(2088)

(2088)

திசையும் திசையுறு தெய்வமும், தெய்வத்

திசையுங்க் கருமங்க ளெல்லாம் - அசைவில்சீர்க்

கண்ணன் நெடுமால் கடல்கடைந்த,

காரோத வண்ணன் படைத்த மயக்கு.

 

பதவுரை

திசையும்

-

திக்குக்களோடு கூடிய உலகங்களும்

திசைஉறு தெய்வமும்

-

அந்தந்த திசைகளிலே வாழும் தேவதைகளும்

தெய்வத்து இசையும் கருமங்கள்

-

அந்தந்த தேவதைகளுக்கு ஏற்ற (ஸ்ருஷ்டி முதலிய) வியாபாரங்களும்

எல்லாம்

-

ஆகிய இவையெல்லாம்,

அசைவு இல்சீர்

-

கேடில்லாத [நித்யமான] குணங்களையுடைய

கண்ணன்

-

ஸ்ரீகிருஷ்ணனாயவதரித்த

நெடு மால்

-

மிகப் பெருமையையுடையவனாய்

கடல் கடைந்த

-

(தன்பெருமையைப் பாராது சரணா கதர்களுக்காக உடம்புநோவக்) கடல் கடைந்தவனாய்

கார் ஓதம் வண்ணன்

-

மேகம் போலவும் கடல் போலவும் குளிர்ந்த வடிவையுடையவனான எம்பெருமான்

படைத்த

-

(தன்னிடம் வந்து பணியமாட்டா தவர்களை அகற்றுகைக்காக உண்டாக்கிவைத்த

மயக்கு

-

அறிவை மயக்கும் பொருள்களாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- [திசையும்.] ஸ்ரீமந்நாரயணனே பரதேவதையாகில், பலரும் பரதேவதை யென்று மயங்கும் படியான பல பல தேவதைகள் ஏற்படுவானேன்? அந்தத் தெய்வங்கள் தாம் விசித்திரமான் செயல்களைச் செய்ய வல்லமை பெற்றிருப்பானேன்? என்றொரு கேள்வி உண்டாக எம்பெருமான் தானே, தன்னை உகவாதவர்கள் தன்னை வந்து கிட்டாமல்  தேவதாந்தரங்களைப் பணிந்து க்ஷூத்ர பலன்களைப் பெற்று அகன்று போவதற்காகச் செய்து வைத்த மயக்குக்கள் காண்மின் இவை-என்று மறுமொழி கூறுகின்றார் சர்க்கரை, கற்கண்டு, த்ராக்ஷை முதலிய சிறந்த வஸ்துக்களை வாங்கி உண்டுகளிக்க இயற்றியில்லாத ஜனங்களுக்காக உப்பு, புளி முதலிய சிறு பொருள்களைக் கடை பரப்பி வைத்த மாத்திரத்திலேயே எல்லாப் பொருள்களுக்கும் கடைகள் ஏற்பட்டிருக்கின்றன வென்று எல்லாம் சிறந்த பொருள்களாய் விடுமோ? செல்வம் மிகுந்தவர்களுக்காக விலையுயர்ந்த உண்மையான ரத்னங்கள் ஏற்பட்டிருப்பது போல ஏழைகளுக்காக அற்பவிலையுள்ள  க்ருத்ரிமங்களான ரத்னங்களும் ஏற்பட்டிருக்கின்றன்; இவை தம்மில் வாழ்வின்றிக்கே யொழியுமோ? சிறந்தவஸ்துக்களை அநுபவிக்க யோக்யதையில்லாதவர்களை மயக்குவதற்கு ஸாமாந்ய வஸ்துக்கள் எப்படி ஏற்பட்டனவோ, அப்படியே பரமவிலக்ஷணனான திருமாலை அநுபவித்து வாழமாட்டாத க்ஷூத்ர ஜநங்களை மயக்குவதற்காகத் திசையும் திசையுறு தெய்வமும் தெய்வத் திசையுங் கருமங்களுமெல்லாம் ஏற்படுத்தப்பட்டனவென்று கொள்ளவேணுமென்கிறார்.

“திசையும்” என்றது பல பல வுலகங்களைச் சொன்னபடி. எம்பெருமா னொருவனையே தொழுது இறைஞ்சுதற்கு உரிய உலகமொன்றே யிருக்கலாமாயினும், ‘இது சிவஸாலோக்யம் பெறும் உலகம்’ ‘இது இந்த்ரஸாலோக்யம் பெறும் உலகம்’ என்றிப்படி பல பல ஸ்தானங்களைக் கற்பித்தது காரோதவண்ணன் படைத்த மயக்கு என்றபடி.

திசையுரு தெய்வமும்- இன்ன ஸ்தானத்திற்கு இன்னான் கடவன், இன்ன ஸ்தானத்திற்கு இன்னான் கடவன் என்று ஒவ்வொரு ஸ்தானத்திலும் நிர்வாஹகமாக ஒவ்வொரு தேவதையை ஏற்படுத்தினதும் காரோதவண்ணன் படைத்த மயக்கு.

தெய்வத்து இசையும் கருமங்கள்- நான்முகன் படைப்புத்தொழிலை நிர்வஹிக்கக்கடவன்;சிவபிரான் ஸம்ஹாரத் தொழிலை நிர்வஹிக்கக்கடவன்; இந்திரன் தேவதைகளை மெய்க்காட்டுக்கொள்ளுந் தொழிலை நோக்கக்கடவன்; யமன் உயிர் நீத்துந் தொழிலை நடத்தக் கடவன் என்றிப்படி அவ்வத் தெய்வங்கட்கு இசைந்தவாறாகத் தொழில்களை வகுத்திருப்பதும் காரோதவண்ணன் படைத்த மயக்கு. திரிபுர மூன்றெரித்தல், காமதஹநம், வ்ருத்ராஸுரவதம் முதலிய அரிய பெரிய செயல்களை இங்குக் கொள்ளவுமாம்.

கடல் கடைந்து அமுதங் கொண்ட காலத்திலே தேவாஸுரச்ம்வாதம் ப்ரஸங்கிக்க, எம்பெருமான் மோஹிநி யுருவம் பூண்டு உகவாதாரை மயக்கினது போலவே இவையும் மயக்காக உண்டுபண்ணி வைக்கப்பட்டவை என்கிற உட்பொருளுந் தோன்றக் “ கடல் கடைந்த காரோதவண்ணன் படைத்த மயக்கு” என்றருளிச் செய்தாரென்க. கடைந்த கடலிலே அமுதம் விஷம் யானை குதிரை சந்திரன் கல்பவ்ருக்ஷம் அப்ஸரஸ் முதலிய பல விசித்திரப் பொருள்களை படைத்தருளின பெருமான் இவை யித்தனையும் செய்யவல்லவனே யென்பதும் மூதலிக்கப்பட்டதாம்.

மயக்கு என்றது- மயங்கச் செய்யும் பொருள் என்றபடி; ‘விளக்கு’ என்றால் விளங்கச் செய்யும் பொருள் என்று பொருள் யிடுதல்போல.

 

English Translation

The Quarters, the respective gods, in each Quarters, they ways to propitiate the respective gods, -all these are the wonders created by krishna, the changeless eternal wonder-Lord, the dark ocean-hued Lord who churned the ocean in the yore.

Last Updated (Tuesday, 18 January 2011 06:11)

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain