(3593)

ஊழிதோ றூழி யுருவம் பேரும் செய்கையும் வேறவன் வையங் காக்கும்,

ஆழிநீர் வண்ணனை யச்சு தன்னை அணிகுரு கூர்ச்சட கோபன் சொன்ன,

கேழிலந் தாதியோ ராயி ரத்துள் இவைதிருப் பேரையில் மேய பத்தும்,

ஆழியங் கையனை யேத்த வல்லார் அவரடி மைத்திறத் தாழி யாரே.

 

பதவுரை

ஊழி ஊழி தோறு

-

கல்பங்கள் தோறும்

பேரும் உருவும் செய்கையும்

-

நாமம் ரூபம் வியாபாரம் ஆகிய இவற்றை

வேறவன்

-

வேறாகவுடையனாய்க் கொண்டு

வையம் காக்கும்

-

உலகங்களைக் காத்தருள் பவனாய்

ஆழி நீர் வண்ணனை

-

கடல் வண்ணனாய்

அச்சுதனை

-

அடியார்களை ஒருகாலும் நழுவ விடாதவனான பெருமானைக் குறித்து

அணி குருகூர்சடகோபன் சொன்ன

-

நம்மாழ்வார் அருளிச்செய்த

கேழ் இல்

-

ஒப்பில்லாத

அந்தாதி ஓர் ஆயிரத்துள்

-

அந்தாதித் தொடையான ஆயிரத்தினுள்ளும்

திருப்பே ரெயில் மேய இவை பத்தும்

-

தென் திருப்பேரைப்பதி விஷயமான இப்பதிகத்தைக் கொண்டு

ஆழி அம்கையனை ஏத்த வல்லார் அவர்

-

கையுந் திருவாழியுமான எம்பெருமானைத்துதிக்கவல்லவர்கள்

அடிமை திறத்து

-

நித்ய கைங்கர்யத்திலே

ஆழியார்

-

ஆழ்ந்தவராவர்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (ஊழிதோறுலீழி.) இத் திருவாய்மொழி கற்பார்க்கு பகவத் கைங்கர்யத்திலே அவகாஹனம் பலிக்குமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். எம்பெருமானுக்கு ஸ்வத: நாமம் ரூபம் ஒன்றுமில்லையாயினும் ஆச்ரிதர்க்காக அவற்றைப் பரிக்ர ஹிப்பதுண்டே; அங்ஙனம் பரிக்ரஹிப்பதுதான் ஒவ்வொரு யுகத்திலே ஒவ்வொரு வகையாயிருக்கும். யுகந்தோறும் ஆச்ரித ரக்ஷ்ணத்துக் கீடான ரூபநாம சேஷ்டைகளை வெவ்வேறெயுடையனாய்க் கொண்டு ஜகத்தை ரக்ஷிக்குமவனான ஆழி நீர்வண்ணனை யச்சுதனைப் பற்றி ஆழ்வார் ரருளிச்செய்த ஒப்பிலாத ஆயிரத்தினுள் இவை பத்தையுங் கொண்டு ஸர்வச்வரனைத் துதிக்க வல்லவர்கள் நித்ய கைங்கர்ய ஸாம்ராஜ்யத்தில் அபிஷிக்ராவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டிற்றாயிற்று.

வியாக்கியானங்க ளெல்லாவற்றையும் ஊன்றி நோக்குமிடத்து மூன்றாமடியில் ‘மேயபத்தால்” என்கிற பாடம் சிறக்குமென்று தோன்றுகிறது. “அடிமைத் திறத்து ஆழியாரே” என்பதற்கு இரண்டு வகையான பொருள் கூறுவர்; ஆழியார்-ஆழ்ந்தவர்கள். (அல்லது) திருவாழியாழ்வானைப் போன்றவர்கள். கருதுமிடம் பொருது—கைவந்த சக்கரத்தன். என்கிறபடியே திருவாழியாழ்வான் எம்பெருமான் திருவுள்ளம் பற்றுமிடமெங்குஞ் சென்று பணிசெய்து வருமா போலே விடுத்ததிசக் கருமந் திருத்துமவர்கள் என்றபடி.

 

English Translation

This decad of the thousand songs by kurugur Satakopan, on the Lord of Tiruppereyil who takes many forms and names through countless ages every time to protect the world, -those who master it will secure the golden feet of the discus Lord

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain