள் குணஜ்ஞர்களிடத்திலன்றோ கேட்கவேணும்; இப்படிப்பட்ட மஹாகுணஜ்ஞர்கள் இல்லாமற் போகவில்லையே. அன்னவர்கள் இருக்கிறார்க ளென்பதை யறிந்துவைத்தும் அவர்கள் பக்கலிலே சென்று இத்தகைய மஹாகுணங்களைக்கேளாதே மற்றுங் கேட்பரோ என்றபடி.

 

English Translation

Sisupala the arch-enemy of Krishna would utter lowly words of abuse, such as would blister the ears, yet he attained the Lord's feet. Knowing those who know this well, would anyone listen to any but Kesava's praise?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain