(2090)

பொருகோட்டோர் ஏனமாய்ப் புக்கிடந்தாய்க்கு, அன்றுன்

ஒருகோட்டின் மேல்கிடந்த தன்றெ, - விரிதோட்ட

சேவடியை நீட்டித் திசைநடுங்க விண்துளங்க,

மாவடிவின் நீயளந்த மண்?

 

பதவுரை

விரி தோட்ட

-

ஒளி விரிகின்ற திருக்குண்டலங்களை அணிந்துள்ளவனே!

சே அடியை நீட்டி

-

செந்தாமரை போன்ற திருவடிகளை வளரச் செய்து

திசை நடுங்க

-

பூதலத்திலுள்ளவர்கள் நடுங்கும்படியாகவும்

விண் துளங்க

-

மேலுலகங்களிலுள்ளவர்கள் நடுங்கும்படியாகவும்

மா வடிவில்

-

(திரிவிக்கிரமனாக வளர்ந்த) பெரிய உருவத்தோடு

நீ அளந்த

-

நீ அளந்து திருவடி கீழ் இட்டுக்கொண்ட

மண்

-

பூமியானது,

பொருகோடு ஓர் ஏனம் ஆய்

-

நிலத்தைக்குத்தியெடுத்துக்கொண்டுதிரிகிற கோரப்பற்களையுடைய விலக்ஷணமான வராஹ மூர்த்தியாய்

புக்கு

-

(பிரளயஜலத்திலே முழுகி)

இடந்தாய்க்கு அன்று

-

அண்டபித்தியில் நின்றும் இந்தப் பூமியைக் குத்தியெடுத்துக் கொண்டுவந்த அக்காலத்தில்

உன்

-

உன்னுடைய

ஒரு கோட்டின்மேல்

-

ஒரு கோரப்பல்லின் ஏகதேசத்திலே

கிடந்தது அன்றே

-

அடங்கிக்கிடந்த தல்லவோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-[பொருகோட்டோர்.] எம்பெருமான் தான்செய்த பிரதிஜ்ஞையைப் பங்கப்படுத்திக்கொண்டாகிலும் ஆச்ரிதருடைய காரியமே கண்ணாயிருப்பனென்றார் கீழ்ப்பாட்டில்; அவ்வளவேயல்ல; தன் வடிவத்தை மாறுபடுத்திக்கொண்டும் இழிபிறப்பை ஏற்றுக்கொண்டும் காரியம் செய்பவன் காண்மின் என்றருளிச் செய்வதாக வராஹாவதாரத்தை ப்ரஸங்கிக்கிறாரிதில்

பொருகோட்டோரேனமாய்ப்புக்கிடந்த வரலாறு:- ஹிரண்யகசிபுவின் உடன்பிறந்தவனான ஹிரண்யாக்ஷனென்னுங் கொடிய அசுரன் தன் வலியையாற் பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச் சென்றபோது தேவர் முனிவர் முதலியோரது வேண்டிகோளினால் திருமால் மஹாவராஹரூபியாகத் திருவ்வதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனை நாடிக்கண்டு பொருது கோட்டினாற்குத்திக் கொன்று பாதளலோகத்திற் சார்ந்திருந்த பூமியைக்கோட்டினாற்குத்தி அங்கு நின்று மெடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளினன் என்பதாம். இப்பொழுது நடக்கிற ச்வேதவராஹகல்பத்துக்கு முந்தின பாத்மகல்பத்தைப்பற்றிய பிரளயத்தின் இறுதியில் ஸ்ரீமந்நாராயணன் ஏகார்ணவமான பிரளயஜலத்தில் மூழ்கியிருந்த பூமியை மேலே யெடுக்க நினைத்து மஹாவராஹரூபியாகிக் கோட்டு நுனியாற் பூமியை எடுத்து வந்தனனென்ற வரலாறும் உண்டு. 1. “பாராருலகம் முதுமுந்நீர் பரந்தகாலம் வளைமருப்பில் ஏராருருவத்தேனமா யெடுத்த வாற்றலம்மான்-” என்ற திருமங்கையாழ்வாரருளிச் செயலை நோக்குக.

இவ்வரலாற்றினாலும் பின்னடிகளிற் குறித்த திரிவிக்கிரமாவதார சரிதையினாலும்-எம்பெருமான் ரக்ஷ்யவர்க்கங்களை இன்னபடிதான் ரக்ஷிப்பனென்கிற ஒருநியதியில்லை யென்பது வெளியிடப்பட்டதாம்.- “ஆபத்துவந்தால் தலையாலே சுமந்து நோக்குதல், தலையிலே காலை வைத்து நோக்குதல் செய்யுமவனன்றோ நீ; ரக்ஷயவர்க்கத்தை நோக்குமளவில் உனக்கொரு நியதியுண்டோ வென்று உகந்தனுபவிக்கிறார்” என்றும்; ” உதாரனாயிருப்பானொருவன் நாலு பேருக்குச் சோறிட நினைத்து நாற்பதுபேருக்கு இட்டுமிகும்படி சோறுண்டாக்குமாபோலே ரக்ஷ்யத்தினளவன்றிறே ரக்ஷகன் பாரிப்பு” என்றுமுள்ள வியாக்கியான வாக்கியங்கள் அநுஸந்திக்கத் தக்கன.

மிகப்பெரிய வடிவுகொண்டு உலகளந்தபோது எங்கும்பரந்த திருவடிக்குச் சரிசமமாகப் போந்திருந்த பூமியானது வராஹாவதாரகாலத்தில் உனது திருஎயிற்றிலே ஒரு நீலமணி போலே சிறுகிக்கிடந்ததே! இஃது என்ன ஆச்சரியம் என வியக்கின்றார். இப்பிரபந்தத்தில் மேலே “ பிரானுன்பெருமை பிறராரறிவார், உராயுலகளந்தநான்று- வராகத், தெயிற்றளவு போதாவாறென்கொலோ; எந்தை அடிக்கு அளவு போந்தபடி” என்றருளிச் செய்துள்ள எண்பத்துநாலாம் பாசுரமும் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.

‘விரிதோட்ட’ என்பதை விளியாகக்கொண்டு ஒளிவிரிகின்ற தோடுகளையணிந்தவனே!- மகர நெடுங்குழைக்காதனே! என்று பொருள்கொள்ளும் பக்ஷத்தில் ‘விரிதோட’ என்றிருக்கவேண்டுவது விரித்தல் விகாரம் பெற்று ‘விரிதோட்ட’  என்றாயிற்றென்று கொள்ள வேண்டும்; இஃது அருமையெனின்; வேறுவகையாகவே பொருள் கொள்ளலாம்- மலர்ந்த இதழ்களையுடைய தாமரை போலேயிருக்கிற என்று. இப்போது இது சேவடிக்கு விசேஷணம்.

 

English Translation

O Lord of discus! Taking a huge form you stretched your lotus feet and measured the Earth, even as the world feared and the celestials frembled, Whenyou came as a huge boar and lifted the Earth on your tusk teeth, how did it not fall off, resting as it was on one tooth alone?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain