(2086)

அரன்நா ரணன்நாமம் ஆன்விடைபுள்ளூர்த்தி,

உரைநூல் மறையுறையும் கோயில், - வரைநீர்

கருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி,

உருவமெரி கார்மேனி ஒன்று.

 

பதவுரை

நாமம்

-

ஒருவனுடைய பெயர்

அரன்

-

எல்லாவற்றையும் அழிப்பதையே தொழிலாகவுடையவனென்று காட்டுகிற ஹரனென்பது;

(மற்றொரு மூர்த்தியின் திருநாமமோ வென்னில்)

நாரணன்

-

(ஸர்வவ்யாபகனென்றும் ரக்ஷகனெனெறும் காட்டுகிற) நாராயணனென்பது

ஊர்தி

-

ஒருவனுடைய வாஹனம்

ஆன்விடை

-

மூடத்தனத்துக்கு உதாரணமாகக் காட்டப்படுகிற எருதாம்;

(மற்றொரு மூர்த்தியின் வாஹனமோ வென்னில்)

புள்

-

(வேதமூர்த்தியான) கருடப்பறவையாகும்;

உரை

-

ஒருவனைப்பற்றிச் சொல்லுகிற பிரமாணம்

நூல்

-

மனிசரால் ஆக்கப்பட்ட ஆகமம்;

(மற்றொரு மூர்த்தியைப்பற்றிச் சொல்லுகிற பிரமாணமோ வென்னில்)

மறை

-

(ஸ்வயம்வ்யக்தமான) வேதமாகும்;

உறையும் கோவில்

-

ஒருவனுடைய வாஸஸ்தானம்

வரை

-

(கடினத்தன்மையுள்ள) கைலாசமலையாம்;

(மற்றொரு மூர்த்தியின் இருப்பிடமோ வென்னில்)

நீர்

-

(அவனுடைய நீர்மைக்குத் தகுதியான) திருப்பாற்கடலாம்;

கருமம்

-

ஒருவனுடைய தொழில்

அழிப்பு

-

(கல்நெஞ்சனென்று சொல்லும்படியான) ஸம்ஹாரத்தொழிலாம்;

(மற்றொரு மூர்த்தியின் காரியமோ வென்னில்)

அளிப்பு

-

(இன்னருளுக்குரிய) ரக்ஷணத் தொழிலாம்;

கையது

-

ஒருவனுடைய கையிலுள்ள அயுதம்.

வேல்

-

(கொலைத்தொழிலுக்கு ஏற்ற) சூலாயுதம்;

(மற்றொரு மூர்த்தியின் ஆயுதமோ வென்னில்)

நேமி

-

அருளார் திருச்சக்கரம்

உருவம்

-

வடிவம்

எரி

-

(கண்கொண்டு காண வொண்ணாதபடி) காலாக்நி போன்றதாம்;

(மற்றொரு மூர்த்தியின் திருமேனியோ வென்னில்

கார்

-

(கண்டபோதே தாபங்களெல்லாம் தீரும்படியான) காளமேகவுருவாம்;

ஒன்று

-

சிவனாகிய ஒருவன்

மேனி

-

(ஸ்ரீமந் நாராயணனுக்கு) சரீர பூதன்;

[ஸ்ரீமந்நாராயண மூர்த்தியோ அந்த சிவனுமுட்பட எல்லாவற்றையும் சரீரமாக வுடையவனென்பது ஸித்தம்]

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- [அரன்நாரணன்நாமம்] கீழ்ப்பாட்டில் சிவனுடைய ஒருசெய்தியை எடுத்துப் பேசின ஆழ்வார் “அரன்  அறிவானாம்” [சிவனுக்கு என்ன தெரியும்?] என்று இழித்துப் பேசவே அதனைக் கேட்ட சிலர் “நாட்டங்கலும் ஈச்வரனென்று கொண்டாடப்படுகிற அச்சிவபெருமானை இப்படி நீ ஏசிப் பேசலாமோ? அவன் காற்கீழே பலரும் தலையை மடுத்து ஏத்தியிரைஞ்சக் காண்கிறோமே, அவன் பரதெய்வமன்றோ?” என்று சொல்ல, அதுகேட்ட ஆழ்வார்-ஸ்ரீமந்நாராயணனே பரதேவதை யென்பதும் ருத்ரன் அங்ஙனல்லன் என்பதும் இருவருடையவும் நாமம் ரூபம், வாஹனம், தொழில் முதலியவற்றால் நன்கு விளங்கக் காணலாமென்று அவற்றை யெடுத்துரைத்துக் காட்டுகிறாரிதில்.

இருவருடைய பெயரையும் நோக்குமிடத்து சிவன்பெயர் அரனென்றும் விஷ்ணுவின் பெயர் நாராயணனென்றும் ப்ரசித்தமாகவுள்ளன; அரனென்றால் ஹரிப்பவன் எல்லாவற்றையும் ஒழிப்பவன் என்று பொருள்படும்; நாராயணனென்றால், நாரங்களாகிய நித்யவஸ்துக்களெல்லாவற்றிலும் உறைந்திருந்து அவற்றை நோக்குமவன் என்று பொருள்படும்; ஆகவே, ஸர்வரக்ஷகன் பரதேவதையாயிருக்கத் தகுமோ அன்றி ஸர்வபக்ஷகன் பரதேவதையாயிருக்கத் தகுமோ என்பதை நீங்களே ஆராயலாம் என்றாராயிற்று.

இப்படியே இருவருடைய வாஹனங்களையும் நோக்குங்கால், ‘அடா மாடே!’ என்று மூர்க்கரை நிந்திப்பதற்கு த்ருஷ்டாந்தமாகக் கொள்ளப்படுகிற எருதை வாஹனமாகவுடையவன் அரன்; 1. “ஸுபர்ணேஸி கருத்மாந்”  என்ற வேத வாக்கியத்தாலும் 2. “வேதாத்மா விஹகேச்வர:” என்ற ஆளவந்தார் ஸ்ரீஸூக்தியாலும், 3. “சிரஞ்சேதனன் விழிதேகம் சிறையின் சினைபதம் கந் தரம் தோள்களூரு வடிவம் பெயரெசுர்சாமமுமாம்..... அரங்கர்தமூர்திச் சுவணனுக்கே”  என்ற ஐயங்கார் பாசுரத்தாலும் வேதஸ்வரூபியாகப் பிரதிபாதிக்கப்பட்ட பெரிய திருவடி யென்னும் கருடாழ்வானை வாஹனமாகவுடையவன் ஸ்ரீமந்நாராயணன்.

இனி இருவரையும் பற்றிச் சொல்லுகிற பிரமாணங்களை ஆராய்ந்தால், வேதவிருத்தமான பொருள்களைச் சொல்லுமதாயும் ராஜஸதாமஸ புருஷர்களால் செய்யப்பட்டதாயுமுள்ள  சைவாகமம் அரனைப்பற்றிச் சொல்லுவது; ஒருவராலும் செய்யப்படாமல் அநாதியாய் எவ்வகையான தோஷமுமற்று உண்மைப் பொருளையே உரைக்கின்ற வேதம் ஸ்ரீமந்நாராயணனைப் பிரதிபாதிக்கும் பிரமாணம். இனி இருவருடைய இருப்பிடங்களையும் நோக்குங்கால், தனது நெஞ்சின் கடினத் தன்மைக்கு ஏற்றவாறு கடினமான கைலாசமலை அரனுக்கு உறைவிடம், தனது திருவுள்ள நீர்மைக்குத் தக்கபடி நீர்மையே வடிவான திருப்பாற்கடல் ஸ்ரீம்ந்நாராயணனுக்கு உறைவிடம்.  இதற்குத் தக்கபடி அழித்தல் தொழில் அரனது; காத்தல் தொழில் நாராயணனது. அதற்குத் தக்கபடி கொலைத் தொழிலுக்கு ஏற்ற முத்தலைச் சூலம் அரனது, *அருளார் திருச்சக்கர மென்றே புகழ்பெற்று உலகங்களை யெல்லாம் பாதுகாக்குமாறுள்ள சக்கரப்படை நாராயணனது.

இவை யெல்லாம் ஒரு புறமிருக்கட்டும்; “ரூபமேவாஸ்ய ஏதந்மஹிமாநம் வ்யாசஷ்டே”   [உருவமே வ்யக்தியின் பெருமையைத் தெரிவிக்கும்] என்ற வேத வாக்கியத்தின்படி இருவருடையவும் உருவத்தை நோக்குவோமாயின், கண்ணெடுத்துப் பார்க்க முடியாதபடி காலாக்நிபோலேயிருக்கும் அரனுருவம்; கண்டார் கண்குளிரும்படியான காளமேகம்போலே யிருக்கும் செல்வநாரணன் திருவுருவம். “ஒன்று செந்தீ ஒன்று மா கடலுருவம்” என்றார் திருமங்கையாழ்வாரும் திருநெடுந்தாண்டகத்திலே.

இப்படி ஒன்றுக்கொன்று மாறுபட்டுக் கிடக்கிற இரண்டு பொருள்களில் “அங்கந்யந்யா தேவதா:” இத்யாதி உபநிஷத் வாக்கியங்களின்படி அரன் நாராயணனுக்கு அங்கமாயும் நாராயணன் அங்கியாயு மிருப்பர்கள். சரீரி தலைமையானதோ? சரீரம் தலைமையானதோ? ஆராய்ந்து சொல்லுங்கள் என்றவாறு

“மேனி ஒன்று” என்று அரனுடைய சரீரத்தன்மை சொன்னதுபோல நாராயணனுடைய சரீரித் தன்மை மூலத்தில் சொல்லப்படவில்லையாயினும், ஒன்று சரீர மென்றால் மற்றொன்று சரீரி யென்பது தன்னடையே விளங்குமிறே. அந்தர்யாமிப்ராஹ்மண மென்னும் வேதப்பகுதியில் ஸ்ரீமந்நாராயணனே ஸர்வசரீரி யென்பது பன்னியுரைக்கப்பட்டுள்ளமை காண்க.

“உருவமெரி கார்மேனியொன்று” என்பதை இரண்டு வாக்கியமாகக் கொள்ளுதலின்றியே ஏகவாக்கியமாகவே கொண்டு, இருவருடையவும் உருவத்தைப் பார்த்தால், ஒன்று எரிமேனி, மற்றொன்று கார்மேனி என்பதாக உரைத்தலும் ஒக்கும்.

 

English Translation

His names are Hara and Narayana; his mounts the bull and the bird; his texts, the Agamas and Vedas; his abodes the mount kaliasa and the Ocean of Milk, his works dissolution and protection; his weapons the spear and the discuss; his hue, the fire and the cloud; and yet he is one to all.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain