(2182)

அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,

இன்புருகு சிந்தை யிடுதிரியா, - நன்புருகி

ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்.

 

பதவுரை

ஞானம் தமிழ் புரிந்த நான்

-

பகவத் விஷய ஜ்ஞானத்தைத் தருமதாய் த்ராவிட பாஷா ரூபமான திருவந்தாதிப் பிரபந்தத்தை (உலகத்தார்க்கு) விரும்பி வெளியிட்ட அடியேன்.

அன்பே தகளி ஆ

-

(பரபக்தியின் ஆரம்ப தசையான) ஸ்நேஹம் தகளியாகவும்

ஆர்வமே நெய் ஆக

-

(அந்த ஸ்நேஹம் மூலமாகப் பிறந்த) அபிநிவேசம் நெய்யாகவும்

இன்பு உருகு சிந்தை இடுதிரி ஆ

-

(பகவத் விஷயத்தின்) இனிமையாலே நீர்ப்பண்டமாக உருகுகின்ற மனமானது (விளக்குக்கு) இடப்படுகிற திரியாகவுங்கொண்டு

நன்பு உருக

-

ஆத்மாவும் உருகப்பெற்று

நாரணற்கு

-

ஸ்ரீமந் நாராயணனுக்கு

ஞானம் சுடர் விளக்கு ஏற்றினேன்

-

பரஜ்ஞானமாகிற பிரகாசமான தீபத்தை ஏற்றினேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தகளியாவது - நெய்க்கும் திரிக்கும் ஆதாரமாயிருக்கிற அகல்,  (தாளி என்று உலக வழக்கு.) அன்பைத் தகளியாகவும் ஆர்வத்தை நெய்யாவும் இன்புருகு சிந்தையைத் திரியாகவுங்கொண்டு எம்பெருமானுக்கு ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேனென்கிறார்.  அன்பு ஆர்வம் இன்பு என்றவையெல்லாம் பகவத் விஷயத்தில் தமக்குண்டான அநுராக விசேஷங்களேயாம்.  அநுராகத்தில் கணுக்கணுவான அவஸ்தாபேதங்கள் உண்டாகையால் அவற்றைத் திருவுள்ளம் பற்றி அன்பு என்றும் ஆர்வம் என்றும் இன்பு என்றும் சப்தபேதங்களையிட்டுச் சொன்னபடி.  ஆகவே, எம்பெருமானது திருவருளால் தமக்கு அப்பெருமான் விஷயமாகத் தோன்றியுள்ள ப்ரீதியின் நிலைமைகளைத் தகளியும் நெய்யும் திரியுமாக உருவகப்படுத்தி, ஸர்வசேஷியான நாராயணனுக்குப் பரஜ்ஞானமாகிற சுடர் விளக்கையேற்றி அடிமைசெய்யப் பெற்றேனென்று மகிழ்ந்து கூறினாராயிற்று.

எம் பெருமானிடத்தில் எனக்கு அனுராகமானது கணுக்கணுவாக ஏறி வளர்த்துச் செல்லப் பெற்றதனால் அவ்வநுராகம் உள்ளடங்காமல் இத்தமிழ்ப் பாசுரங்களை வெளியிடத் தொடங்குகின்றேனென்பது பரமதாற்பரியம்.

உலகத்தில்  ஒரு விளக்கு ஏற்றவேணுமானால் தகளியும் நெய்யும் திரியும் இன்றியமையாதனவாம்;  இவ்வாழ்வார் ஏற்றுகிற ஞானவிளக்கானது லோகவிலக்ஷணமானதால் லோகவிக்ஷணமான தகளியையும் நெய்யையும் திரியையுங் கொண்டு ஜ்வலிக்கின்றது போலும்.  பகவத் விஷய அநுராகத்தின் வெவ்வேறு நிலைமைகளே இவையாயின.  உலகில் பதார்த்தங்கள் பிரகாசிப்பதற்காக விளக்கேற்றுவர்; இவரும் ஸ்வஸ்வரூப பரஸ்வரூபங்கள் பிரகாசிப்பதற்காக விளக்கேற்றினர்.

“நன்புருகி” என்றவிடத்து, நன்பு என்று ஆத்மாவைச் சொல்லுகிறது.  ஜ்ஞாநாநந்தங்களை யுடையதாகையாலும் எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷபூர்தமாகையாலும் ஆத்மா நல்ல வஸ்து என்ற காரணத்தினால் நன்பென்று இவர் ஆத்மாவுக்குப் பெயரிட்டனர் போலும்.  நன்பு என்பது குணப்பெயராயினும் “தத்குணஸாரத்வாத் து தத்வ்யபதேச: ப்ராஜ்ஞவத்” (ப்ரஹ்மஸூத்ரம்.) என்ற ஸ்ரீபாஷ்ய ப்ரக்ரியையாலே ஆத்மவாசகமாகக் குறையில்லையென்க.  தமிழர் பண்பாகுபெயர் என்பர்.  நாரணன் - நாராயணன் என்பதன் சிதைவு.

இவ்வாழ்வார் ஞானத்தமிழ்புரியத் தொடங்கும்போதே ‘ஞானத் தமிழ் புரிந்த’ என்று இறந்தகாலத்தாற் கூறினது.  தம்மைக் கொண்டு கவிபாடுவிக்க விரும்பிய எம்பெருமான் ஸத்யஸங்கல்பனாகையாலும், எம்பெருமானது திருக்குணங்களைப் பற்றிப் பாசுரங்கள் பேசித் தலைக்கட்டியே தீரும்படியான தம் உறுதியினாலம் இப்பிரபந்தத்தைத் தலைக்கட்டியாய் விட்டதாக நினைத்தென்க.  இதனைத் தமிழர், தெளிவினால் எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்ட காலவழுவமைதி என்பர்.

 

English Translation

Love is my lamp, eagerness is the oil, my heart is the wick. Melting myself, here I light a lamp and offer this Tamil garland of knowledge.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain