(2437)

அவரிவரென் றில்லை அனங்கவேள் தாதைக்கு,

எவரு மெதிரில்லை கண்டீர், - உவரிக்

கடல்நஞ்ச முண்டான் கடனென்று, வாணற்

குடனின்று தோற்றா னொருங்கு.

 

பதவுரை

அவர் இவர் என்று இல்லை

-

பெரியார் சிறியார் என்று ஒருவாசியில்லை

அனங்கவேள் தாதைக்கு

-

காமனுக்குத் தந்தையான் கண்ணபிரானுக்கு

எவரும்

-

ஒருவரும்

எதிர் இல்லை கண்டீர்

-

எதிர் நிற்கவல்லாரில்லை காண்மின்

உவரிக்கடல் நஞ்சம் உண்டான்

-

கடலில் தோன்றின விஷத்தை உட்கொண்டவனான சிவன்

வாணற்கு

-

பாணாஸுரனுக்கு

கடன் என்று

-

‘உன்னை ரக்ஷிக்க நான் கடமைப் பட்டவன்‘ என்று சொல்லி

உடன் நின்று

-

அவனோடு கூடவேயிருந்து

ஒருங்கு தோற்றான்

-

குடும்பத்தோடே தோற்று ஓடிப்போனான்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அற்பபலன்களைத் தருமவர்களான ருத்ரன் முதலியோர் தங்களைப் பற்றினவர்களுக்கு ஒரு ஆபத்து வந்தால் அப்போது முதுகு காட்டி ஓடுமவர்களேயன்றி நிலைநின்று ரக்ஷிக்கவல்ல திறமையரல்லர் என்று முதலித்துக் காட்டுகிறார்.

அவர் இவர் என்றில்லை –அவர் என்று சிறந்தவர்களையும், இவர் என்று தாழ்ந்தவர்களையும் குறிக்கிறது. தாழ்ந்தவர்களான நம்போலியர் எம்பெருமானுக்கு எப்படி எதிராக முடியாதோ, அப்படியே, உயர்ந்தவர்களென்று கருதப்படுகின்ற ருத்ராதிகளும் எம்பெருமானுக்கு எதிராக முடியாததென்றுணர்த்தியவாறு.

அனங்கவேள் தாதைக்கு – கண்ணபிரான் மன்மதனுடைய அம்சமாகிய ப்ரத்யும்நனுக்கு ஜநகனாதல் அறிக. மன்மதன் ஒருகால் பரமசிவனது தவநிலையைக் குலைக்கமுயன்றபோது அவனுடைய நெற்றிக்கண்ணால் கொளுத்தப்பட்டு உடலிழந்ததனால் அனங்கனென்று பெயர்பெற்றான்.

கடல்நஞ்சமுண்டான் வாணற்குடனின்று தோற்ற வரலாறு வலி சக்ரவர்த்தியின் ஸந்ததியிற் பிறந்த பாணாஸுரனுடைய பெண்னாகிய உஷையென்பவள், ஒருநாள் ஒரு புருஷனோடு தான் கூடியிருந்ததாகக் கனாக்கண்டு, முன் பார்வதி அருளியிருந்தபடி அவனிடத்தில் மிகுந்த ஆசைபற்றியவளாய்த் தன் உயிர்த்தோழியான சித்திரலேகைக்கு அச்செய்தியைத் தெரிவித்து அவள் மூலமாய் அந்தப்புருஷன் கிருஷ்ணனுடைய பௌத்திரனும் ப்ரத்யும்நனுடைய புத்திரனுமாகிய அநிருத்தனென்று அறிந்துகொண்டு ‘அவனைப் பெறுதற்கு உபாயஞ்செய்யவேண்டும்‘ என்று அத்தோழியையே வேண்ட, அவள் தன் யோகவித்தை மகிகையினால் துவாரகைக்குச் சென்று அநிருத்தனைத் தூக்கிக்கொண்டு வந்து அந்த புரத்திலேவிட, உஷை அவனோடு போகங்களை அநுபவித்துவர, இச்செய்தியைக் காவலாளராலறிந்த அந்தப்பாணன் தன் ஸேனையுடன் அநிருத்தனை யெதிர்த்து மாயையினாலே பொருது நாகாஸ்த்ரத்தினால் கட்டிப்போட்டிருக்க, துவாரகையிலே அநிருத்தனைக் காணாமல் யாதவர்களெல்லாருங் கலங்கியிருந்தபோது, நடந்த வரலாறு நாரதமுனிவனால் சொல்லப்பெற்ற ஸ்ரீகிருஷ்ணபகவான், பெரிய திருவடியை நினைதருளி, உடனே வந்து நின்ற அக்கருடாழ்வானது தோள்மேலேறிக்கொண்டு பலராமன் முதலானாரோடு கூடப் பாணபுரமாகிய சோணிதபுரத்துக்கு எழுந்தருளும்போதே அப்பட்டணத்தின் ஸமீபத்தில் காவல் காத்துக்கொண்டிருந்த சிவபிரானது பிரமதகணங்கள் எதிர்த்துவர அவர்களையெல்லாம் அழித்து, பின்பு சிவபெருமானால் ஏவப்பட்டதொரு ஜ்வரதேவதை மூன்றுகால்களும் மூன்று தலைகளுமுள்ளதாய் வந்து பாணனைக் (ஒரு காலத்தில் பரமசிவன் கூத்தாடுகையில் பாணாஸுரன் அந்த நடனத்தைக்கண்டு அதற்குத் தகுதியாகத் தன் இரண்டு கைகளால் மத்தளம் தட்ட, சிவன் மகிழ்ந்து அவனுக்கு ஆயிரம் கைகளையும் நெருப்பு மதிளையும் அளவிறந்த வலிமையையும் மிக்க செல்வத்தையும், தான் ஸபரிவாரனாய்க்யும் தந்தருளி அப்படியே சிவன் தனது குடும்பத்தோடு அவன் மாளிகை வாசலிற் காத்துக் கொண்டிருந்தனன் என்பது இங்கு அறியத்தக்கது.) காப்பாற்றும் பொருட்டுத் தன்னோடு யுத்தஞ்செய்ய, தானும் ஒரு ஜ்வரத்தை யுண்டாக்கி அதன் சக்தியினாலே அதனைத் துரத்திவிட்ட பின்பு, சிவபிரானது அநுவரர்களாய்ப் பணாஸுரனது கோட்டையைச் சூழ்ந்துகொண்டு காத்திருந்த அக்நிதேவர் ஐவரும் தன்னோடு எதிர்த்துவர அவர்களையும் நாசஞ்செய்து பாணாஸுரனோடு போர் செய்யத்தொடங்க, அவனுக்குப் பக்கபலமாகச் சிவபெருமானும் ஸுப்ரஹ்மண்யன் முதலான பரிவாரங்களுடன் வந்து எதிர்த்துப்போரிட, கண்ணன் தான் ஜ்ரும்பணாஸ்த்ரத்தைப் பிரயோகித்துச் சிவன் ஒன்றுஞ் செய்யமாட்டாமல் கொட்டாவி விட்டுக்கொண்டு சோர்வடைந்து போம்படிசெய்து ஸுப்ரஹ்மண்யனையும் கணபதியையும் உங்காரங்களால் ஒறுத்தி ஒட்டி, பின்னர், அனேகமாயிரஞ்கித்து அப்பாணனது ஆயிரந் தோள்களையும் தாரைதாரையாய் உதிரமொழுக அறுத்து அவனுயிரையும் சிதைப்பதாக விருக்கையில் பரமசிவன் அருகில் வந்து வணங்கிப் பலவாறு பிரார்த்தித்ததனால் அவ்வாணனை நான்கு கைகளோடும் உயிரோடும் விட்டருளி, பின்பு அவன் தன்னைத் தொழுது அநிருத்தனுக்கு உஷையைச் சிறப்பாக மணம்புரிவிக்க, அதன்பின் கண்ணபிரான் துவாரகைக்கு சிறப்பாக மணம்புரிவிக்க, அதன் பின் கண்ணபிரான் துவாரகைக்கு மீண்டெழுந்தருளினன். இவ்வரலாற்றினால் அனங்கவேள்தாதைக்கு எவருமெதிரில்லை யென்னுமிடம் நன்கு விளக்கப்பட்டதாம்.

பாணாஸுரயுத்தத்தில் சிவன் தனது பாரிவாரங்களோடு தோற்றனனாதலால் “ஒருங்கு தோற்றான்“ என்றார்.

“திருப்பாற்கடலை உவரிக்கடலென்றது – ஸமுத்ரஸாம்யத்தைப்பற்ற“ என்பது பூருவர்களின் வியாக்கியான வாக்கியம். பாற்கடல் கடையும்போது அதில் நின்றும் விஷம் உண்டாக, அதனை எம்பெருமானுடைய நியமனத்தினால் பரமசிவன் உட்கொண்டானென்க.

 

English Translation

For Madana's father krishna, nobody is of consequence, nobody can oppose him.  Even the poison-threated Siva, who felt duty-bound to fight for Bana, lost completely to the lord.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain