எட்டாந் திருமொழி
(1018)
கொங்கலர்ந்தமலர்க்குருந்தமொசித்த கோவலனெம்பிரான்,
சங்குதங்குதடங்கடல்துயில்கொண்ட தாமரைக்கண்ணினன்,
பொங்குபுள்ளினைவாய்பிளந்த புராணர்த்தம்மிடம், பொங்குநீர்ச்
செங்கயல்திளைக்கும்சுனைத் திருவேங்கடமடை நெஞ்சமே.
(1019)
பல்லியாவதுபாற்கடலரங்கம் இரங்கவன்பேய்முலை,
பிள்ளையாயுயிருண்டவெந்தை பிரானவன்பெருகுமிடம்,
வெள்ளியான் கரியான் மணிநிறவண்ணனென்றெண்ணி, நாடொறும்
தெள்ளியார்வணங்கும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே.
(1020)
நின்றமா மருதிற்றுவீழ நடந்தநின்மலன்நேமியான்,
என்றும்வானவர்க்கைதொழும் இணைத்தாமரையடியெம்பிரான்,
கன்றிமாரிபொழிந்திடக் கடிதானிரைக்கிடர் நீக்குவான்,
சென்றுகுன்றமெடுத்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே.
(1021)
பார்த்தற் காயன்றுபாரதம்கை செய்திட்டு வென்றபரஞ்சுடர்,
கோத்தங்காயர் தம்பாடியில் குரவைபிணைந்தவெங்கோவலன்,
ஏத்துவார்த்தம்மனத்துள்ளான் இடவெந்தைமேவியவெம்பிரான்
தீர்த்தநீர்த்தடஞ்சோலைசூழ் திருவேங்கடமடைநெஞ்சமே.
(1022)
வண்கையான வுணர்க்குநாயகன் வேள்வியில் சென்றுமாணியாய்,
மண்கையா லிரந்தான் மராமரமேழு மெய்தவலத்தினான்,
எண்கையா னிமயத்துள்ளான் இருஞ்சோலை மேவியவெம்பிரான்,
திண்கைம்மா துயரதீர்த்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே.
(1023)
எண்டிசைகளு மேழுலகமும் வாங்கிப் பொன்வயிற்றில்பெய்து,
பண்டோரா லிலைப்பள்ளி கொண்டவன் பான்மதிக்கிடர்த்தீர்த்தவன்,
ஒண்டிறல வுணனுரத்துகிர் வைத்தவன் ஒள்ளெயிற்றொடு
திண்டிற லரியாயவன் திருவேங்கடமடைநெஞ்சமே.
(1024)
பாருநீரெரிகாற்றினொடு ஆகாசமுமிவையாயினான்,
பேருமாயிரம் பேசநின்ற பிறப்பிலிபெருகுமிடம்,
காரும்வார்ப்பனிநீள்விசும்பிடைச் சோருமாமுகில்தோய்தர,
சேரும்வார்ப்பொழில்சூழ் எழில்திருவேங்கடமடைநெஞ்சமே.
(1025)
அம்பரமனல்கால்நிலம் சலமாகிநின்றவமரர்க்கோன்,
வம்புலாமலர்மேல் மலிமட மங்கை தன்கொழுநனவன்,
கொம்பினன்னவிடை மடக்குறமாதர் நீளிதணந்தொறும்,
செம்புனமவைகாவல்கொள் திருவேங்கடமடைநெஞ்சமே.
(1026)
பேசுமிந்திருநாமமெட்டெழுத்தும் சொல்லிநின்று, பின்னரும்,
பேசுவார்த்தம்மையுய்யவாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம்,
வாசமாமலர்நாறுவார் பொழில்சூழ்தருமுலகுக்கெல்லாம்,
தேசமாய்த்திகழும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே.
(1027)
செங்கயல்திளைக்கும் சுனைத் திருவேங்கடத்துறைசெல்வனை,
மங்கையர்த்தலைவங்கலிகன்றி வண்டமிழ்ச்செஞ்சொல்மாலைகள்,
சங்கையின்றித்தரித்துரைக்கவல்லார்கள் தஞ்சமதாகவே,
வங்கமாகடல்வையம்காவலராகி வானுலகாள்வரே.