(2089)

மயங்க வலம்புரி வாய்வைத்து, வானத்

தியங்கும் எறிகதிரோன் றன்னை, - முயங்கமருள்

தோராழி யால் மறைத்த தென்நீ திருமாலே,

போராழிக் கையால் பொருது?

 

பதவுரை

திருமாலே நீ

-

லஷ்மீநாதனே!, நீ

முயங்கு அமருள்

-

(எண்ணிறந்த மன்னர்கள்) நெருங்கிக் கிடந்த பாரதப் போர்க்க்களத்திலே

மயங்க

-

எதிரிகள் அஞ்சி அறிவு கலங்கும்படியாக்

வலம்புரி

-

ஸ்ரீபாஞ்சஜந்ய மென்னும் திருச்சங்கை

வாய் வைத்து

-

தனது திருப்பவளத்திலே வைத்து ஊதி

போர் ஆழிகையால்

-

போர்செய்வதற்கு உபகரணமான திருவாழியை ஏந்தின கையாலே

பொருது

-

(பீஷ்மர் முதலானவர்களைத் துரத்தி) யுத்தம் செய்து

வானத்து இயங்கும் எறி கதிரோனை

-

ஆகாயத்தில் ஸஞ்சரித்துக் கொண்டேயிருக்கிற ஸூர்யனை

தேர் ஆழியால்

-

சக்கராயுதத்தினால்

மறைத்தது என்

-

மறைத்தது எதுக்காக?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- [மயங்கவலம்புரி.] எம்பெருமான் தன்னை யுகவாதாரை அகற்றுகைக்காகச் சில மயக்குப்பொருள்களை ஏற்படுத்தினனென்றார் கீழ்ப்பாட்டில் ஸர்வரக்ஷகனான எம்பெருமானுக்கு இது தகுதியோ? என்று ஒரு சங்கை தோன்ற, ஆச்ரிதர்களை எவ்விதத்திலும் பரிந்து பாதுகாப்பதும் தன்னை மதியாத ஆஸுரப்ரக்ருதிகளை விலக்கி விடுதலும் அப்பெருமானுடைய காரியம்; துஷ்டநிக்ரஹமும் சிஷ்ட பரிபாலநமும் செய்வதே ஸர்வரக்ஷகத்வமாதலால் அங்ஙனே செய்தருள்கின்ற எம்பெருமானுடைய ஸர்வரக்ஷகத்வ குணத்திற்கு யாதொரு கேடுமில்லை, மேன்மெலும் விளக்கமேயுள்ளது என்று ஸமாதான முரைப்பவர்போல இப்பாட்டு அருளிச் செய்கிறார்.

மயங்கவலம்புரிவாய்வைத்தது பகவத்கீதையின் முதலத்தியாயத்திற் சொல்லிற்று எறிகதிரோன் தன்னைத்தேராழியால் மறைத்த வரலாறு:- பாரதப்போரில் பதின்மூன்றாநாளிலே அர்ஜுநனது மைந்தனான அபிமந்யுவைத் துரியோதநனது உடன் பிறந்தாளின் கணவனான ஸைந்தவன் கொன்றுவிட, அங்ஙனம் தன் மகனைக்கொன்ற ஜயத்ரதனை மற்றைநாள் ஸூர்யாஸ்தமனத்திற்குள் தான் கொல்லாவிடில் தீயில்குதித்து உயிர் துறப்பதாக அர்ஜுநன் சபதஞ்செய்ய, அதனையறிந்த பகைவர்கள் பதினாலாநாள் பகல்  முழுவதும் ஜயத்ரதனை வெளிப்படுத்தாமல் சேனையின் நடுவே நிலவறையில் மறைத்துவைத்திருக்க, அர்ஜுநனுடைய சபதம் பழுதாய்விடுமே என்று சிந்தித்துக் கண்ணபிரான் ஸூர்யனை அஸ்தமிப்பதற்குச் சில நாழிகைக்கு முன்னமே தனது திருவாழியினால் மறைத்துவிட, அப்பொழுது எங்கும் இருள் பரவியதனால் அர்ஜுநன் தன் உறுதியின்படி அக்நிப்ரவேசம் செய்யப்புக, அதனைக் களிப்போடு காண்பதற்குத் துரியோதனாதிகளுடனே ஸைந்தவன் வந்து எதிர்நிற்க, அப்போது கண்ணபிரான் திருவாழியை வாங்கிவிடவே பகலாயிருந்ததனால் உடனே அர்ஜுநன் ஜயத்ரதனைத் தலைதுணித்தனன் என்பதாம்.1: “நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே நாழிகை போகப் படை பொருதவன் தேவகிதன் சிறுவன்” என்றார் பெரியாழ்வாரும்.

இவ்வரலாற்றில் ஒரு சங்கை பிறப்பதுண்டு;- திருமாலின் சக்கராயுதத்தின் ஒளியானது ஸூர்யனுடைய ஒளியிற்காட்டிலும் பலகோடி நூறாயிரம் மடங்கு மேம்பட்டதென்று சொல்லியிருக்க, கோடி ஸூர்யப்ரகாசனான அத்திருவாழியினாலே இருளை உண்டாக்கினதாக வுரைப்பது எங்ஙனே? என்று. இதற்குப் பலர் பலவகையான ஸமாதானங்கள் கூறுவர்; ஒரு ஸமயவிசேஷத்தில் திருவாழியின் பிரகாசம் சிறிதுபோது மழுங்கிப் போகக் கடவதென்று முக்கிய ஸமாதானமாகக் கூறுவதுண்டு.

போராழிக்கையால் பொருது” என்ற நான்காமடியில்- பாரதப்போரில் கண்ணபிரான் பீஷ்மரைக் கொல்வதாகத் திருவாழியைக் கையிலே கொண்டு தேரில் நின்றும் கீழிறங்கித் துரத்திக்கொண்டு சென்ற கதை அநுஸந்திக்கத்தக்கது. [மஹாபாரதம்-பீஷ்மபர்வம்-ஐம்பத்தொன்பதா மத்தியாயத்தில் விரிவு காண்க]

மயங்கவலம்புரி வாய்வைத்ததும் எறிகதிரோன்தன்னை ஆழியால் மறைத்ததும் போராழிக்கையால் பொருந்தும் ஏதுக்காக? என்றுஆழ்வார் எம்பெருமானைக்கேள்வி கேட்கிறார் இப்பாட்டால். ‘போரில் நான் ஆயுதமெடுப்பதில்லை என்று பிரதிஜ்ஞைசெய்து வைத்து அதற்குமாறாகக் காரியஞ்செய்துவைத்து அதற்கு மாறாக்க் காரியஞ் செய்தது எல்லாரோடும் ஒரு நிகராகவுள்ள உனது உறவுக்குத் தகுமோ? ஸத்யஸங்கல்பனான உன் இருப்புக்குத் தகுமோ? உன் பெருமைக்குத் தகுமோ? இவை யொன்றையும் பாராமல் நீ செய்த செயல்கள் எதற்காக? என்ற இக்கேள்வியானது-  ஆச்சரிதர்களான பாண்டவர்களிடத்திலே நீ கொண்டிருந்த பக்ஷபாதமே யன்றோ இத்தனையும் செய்வித்தது என்று வெளியிடுகிற முகத்தால் அவனுடைய ஸெளஹார்த்யகுணத்தை வெளியிடுவதில் நோக்குடைத்தென்க.

முயங்கு அமர் என்றது பலபேர்கள் திரண்டு நெருங்கியிருக்கும் போர்களமென்றபடி. போர்புரிய வந்தவர்களும் போர்காண வந்தவர்களுமாகத் திரண்ட திரளுக்கு எல்லையில்லையிறே

தேராழியால் மறைத்தது’ என்கிறாரே, தேர்ச்சக்கரத்தை யெடுத்தோ ஸூர்யனை மறைத்தது? என்று சிலர் சங்கிப்பர்; அன்று; தன் திவ்யாயுதமான சக்கரத்தைக்கொண்டே மறைத்தது; சக்கரம் தேருக்கு உறுப்பாயிருக்குந் தன்மையுடையதாதலால் வடநூலார் ’ரதாங்கம்’ என வழங்குதல் போலத் தேராழியெனப்பட்டதென்க. ’போராழிக்கையால்’ -கையிற்கொண்ட போராழியினால் என்று கொள்ளலாம்.

 

English Translation

In the battle of the yore, -O Lord Tirumali-you below the wonderful conch and wielded the sharp discus, But why did you hide the bright sun in the sky with a chariot wheel?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain