(3490)

மனப்பரி போட ழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து,

தனக்கு வேண்டுருக் கொண்டு தான்றன சீற்றத்தினை முடிக்கும்,

புனத்து ழாய்முடி மாலை மார்பனென் அப்பன்தன் மாயங்களே,

நினைக்கும் நெஞ்சுடை யேனெ னக்கினி யார்நிகர் நீணிலத்தே?

 

பதவுரை

தான்

-

பரஞ்சோதியுருவனானதான்

அழுக்கு மானிடசாதியில்

-

ஹேயமான மநுஷ்யஜாதியிலே

மனப் பரிப்போடு பிறந்து

-

ஸம்ஸாரிகள் விஷயமாகத் திருவுள்ளத்தில் தளர்த்தியோடே வந்து பிறந்து

தனக்கு வேண்டு உரு கொண்டு

-

தனக்கு இஷ்டமான விக்ரஹங்களைப் பரிக்கரஹித்து

தான் தன சீற்றத்தினை முடிக்கும்

-

தன்னுடைய சீற்றத்தைத் தவிர்த்துக்கொள்ளுமவனான

புனம் சூழாய் மாலை முடி மார்பன் என் அப்பன் தன் மாயங்களே

-

செவ்வித்துழாய் மாலையைத் திருமுடியிலும் திருமார்பிலுமுடையனான எம்பெருமானது ஆச்சரிய சேஷ்டிதங்களையே

நினைக்கும் நெஞ்சு உடையேன் எனக்கு

-

அநுஸந்திக்கும் நெஞ்சு படைத்த வெனக்கு

இனி நின் நிலத்து நிகர் ஆர்

-

இனி இப்பெருநிலத்தில் ஒப்பாவார் ஆர்? (ஆருமில்லை.)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (மனப்பரிப்போடு) அரக்கரசுரர் போல்வாரான விரோதிகள் பக்தவர்க்கங்களை நலியுமது பொறுக்கமாட்டாமே அழுக்கு மானிடசாதியில் வந்து பிறந்து அவர்களை அழியச்செய்யும் சேஷ்டிதங்களை நினைக்கும் நெஞ்சுடைய எனக்கு இந்நிலத்தில் நிகராவார் யாருமில்லை யென்கிறார். கீழ்ப்பாசுரங்களிலும் மேற்பாசுரங்களிலும் சிலசில சேஷ்டிதங்களை விசேஷித்து எடுத்துரைத்து அநுபவிப்பதாக அருளிச்செய்யுமிவர் இப்பாட்டில் அங்ஙனம் ஒரு சரித்திரத்தை யெடுத்துரைக்கையன்றிக்கே ஸமுதாய ரூபேண அருளிச்செய்கிறார். இப்பாட்டில் “தான் தன சீற்றத்தினை முடிக்கும்“ என்பது உயிரான வாசகம். தண்ணளியே வடிவெடுத்த எம்பெருமாலுக்கும், சீற்றமுண்டோ வென்னில், சௌர்ய வீர்ய பராக்ரமங்களென்கிற குணங்களையும் உடையவனாக ப்ரஸித்திபெற்றிருக்கின்ற பகவானுக்கு எங்ஙனே சீற்றமில்லாமலிருக்கமுடியும்?  சீற்றமுண்டானாலல்லது அக்குணங்கள் வீறுபெற வழியில்லையே. காருண்யமும் சீற்றமும் விஷயபேதத்தாலே வ்யவஸ்தைபெறும். பக்த விரோதிகள் திறத்திலே சீற்றமுண்டாகிலும் அவர்கள்மீது சிறிதும் சீற்றங்கொள்ளான், பக்தர்களிடத்திலே அபராதப்படுவார்மீது சீற்றமே வடிவெடுத்தவனாயிருப்பன்.

ஸ்ரீவசநபூஷணத்தில் “ஈச்வரன் அவதரித்துப்பண்ணின ஆனைத் தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமையென்று ஜீயரருளிச்செய்வர்“ என்றுள்ள ஸ்ரீஸூக்தி ப்ரஸித்தம். அங்கே மணவாளமாமுனிகளின் வியாக்கியான ஸ்ரீஸூக்தி – “பாகவதாபசாரம் பண்ணினால் ஈச்வரன் அஸஹமாநனாய் உசிததண்டம்பண்ணு மென்னுமத்தை ஆப்த வசநத்தாலே அருளிச்செய்கிறார் (ஈச்வரன்) என்று தொடங்கி அதாவது, ஸங்கல்பமாத்ரத்தாலே ஸர்வத்தையும் நிர்வஹிக்கவல்ல ஸர்வசக்தியான ஸர்வேச்வரன், தன்னை அழியமாறி இதர ஸஜாதீயனாய் அவதரித்துக் கைதொடனாய் நின்று செய்த ஹிரண்ய ராவணாதி நிரஸநரூப அதிமாநுஷ சேஷ்டிதங்களெல்லாம் ப்ரஹலாதன் அபசாரம் ஸஹியாமையாலே யென்று ஆப்ததமரான நஞ்சீயர் அருளிச்செய்வரென்கை“.

இத்தால், எம்பெருமான் வந்து பிறந்தது முக்கியமாக ஆச்ரித விரோதிகளைத் தன்கையாலே தானே சித்ரவதம்பண்ணித் தனது சீற்றத்தை ஒருவாறு ஆற்றிக்கொள்ளவேணுமென்று கருதியே என்று தெளிவாகின்றது. நஞ்சீயர் இங்ஙனே அருளிச்செய்த்தற்கு மூலம் இப்பாகரமே யென்னலாம். மனப்பரிப்போடு  என்றது, பக்தர்கள்படும் கஷ்டங்களைப் பொறுத்தருக்க மாட்டாமையாகிற தயாளுத்வத்தினால் என்றபடி. அழுக்கு மானிடசாதியில் தான் பிறந்து என்றவிடத்து ஈடு, - “நாட்டாரை அழுக்குடம்பு கழிக்கும் தான் கிடீர் அழுக்கு மானிடசாதியிலே வந்து பிறந்தான் பிறக்கைக்குக் கர்மம்பண்ணிவைத்தவருங்கூட அருவருக்கும் ஜன்மத்திலே கிடீர் அகர்மவயனான தான் பிறந்தது, இதுக்கடி காருண்யமிறே.“

தனக்கு வேண்டுருக்கொண்டு – எந்த எந்த காரியத்திற்கு எந்த எந்த உருவம் கொளவேணுமோ அத்தகுதியை நோக்கி மத்ஸ்ய கூர்ம வராஹ மநுஷ்யாதி யோநிகளிலே வடிவெடுக்கிறபடியைச் சொல்லுகிறது. மஹர்ஷிகளும். உலகத்தில் நம்போல்வார் பிறப்பதற்கு ஹேதுகரும்மாயிருக்கும், எம்பெருமானுடைய பிறப்புக்கு ஹேது அதுவன்று, இப்படி அவதரிப்போம் என்கிற ஸ்வேச்சையொழிய வேறு ஹேதுவில்லை. ஸம்பசுவாமி ஆத்மமாயயா * என்று தானே அருளிச்செய்தான். இங்கு ஆத்மமாய்யா என்றது ஆத்மேச்சயா என்றபடி. “மாயா வயுநம் ஜ்ஞாநம்“ என்று வைதிக நிகண்டுவாகையாலே மாயா சப்தம் ஜ்ஞாநவாசியாய் இச்சாரூபமான ஞானத்தைச் சொல்லுகிறதென்று ஆசாரியர்கள் வியாக்கியானம்பண்ணி யருளினார்கள்.

தான் தன சீற்றத்தினைமுடிக்கும் – இங்கே ஈடு – ஆச்ரிதவிரோதி போக்கினானாயிருக்கையன்றிக்கே தன் சினம் தீர்ந்தானாயிருக்கை. மாதாவானவள் ப்ரஜையை நலிந்தவர்கைளைத்தான் நலிந்து தன் சினம் தீருமாபோலே

புனத்துழாய்முடிமாலைமார்பன் – இங்ஙனே ஆச்ரித விரோதிகளை முடித்துத் தன் சினம் தீர்ந்தபின்பே எம்பெருமானுக்குத் திருத்துழாய் மாலையும் நல்தரிக்குமாயிற்று. உள் வெதுப்போடே யிருக்குங்காலத்தில் புஷ்பசந்தநாதி போக்யவஸ்துக்களிலே நெஞ்சு செல்லமாட்டாதன்றோ.

 

English Translation

Out of compassion he took birth in this filthy world of mortals. Taking the forms he chose to, he gave vent to his anger.  My Lord and father wears a crown of Tulasi flowers. My Heart remembers him in wonder; who in the world can equal me?

 

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain