(3126)

ஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலகத் தெவ்வெவையும்,

சாதுவாய் நின்புகழின் தகையல்லால் பிறிதில்லை,

போதுவாழ் புனந்துழாய் முடியினாய், பூவின்மேல்

மாதுவாழ் மார்ப்பினாய். என்சொல்லியான் வாழ்த்துவனே?

 

பதவுரை

ஓதுவார் ஒத்து எல்லாம்

-

அந்யயனம் செய்கிறவர்களை விட்டு நிரூபிக்கப்படுகின்ற ஸகல வேதங்களும்

எவ்வுலகத்து எவ் எவையும்

-

மற்றும் பலவுலகங்களிலுமுண்டான பலவகைப்ப்ட சாஸ்திரங்களும்

சாது ஆய்

-

(பொய் கலவாமல்) உள்ளபடியே சொல்லுகின்றனவாகி

நின் புகழின் தகை அல்லால்

-

உன்னுடைய குணநீர்த்தனத்தில் தத்பரங்கள் என்கிற இவ்வளவல்லாமல்

பிறிது இல்லை

-

வேறில்லை, ஒன்றையும் பூர்த்தியாகச்சொல்லனவல்ல என்றபடி

போது வாழ்புனம்

-

பூக்கள் விளங்கப்பெற்ற நல்ல நிலத்திலுண்டான

துழாய் முடியினாய்

-

திருத்துழாய் மாலையைத் திருமுடியிலணிந்துள்ளவனே!

பூவின் மேல் மாதுவாழ் மார்பினாய்

-

தாமரைப்பூவில் தோன்றிய பெரிய பிராட்டியார் வாழுமிடமான திருமார்பையுடையவனே!

என் சொல்லி

-

எத்தைச்சொல்லி

யான் வாழ்த்துவன்

-

நான் துதிப்பேன்!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- - எம்பெருமானைத் துதிக்க அவதரித்த வேதங்களும் பகவத்குண கீர்த்தனத்தில் அந்வயம் பெற்றவத்தனையே யொழிய வேறில்லை; ஆக, வேதங்களின் கதியே அதுவாகும்போது; நான் பேசித் தலைக்கட்டுவதென்று ஒன்றுண்டோ என்கிறார். (ஓதுவாரோத்து) ஒத்து என்று வேதத்திற்குப் பெயர்; ஓதுவார்களையிட்டு நிரூபிக்கப்படுவன வேதங்கள்; (எங்ஙனே யென்னில்;) ஆதர்வணம், தைத்திரீயம், காண்வம், என்று வ்யபதேசங்கள் விளைந்திருப்பதானது ஓதுவார்களையிட்டு வந்ததன்றோ, ஆசார்ய ஹ்ருதயத்தில்- “வேதம் ஒதுவாரோத்தாகையாலே ஆதர்வணாதிகள் போலே இதுவும் பேர்பெற்றது” என்றவிடமும் அவ்விடத்து வியாக்கியமான ஸ்ரீஸூக்தியும் காணத்தக்கன.

எவ்வுலகத்து எவ்வெவையும் = ப்ரமாணங்களான சாஸ்த்ரங்கள் இந்நிலவுலகத்தில் இருப்பதுபோல் மற்றும் பல வுலகங்களிலுமுண்டே; ஸ்வர்க்கலோகத்திலும் ப்ரஹ்ம லோகத்திலும் ஆங்காங்குள்ளாருடைய ஞான வளவுக்குத் தக்கபடியே. பிரமாணங்கள் பரந்திருக்கும். ஸ்ரீராமாயணமென்கிற ஒரு க்ரந்தத்தை யெடுத்துக் கொள்வோம்; இது இவ்வுலகில் ஸங்கிரஹப்படியாயும், ப்ரஹ்மலோகத்தில் விஸ்தாரப்படியாயு மிருப்பது ப்ரஸித்தம். இங்ஙனமே மற்றுங் காண்க. ஆக இப்படிப்பட்ட ச்ருதீதிஹாஸ புராணாதிகள் யாவும் (சாதுவாய் நின்புகழின் தகையல்லால் பிறிதில்லை) உன்னுடைய புகழை வர்ணிப்பதில ஸம்பந்தப்பட்டிருக்கின்றன என்பது தவிர வேறில்லை; ஒரு குணத்தையும் முற்றமுடியச்சொன்னபாடில்லை என்றவாறு. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்; - “உன்னுடைய கல்யாண குண விஷயமான வித்தனை போக்கிப் புறம்பு போயிற்றில்லை. விஷயந்தன்னை எங்கு மொக்க விளாக்குலை கொண்டதுமில்லை.”

பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில்- “*ஆம்நாயாநாம் அஸீம்நாமபி ஹரிபவே வர்ஷபிந்தோ நிவாப்தென ஸம்பந்தாத் ஸ்வாத்மலாபோ நது கபளநதா” என்றருளிச் செய்தது இங்கே அநுஸந்தேயம். (இதன் கருத்தாவது-) மேகமானது மற்ற விடங்கடலுக்குச் சிறிதும் ஆதிக்ய முண்டாவதில்லை; பின்னை என்னென்னில்; மண்ணிலே மழை பெய்தால் அந்த மழைத் துளியானது ஸ்வஸ்ரூபங்கெட்டு மண்ணாய்ப்போகிறது; அதுவே கடலிற் பெய்தால் அப்படி உரு மாறாதே ஸ்வரூபலாபத்துடனே கிடக்கிறது. அதுபோல, எல்லாவாக்குகளும் பகவத் வைபவம் தவிர மற்ற விஷயங்களில் சென்றால் ஸ்வரூபம் குலைந்து கெடும்; பகவத்வைபவத்தைப் பேசப்புகுந்தால் ஸ்வரூபம் நிறம் பெற்றிருக்கும் என்கிற இவ்வளவேயன்றி, பகவத் வைபவத்தைக் கபளீகரிக்கை வேதங்களுக்கும் அஸாத்யம் என்றவாறு.

(போதுவாழ் இத்யாதி) திருத்துழாய்மாலை முதலியவற்றாலுண்டான அழகைப் பற்றியோ திருமார்பிலே பிராட்டி திகழ்வதனாலுண்டான அழகைப்பற்றியோ யாதும் யான் பேசத் திறமையுடையேனல்லேன் என்றபடி.

 

English Translation

Even the scriptures and whatever else the world reads, do but speak of your glory only in part.  Lord of Tulasi crown and lotus chest!  O How can I praise you enough?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain