(2443)

திருநின்ற பக்கம் திறவிதென் றோரார்,

கருநின்ற கல்லார்க் குரைப்பர்,- திருவிருந்த

மார்பன் சிரீதரன்றன் வண்டுலவு தண்டுழாய்,

தார்தன்னைச் சூடித் தரித்து.

 

பதவுரை

திரு இருந்த மார்வன்

-

பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கப்பெற்ற திருமார்வை யுடையனாய் (அதனாலே)

சிரீதரன் தன்

-

‘ஸ்ரீதரன்‘ என்று திருநாமம் பெற்றவானான எம்பெருமானுடைய

வண்டு உலவு தண் துழாய் தார் தன்னை

-

வண்டுகளுலாவப் பெற்ற குளிர்ந்த திருத்துழாய் மாலையை

சூடி

-

தலைக்கு அலங்காரமாக அணிந்து

தரித்து

-

அதனால் ஸத்தை பெற்று,

திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்

-

‘பிராட்டி பொருந்தியிருக்கப்பெற்ற வலப்பக்கத்தை யுடைய வஸ்துவே பரதத்துவம்!‘ என்று துணிந்தறியமாட்டாதவர்கள்.

கரு நின்ற

-

(தங்களைப்போலே) கர்ப்பவரஸம் பண்ணிப் பிறக்கின்ற சிலரை

கல்லாக்கு உரைப்பர்

-

(பரதெய்வமாக) மூடர்களுக்கு உபதேசிப்பர்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இவ்வுலகத்துச் சிலர், தேவிற் சிறந்த தெய்வம் திருமாலே யென்று அறியமாட்டாமல், தங்களைப்போலவே பிறப்பதும் இறப்பதுமான சிலரைப் பரதெய்வமாகத் தாங்கள் கொள்வதல்லாமல் இந்த அநர்த்தமான அர்த்தத்தைப் பிறர்க்கும் உபதேசிக்கின்றார்களே! என்று வருந்துகின்றார்.

முன்னம் பின்னடிகளை அந்வயித்துக்கொண்டு, பின்னர் முன்னடிகளை அந்வயித்துக்கொள்க. திருமாலின் தேன்மிக்க திருத்துழாய்மாலையை அணிந்து கொள்ளப்பெற்றால் ‘லக்ஷ்மீபதியான வஸ்துவே சிறந்த தெய்வம்‘ என்று அறியலாகும், அங்ஙனம் * திருவிருந்த மார்வன் சிரீதரன்றன் விண்டுலவு தண்டுழாய்த்தார் தன்னைச் சூடப்பெறாமையினாலே திருநின்றபக்கம் திறவிதென்று உணரபெற்றிலர் என்ற கருத்தை உய்த்துணரவேண்டும். “நூல்களைக் கற்று உணராதவர்கள்“ என்ற சொல் தொடர்க்கு – நூல்களைக் கற்றிலராதலால் அறிவு பெறாதவர்கள் என்று பொருள் கொள்வது போல இங்குக்கொள்க.

“திருநின்ற பக்கம் திறவிது என்ற இவ்வருளிச்செயலைத் திருவுள்ளம்பற்றியே பட்டர் ஸ்ரீகுணரத்ந கோசத்தில் “***“ –அபாங்கா பூயாம்ஸோ யதுபரி பரம் ப்ரஹ்ம ததபூத்“ என்றருளிச் செய்தனரென்னலாம். (பிராட்டியின் நிரம்பிய கடாக்ஷம் பட்ட வஸ்து பரப்ரஹ்மமாய் விட்டது என்பது இதன் கருத்து.)

“கருநின்ற“ என்றது பெயரெச்சமென்று, இரண்டாம் வேற்றுமை யுருபு தொக்கிய வினையாலணையும் பெயர், கருநின்றவர்களை என்றபடி. கர்ப்பப்பையில் தங்கிப் பிறப்பது மிறப்பது மானவர்களை என்கை. இப்படிப்பட்டவர்களைப் பரதெய்வமென்று கற்றுணர்ந்த பெரியோர்களிடத்துக் கூறினால் அவர்கள் முகம்சிதறப் புடைப்பர்களாதலால் அன்னவர்களிடத்து வாய் திறவாமல் கல்லார்க் குரைப்பராம்.

 

English Translation

Those who do not wear the bee-humming Tulasi garland worn by the Lord-with-Sri-on-his-chest, and realise that the side right that Sri sits on is the right side to be.  will forever remain ignorant and birth-ridden.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain