(3123)

பரஞ்சோதி. நீபரமாய் நின்னிகழ்ந்து பின், மற்றோர்

பரஞ்சோதி யின்மையில் படியோவி நிகழ்கின்ற,

பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த,எம்

பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே.

 

பதவுரை

பரம் சோதி

-

பரஞ்சோதியான பெருமானே!

நீ பரம் ஆய்

-

நீயே ஸர்வோத் க்ருஷ்டனாயிருக்க

நின் இகழ்ந்து பின்

-

உன்னைத்தவிர

மற்று ஓர் பரம் சோதி இன்மையின்

-

வேறொரு பரஞ்சுடர் இல்லாமையாலே

படி ஓவி நிகழ்கின்ற

-

உபமான மில்லாதபடி யிருக்கின்ற

பரம் சோதி நின்னுள்ளே

-

‘பரம் ஜ்யோதிஸ்’ என்று உபநிஷத்துக்களில் ஒதப்பட்டுள்ள உன்னுடைய ஸங்கல்பத்துக்குள்ளே

படர் உலகம் படைத்த

-

விசாலமான உலகங்களைப் படைத்த

எம் பரம் சோதி

-

எம்பரஞ்சுடருடம்பனே!

கோவிந்தா

-

நீர்மைக்கு எல்லை யில்லாதவனே!

பண்பு

-

உனது ஸ்வரூப ஸ்வபாவங்களை

உரைக்க மாட்டேன்

-

வருணிக்க சக்தனல்லேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- - ஆழ்வீர்! உலகர் ஒட்டுரைத்துக் பேசுவதெல்லாம் எனக்கு நிறக்கோடாக முடிகின்றதேயன்றிப் புகழ்ச்சியாக ஆகின்றதில்லை யென்கிறீர்; *மயர்வற மதிநலமருளப் பெற்ற நீர் அழகாகப் பேசலாமன்றோ; எனக்கு நிறக்கோடாகாதபடிக்கு நீர் பேசலாமே என்ன; என்னாலுமாகாதென்கிறார்.

உலகில், வடிவழகிலோ செல்வத்திலோ சிறிது ஏற்றமுடைய ஒருவனைக் கண்டால் ‘அப்பா! உன்னைப்போன்ற தேஜஸ்வி ஒருவனில்லை; உன்னைப்போன்ற செல்வன் எங்குமில்லை’ என்று புகழ்வது உலக வியற்கையாக உள்ளது; அப்படி யல்லாமல் ‘எந்த வுலகத்திலும் எந்த வ்யக்தியிடத்திலும் இப்படிப்பட்ட தேஜஸு இல்லை’ என்று திண்ணமாய்ச சொல்லும்படியாகத் தேஜ : பூர்த்தியுள்ளது தேவரீர் பக்கலிலே யாகையாலே ஒப்புயர்வற்ற பரஞ்சோதியாயிருக்கின்றீர்; உலகங்களையெல்லாம் ஸ்ங்கல்ப ஏகதேசத்திலே ஸ்ருஷ்டித்து, அப்படி ஸ்ருஷ்டிக்கப்பட்ட லோகத்தினுடைய ஸ்வபாவம் தேவரீர்க்குத் தட்டாதபடி நிற்கிற தேஜோநிதியே! கோவிந்தனான நீர்மைக்கு எல்லை காணவொண்ணாபடி யிருக்கிற பரம ஸுல்பனே! எந்தக் குணந்தான் என்னாற் சொல்லாலாகும்? மேன்மைக்கு எல்லை கண்டாலும் நீர்மை தரை காணவொண்ணாமேயிரா நின்றதே! எதுவும் அநுபவித்துப்போமித்தனை யொழிய, பாவியேன் வாய் கொண்டுபேச நிலமாக இல்லையே! என்று தவிக்கிறார்.

இங்கு ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்: - “நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெயூணென்னுமீனச் சொல்* என்று நெஞ்சால் நினைக்க வொண்ணாதது சொல்லத்தானே போகாதிறே.”

 

English Translation

Effulgent Lord most high!  You made the Universe!  Another effulgent Lord as you, I do not see.  So with nothing to compare you by, I fall back mute. O, Govinda my Lord!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain