(3487)

நோவ ஆய்ச்சி யுரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணைச்,

சாவப் பாலுண் டதும்ஊர் சகடம் இறச்சா டியதும்,

தேவக் கோல பிரான்தன் செய்கை நினைந்து மனம்குழைந்து,

மேவக் காலங்கள் கூடி னேன்எ னக்கு என்இனி வேண்டுவதே?

 

பதவுரை

ஆய்ச்சி நோவ

-

யசோதைப்பிராட்டியானவள் திருமேனியில் நோவுண்டாகும்படி (அல்லது, பக்தர்களின் மனம் துடிக்கும்படி)

உரலோடு ஆர்க்க

-

உரலோடு சேர்த்துப் பிணைக்க

வஞ்சம் பெண்ணை சாவ

-

வஞ்சனைசெய்யவந்த பூதனை முடியும்படியென்ன

பால் உண்டதும்

-

அவளது முலைப்பாலை உண்டதென்ன

ஊர் சகடம் இறசாடியதும்

-

(அஸுராவேசத்தாலே) ஊர்ந்துவந்த சகடம் பொடிபடும்படி தகர்த்ததென்ன (ஆக இப்படிப்பட்ட)

தேவக் கோலம் பிரான் தன் செய்கை

-

அப்ராக்ருத திவ்யமங்கள விக்ரஹனான கண்ணபிரானுடைய செயல்களை

நினைந்து

-

அநுசந்தித்து

மனம் குழைந்து

-

நெஞ்சு நெகிழ்ந்து

மேவ

-

பொருந்தும்படி

காலங்கள் கூடினேன்

-

காலங்கள் பலிக்கப்பெற்றேன்

எனக்கு

-

இங்ஙகனே பாக்கியம் பெற்ற எனக்கு இனிவேண்டுவது என்

இனிப்பெறவேண்டுவதொன்றுண்டோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (நோவவாய்ச்சி) இங்கே நம்பிள்ளை யீடு – “ஜீயர் இப்பாட்டை இயலருளிச்செய்யப் புக்கால் நோவ என்றருளிச் செய்யுமழகுகாணும். நேரவ்வென்கிறார்காணும் ஆழ்வார் திருமேனியிலே கயிறு உறுத்தினாற்போலே!

யசோதைப்பிராட்டியானவள் கண்ணனை உரலோடே கட்டிவைக்க அப்போது எங்கியிருந்தபடியைச் சொல்லுகிறது. * அஞ்சவுரப்பாளசோதை ஆணாடவிட்டிட்டிருக்கும் * என்னும்படியான யசோதைப்பிராட்டியானவள் கண்ணபிரானுடைய திருமேனியிலே நோவு உண்டாகும்படி ஒரு காரியஞ் செய்ய ப்ரஸிக்தியில்லையாயிருக்க, இங்கு நோவ என்றது – இச்செயலை அநுஸந்திப்பவர்களின் உள்ளம் நோவ என்றபடி. ஆழ்வான் அதிமாநுஷஸ்தவத்தில் – ப்ரேம்ணாத தாமபரிணாமஜுஷா பபந்த தாத்ருங் ந தே சரிதம் ஆர்யஜநாஸ் ஸஹந்தே என்றருளிச்செய்தது இங்கு அநுஸந்தேயம்.

உரலோடார்க்க இரங்கிற்றும் – கண்ணனை உரலோடு கட்டுவதனாலே அவனுக்கு ஸந்தேஷமா ஸங்கடமா? என்பது ஒரு ஆராய்ச்சி. ஸந்தோஷமே தவிர ஸங்கடமில்லை யென்று ஆசாரியர்களின் நிர்வாஹம். பட்டர் திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கும்போது ஒரு ஸ்வாமி வந்து “அடியேனுக்கு ஒருரு திருவிருத்தம் பொருளருளிச் செய்யவேணும்“ என்று ப்ராத்திக்க “நம்பெருமாளைப் பிரிந்த துயரத்தினால் எனக்கொன்றும் சொல்லப்போகிறதில்லை, நஞ்சீயா பக்கலிலே கேட்டுக்கொள்ளும்“ என்று சொல்லி நஞ்சீயர்க்கு நியமிக்க, சீயரும் பொருளருளிச்செய்து வருகையில் (86) * அடைக்கலத்தோங்கு கமலத்து என்ற பாசுரத்தில் “வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன்தாம்புகளால் படைக்கலந்தானை“ என்றவிடத்திலே “புடைக்க நஞ்சீயர் பொருளுரைக்க, பட்டர் அதுகேட்டு, ‘ஜீயா! அலந்தானை என்ற பாடத்திற் காட்டிலும் ‘அலர்ந்தானை‘ என்ற பாடம் ஆழ்வார் திருவுள்ளத்திற்கு மிகப்பொருந்தும் போலே இன்று தோன்றுகின்றது‘ என்றருளிச்செய்தாராம். (இதன் விவரணம்).

கண்ணபிரான் வெண்ணெய்களவு செய்கிற தன்னை யசோதைப்பிராட்டி அடிக்கடி தாம்பினால் கட்டி வருத்துகின்றாளென்று வீட்டிலுள்ள கயிறுகளைத் துண்டுதுண்டாக அறுத்து வைக்திட்டு பின்னே களவு செய்யப்புகுவான், அவள் இவனை ஒரு கையிலே பிடித்துக்கொண்டு கயிறுதேட, அவை துண்டுதுண்டாக இருப்பதுகண்டு அவற்றை ஒன்றோடொன்று முடினுடம்புக்கு எட்டம் போராதபடியான அக் கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்ட முடியாதபடி ஆச்ரிதபாரதந்திரியம் முதலிய சீலங்களை வெளியிடுதற்கென்றே பரத்நிலையைத் தவிர்ந்து மநு ஷ்யஸஜாதீயனாக அவதரித்திருக்கிற தான் உரலோடு கட்டுண்டு அடியுண்டிருக்கை முதலான இவ்வகைகளால்தான் அக்குணங்களை விளங்கச் செய்துகொள்ள வேணுமென்று கொண்டு ஒரு சுற்றுக்குப் போராத தாம்பு இரண்டு மூன்று சுற்றுக்குப் போரும்படி உடம்பைச் சுருக்கியமைத்துக்கொண்டு “கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்“ என்னும்படியாவான், இங்ஙனே நம்முடைய ஸௌலப்ய குணங்கள் விளங்கப்பெற்றோமே! அவதார ப்ரயோஜனம் நன்கு நிறைவேறப் பெற்றதன்றோ என்று முகமலர்ச்சியடைந்திடுவன் என்பது ஆசாரியர்கள் கண்டறிந்த கருத்து. உண்மை இங்ஙனேயிருக்க “உரலோடார்க்க இரங்கிற்றும்“ என்றது ஏன்? என்னில், * மச்சொடு மாளிகையேறி மரதர்கள் தம்மிடம்புக்குக் கச்சொடு பட்டைக்கிழித்துக் காம்பு துகிலவைகீறி நிச்சலுந்தீமைகள் செய்து திரிவதையேபோது போக்காக் கொண்ட தான் மேன்மேலும் துருதுருக்கையாய் ஓடித்திரித்தலைந்து தீம்புகள் செய்வதற்கு அவகாசமில்லாதபடி சற்றுப்போது கட்டுண்டிருக்க வேண்டியதாயிற்றே! என்கிற ஸங்கடமே யல்லது வேறில்லை யென்க.

வஞ்சப்பெண்ணைச் சாவப்பாலுண்டது – கண்ணனைக் கொல்லுமாறு கம்ஸனால் ஏவப்பட்ட அசுர்வர்க்கங்களில் ஒருத்தியான பூதனை நல்ல பெண்ணுவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக்கொண்டிருந்த கிருஷ்ண சிசுவை யெடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையைக்கொடுத்துக் கொல்ல முயல பகவானான குழந்தை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப்பிடித்துப் பாலுண்ணுகிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி இறக்கும்படி செய்தமை யறிக.

ஊர்சகடமிறச்சாடியது – நந்தகோபர் திருமாளிகையிலே ஒரு வண்டியின் கீழ்புறத்திலே கண்ணனைத் தொட்டிலிலிட்டுக் கண்வளர்த்தி யசோதை யமுனை நீராடப் போயிருந்தகாலத்து, கம்ஸனாலேவப்பட்ட அஸுரனொருவன் அந்த வண்டியில் வந்து ஆவேசித்து மேல்விழுந்து கொல்ல முயன்றதை பறித்த கண்ணன் பாலுக்கு அழுகிற பாவனையில் தன் சிறிய திருவடிகளை மேலே தூக்கி யுதைத்து அச்சகடத்தைச் சின்னபின்னமாக்கினமை யறிக. ஊர்சகடம் – வினைத்தொகை ஊர்கின்ற சகடமென்க. “மலைபோலோடுஞ் சகடத்தை“ என்றார் திருமங்கை யாழ்வார்.

இத்தகைய சேஷ்டிதங்களை அநுஷந்தித்து அகவாய் உடைகுலைப்பட்டு அந்நய ப்ரயோஜநனாய்க்கொண்டு காலம் போக்கப்பெற்றேன், இதனால் நான் அவாப்த ஸமஸ்தகாமனானேன் என்றராயிற்று.

 

English Translation

Oh, how he wept when Yasoda tied him to the mortar! He drank from the poisoned breasts of putana and dried her to the bones.  He destroyed the cart with his foot.  My heart melts to think of him. My days are spent lovingly, now what on Earth do I need?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain