(2445)

போதான இட்டிறைஞ்சி ஏத்துமினோ, பொன்மகரக்

காதானை யாதிப் பெருமானை,- நாதானை

நல்லானை நாரணனை நம்மேழ் பிறப்பறுக்கும்

சொல்லானை, சொல்லுவதே சூது.

 

பதவுரை

பொன் மகரம் காதானை

-

அழகிய மகர குண்டலங்களைத் திருக்காதுகளில் அணிந்துள்ளவனும்

ஆதி

-

ஜகத்காரண பூதனும்

பெருமானை

-

பெருமை பொருந்தியவனும்

நாதனை

-

(அனைவர்க்கும்) நாதனாயிருப்பனும்

நல்லானை

-

(ஆச்ரிதர் பக்கல்) வாத்ஸல்ய முடையவனும்

நாரணனை

-

நாராயணனென்று ப்ரஸித்தி பெற்றவனும்

நம் ஏழ்பிறப்பு அறுக்கும் சொல்லானை

-

நம்முடைய ஜன்ம பரம்பரைகளை அறுக்கவல்ல திருநாமங்களை யுடையவனுமான ஸர்வேச்வரனைக் குறித்து

போது ஆன இட்டு இறைஞ்சி ஏத்துமின்

-

புஷ்பமென்று பேர் பெற்றவற்றை ஸமர்ப்பித்து வணங்கித் துதி செய்யுங்கள்

சொல்லுவதே

-

(அவனுடைய திருநாமங்களை வாயாரச்) சொல்லித் துதிப்பதே

சூது

-

நல்ல வாய்ப்பு

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தம்முடைய காலக்ஷேபக்ரமத்தை யருளிச்செய்தார் கீழ்ப்பாட்டில். பிறர்க்குக் காலக்ஷேப க்ரமமுபதேசிக்கிறா ரிப்பாட்டில். எம்பெருமான் திருவடிகளில் புஷ்பங்களைப் பணிமாறுவதும் அவனது திருநாமங்களைச் சொல்லி யேத்தி யிறைஞ்சுவதுமே உங்கட்குப் போதுபோக்காகக் கடவதென்கிறார்.

‘போதுகளை யிட்டிறைஞ்சி‘ என்னாமல் ‘போதான விட்டிறைஞ்சி‘ என்றதன் கருத்து யாதெனில், எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க வேணுமென்கிற சுத்தபாவத்துடனே கொள்ளுகிற புஷ்பம் எதுவாயினுங் குற்றமில்லை, ‘செண்பக மல்லிகைமொரு பூவாயிருக்கலாம் என்பதாம். பெரியவாச்சான் பிள்ளையும் இவ்விடத்து வியாக்கியானத்தில் – “இன்ன புஷ்பமென்று நியதியில்லை, பூவானதை யெல்லாவற்றையுங்கொண்டு திருவடிகளிலே ஸமர்ப்பித்து வணங்கி ஸ்தோத்ரம் பண்ணுங்கோள்“ என்றருளிச்செய்தது காண்க. இதனால், இன்ன பூ என்று நிர்ப்பந்த மில்லாமையால் பூவென்று பேர்பெற்றிருக்கு மத்தனையே வேண்டுமென்றதாயிற்று. திருவாய்மொழியில் (1-6-1) “பரிவதிலீசனைப் பாடி விரிவது மேவலுறுவீர், பிரிவகையின்றி நன்னீர்தூய்ப் புரிவதுவும் மேவலுறுவீர், பிரிவகையின்றி நன்னீர்தூயப் புரிவதும் புகைபூவே“ என்ற பாசுரத்தை ஸ்ரீபட்டர் உபந்யஸிக்கும் போது “புரிவதுவும் புகைபூவே“ என்ற சப்த ஸ்வாரஸ்யத்தைத் திருவுள்ளம்பற்றி ‘இவ்விடத்தில் அகில்புகையென்றாவது, கருமுகைப்பூ என்றாவது சிறப்பித்துச் சொல்லாமையாலே ஏதேனும் ஒரு புகையும் ஏதேனுமொருபூவும் எம்பெருமானுக்கு அமையும், செதுயிட்டுப் புகைக்கலாம், கண்ட காலிப்பூவும் சூட்டலாம்‘ என்று உபந்யஸித்தருளினராம், அதை நஞ்சீயர் கேட்டு “ந கண்ட காரிகா புஷ்பம் தேவாய விநிவேதயேத்“ (கண்டகாலிப்பூவை எம்பெருமானுக்குச் சாத்தலாகாது) என்று சாஸ்த்ரம் மறுத்திருக்க, இப்படி அருளிச்செய்த ரஸோக்தி – ‘சாஸ்த்ரம் மறுத்தது மெய்தான், கண்டகாலிப்பூ எம்பெருமானுக்கு ஆகாதென்று மறுக்கவில்லை, அடியார்கள் அப்பூவைப்பறித்தால் கையில் நிஷேதித்ததேயன்றி எம்பெருமானுக்கு ஆகாத பூ எதுவுமில்லை, என்றாம். திருவாய்மொழிக்குப் பதினெண்ணாயிரமுரைத்த பரகால ஸ்வாமி இந்த ஸம்வாதத்தைக்கொண்டு ரஸியாமல் திரஸ்கரித்துரைத்தது கிடக்க. “***“ (பக்தி எல்லை கடந்தால் நூல்வரம்பில்லை) என்றதையும் அருளிச்செயல் தொடையழகையும் நோக்கி ரஸப் பொருளுரைத்தவற்றில் குதர்க்கவாதஞ்செய்கை விவேகிகட்குப் பணியன்று. பொன்மகரக் காதானை – மகரமென்றது மரக்குழைக்கு ஆகுபெயர். சுறாமீன் வடிவமாகச் செய்யப்படுவதோர் காதணி மகரகுண்டல மெனப்படும்.

நாதானை.... ‘நாதனை‘ என்பதன் நீட்டல். * செய்யுள் வேண்டுழி வந்த விகாரம்.

நம்மேழ்பிறப்பறுக்குஞ் சொல்லானை – ஒன்றின்பின் ஒன்றாக இடையறாது நிகழ்ந்து செல்கின்ற நமது ஜன்மங்களைப் போக்கவல்ல திருநாமங்களையுடையவன் எம்பெருமான். ‘ஏழ்பிறப்பு‘ என்பதற்குப் பலவகையாகப் பொருள்கூறுவதுண்டு. கர்ப்பவாஸஞ் செய்யும் கஷ்டம், கர்ப்பத்தினின்று வெளிப்படுங் கஷ்டம், பல பிணிகளை யநுபவிக்குங் கஷ்டம், கிழத்தன மநுபவிக்குங்கஷ்டம், மரண வேதனைகள் படுங்கஷ்டம், மரணமடையுங் கஷ்டம், நரகயாதனைகளை யநுபவிக்குங் கஷ்டம் ஆகிய ஏழுவகைக் கஷ்டங்களுக்குக் காரணமாகிய பிறப்பு என்பர் சிலர் 1. “பெருங்களிற்று வட்டம், பெருமணல் வட்டம், ஏரியின் வட்டம் புகையின் வட்டம், இருளின் வட்டம் பெருங்கீழ் வட்டம், அரிபடை வட்டமென்றெழுவகை நரகம்“ என்னப்பட்ட ஏழு நரகங்களிலும் புகுவதற்கு ஏதுவான பிறப்பு என்பர் சிலர். ‘ஏழு‘ என்றது உபலக்ஷணமாய்ப் பலவகைப் பிறப்புகளென்றபடி என்பர் சிலர். மற்றும் பல வகைகளுங் காண்க. ஏழுவகைத்தோற்றத் தின்னாப்பிறப்பின்“ “ஏழுபிறப்பி லடியவரை யெழுதாப் பெரியபெருமானை“ (திருவரங்கக்கலம்பகம்) என்றவையுங் காண்க. சூது – உற்றது.

 

English Translation

Worship with flowers the first Lord Narayana, who wears golden Makara earnings. He is the master, the good one.  His name alone breaks the cords of rebirths through seven lives, Recliting his name is our only means of release.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain