(3492)

கலக்க வேழ்கட லேழ்மலை யுலகே ழும்கழி யக்கடாய்,

உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல,

வலக்கை யாழி யிடக்கை சங்கம் இவையுடை மால்வண்ணனை,

மலக்குநா வுடையேற்கு மாறுள தோவிம் மண்ணின் மிசையே?

 

பதவுரை

ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகும் கலக்க

-

ஏழுகடல்களும் ஏழுமலைகளும் ஏழுலகங்களாமெல்லாம் கலங்கும் படியாக

கழய கடாய்

-

அண்ட கடாஹத்துகு அப்பாலே போம்படி யாக நடத்தி

தேர் கொடு

-

தேரைக்கொண்டு

உலக்க சென்ற மாயமும்

-

முடியச்சென்ற ஆச்சரியமும்

உட்பட மற்றும் பல

-

இதுமுதலாக மற்றும் சேஷ்டிதங்களையும் (பேசி)

வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவை உடைமால் வண்ணனை

-

உபணஹஸ்தங்களிலும் திருவாழி திருச்சங்கையுடையனாய் நீலவண்ணனான எம்பெருமானை

மலக்கும் நா உடையேற்கு

-

ஸ்வாதீனப் படுத்திக்கொள்ளும்படியான நாவிறுபடைத்த எனக்கு

இ மண்ணின் மிசைமாறு உளதோ

-

இவ்வுலகின் எதிருண்டோ,

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (கலக்கவேழ்கடல்) வைதிகன் பிள்ளைகள் மீட்டுக்கொடுத்த தென்பது கண்ணபிரானுடைய சரிதைகளில் ஒன்று அதனை இப்பாட்டில் அநுபவிக்கிறார். ஒரு பிராமணுனுக்கு முறையே பிறந்த மூன்று பிள்ளைகள் பிறந்த அப்பொழுதே பெற்றவளுங்கூட முகத்தில் விழிக்கபெறாதபடி இன்ன விடத்திலே போயிற்றென்று தெரியாமல் காணவொண்ணாது போய் விடுகையாலே நான்காம் பிள்ளையை ஸ்த்ரீ ப்ரஸவிக்கப் போகிறவளவிலே அந்த அந்தணன் கண்ணபிரானிடம் வந்து ‘இந்த ஒரு பிள்ளையையாயினும் தேவரீர் பாதுகாத்துத் தந்தருளவேண்டும்‘ என்று ப்ரார்த்தித்தான். அதற்குக் கண்ணபிரான் அப்படியே செய்கிறேனென்று அநுமதி செய்தபின்பு, ஒரு யாகத்திலே தீக்ஷிதனாயிருந்ததனாலே எழுந்தருளக்கூடாத்துபற்றி அர்ஜுநன் ‘நான் போய் ரக்ஷிக்கிறேன்‘ என்று ப்ரதிஜ்ஞைபண்ணி, பிராமணனையுங் கூட்டிக் கொண்டுபோய் ப்ரஸவ க்ருஹத்தைச் சுற்றும் காற்றுகூட ப்ரவேசிக்க வொண்ணாதபடி சரக்கூடங்கட்டிக் காத்துக்கொண்டு நின்றான். பிறந்த பிள்ளையும் வழக்கப்படியே பிறந்தவுடனே காண்வொண்ணாது  போய்விட்டது. அதனால் மிக்க சோகமடைந்த பிராமணன் வந்து அர்ஜுநனை மறித்து, க்ஷத்ரியாதமா! உன்னாலேயன்றோ என் பிள்ளை போம்படியாயிற்று, க்ருஷ்ணன் எழுந்தருளிக் காப்பதை நீயன்றோ தடுத்தாய்‘ என்று நிந்தித்து அவனைக் கண்ணபிரானருகே இழுத்துக்கொண்டு வந்தான். கண்ணன் அதுகண்டு புன்சிரிப்புக்கொண்டு ‘அவனைவிடு, உனக்குப் பிள்ளையை நான் கொண்டு வந்து தருகிறேன்‘ என்றருளிச்செய்து, பிராமணனையும் அர்ஜுநனையும் தன்னுடன்கொண்டு தேரிலேறி, அர்ஜுநனைத் தேர் செலுத்தச் சொல்லி, அத்தேருக்கு வெளியே நெடுந்தூரமளவுங் கொண்டுபோய், அங்கு ஓரிடத்திலே தேருடனே இவர்களை நிறுத்தி, தன்னிலமான தோஜோரூப்மான பரமபத்திலே தானே போய்ப்புக்கு, அங்கு நாச்சிமார் தங்கள் ஸ்வாதந்திரியம் காட்டுகைக்காகவும் கண்ணபிரானது திவ்ய ஸௌந்தரியத்தைக் கண்டு களிக்கைக்காகவும் அழைப்பித்து வைத்த அந்தப் பிள்ளைகள் நால்வரையும் அங்கு நின்றும் பூர்வரூபத்தி ஒன்றுங் குலையாமற் கொண்டுவந்து கொடுத்தருளினன் என்ற வரலாறு அறியத்தக்கது.

இப்பாசுரத்தில் முதலடிக்குப் பலவகையாகப் பொருள் கூறுவர். கண்ணனது திருத்தேர்சென்ற காலத்தில் ஏழ்கடலும் ஏழ்மலையும் ஏழுலகங்களும் அதிர்ந்தபடியைச் சொன்னவாறு.

நம்மாழ்வார்க்குப் பராங்குசன் என்று திருநாமம். பரசமயத்தவர்களாகிற மதயானைகட்டு அங்குசம் போன்றிருந்தது பற்றிப் பராங்குசனென்று திருநாம்மாயிற்றென்று சொல்லுவதுண்டாகிலும், பரனான எம்பெருமானுக்கே அங்குசா யிருந்தவர் என்கிற பொருளே சுவைமிக்கதாகும். இப்பாசுரத்தின் பின்னடிகளில் இது ஸ்பஷ்டமாகும். “வலக்கையாழி யிடக்கைச் சங்கமிவையுடைமால் வண்ணனை மலக்குநாவுடையேன்‘ என்று செருக்குமிகுத்துக் கூறுகின்ற ஆழ்வார் தமது பராங்குசத் திருநாமத்தை விவரித்தபடியே போகலாம்.

 

English Translation

The wonder of his crossing the seven turbid oceans and the seven fall mountains, driving over the end of the seven worlds, these and many other acts of the Lord of discus-conch, -whoever speaks to me about these, can be he my enemy?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain