(2084)

பாரளவு மோரடிவைத் தோரடியும் பாருடுத்த,

நீரளவும் செல்ல நிமிர்ந்ததே – சூருருவில்

பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்,

நீயளவு கண்ட நெறி.

 

பதவுரை

ஓர் அடி

-

ஒரு திருவடியை

பார் அளவும் வைத்து

-

பூமிப்பரப்பு உள்ளவரையிலும் போரும்படி வைக்க

ஓர் அடியும்

-

மற்றொரு திருவடியும்

பார் உடுத்த

-

இந்த அண்ட கடாஹத்தைச் சூழ்ந்துகொண்டிருக்கிற

நீர் அளவும்

-

ஆவரண ஜலம் வரையில்

செல்ல

-

செல்லும்படி

நிமிர்ந்தது

-

ஓங்கிற்று;

சூர் உருவின் பேய்

-

தெய்வமகளான யசோதையின் வடிவுகொண்டு வந்த பூதனையை

அளவுகண்ட பெருமான்

-

முடித்த ஸ்வாமியியே!

நீ அளவு கண்டநெறி

-

நீ உலகளந்த விதத்தை

அறிகிலேன்

-

அளவிட்டுக் காணவல்ல அறிவுடையேனல்லேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-[பாரளவும்.] எம்பெருமானுடைய திவ்ய சேஷ்டிதங்கள் பலவற்றினுள்ளும் உலகளந்த சரிதையிலே நம் ஆழ்வார்கள் அதிகமாக ஈடுபடுவர்கள்; விசேஷித்து முதலாழ்வார்கள் மிகவு மதிகமாக ஈடுபடுவர்கள். கீழ்ப்பாட்டில் “எவ்வுலகம் நீறேற்றது” என்று அந்தச் செயலைச் சிறிது ப்ரஸ்தாவித்த மாத்திரத்திலே அதிலே திருவுள்ளம் மிகவும் அவகாஹிக்கப் பெற்று அந்த வரலாற்றைப்பேசி அநுபவிக்கத் தொடங்கி நிலைகொள்ள மாட்டாமல் நின்று தளும்புகின்றார்.

சூருருவிற்பேயளவுகண்டபெருமான் என்பது ஸம்போதநம்(விளி); தமது வல்லமையால் எம்பெருமானை அளவிட்டுக் காணவேணுமென்று நினைப்பவர்கள் பூதனை பட்டபாடுபடுவர்கள் என்பது தோன்ற இந்த ஸம்போதநமிடுகின்றார். உன்னை முடிப்பதாக வந்த பூதனையை முடித்த பிரானே!  நீ மாவலிபக்கல் மூவடி மண் நீரேற்றுப் பெற்று ஒரு திருவடியைப் பூமிப் பரப்படங்கலும் மலரவைத்து, மற்றொரு திருவடியை மேலில் அண்டத்தைச் சூழ்ந்த ஆவரண ஜலத்தளவும் செல்லவைத்து உலகளந்த விதத்தை யானறிகின்றிலே னென்கிறார்.

அளப்பதாவது-அளக்கிறவன் தான் நின்றவிடந்தவிர மற்றோரிடத்தில் மாறிக்காலிடுதல் என்று உலகத்திலே நாம் காண்கிறோம்.

ஓரிடத்திலேயே நின்றுகொண்டிருப்பதை அளப்பதாக யாரும் சொல்லமாட்டார்கள்; ஆகவே, எம்பெருமான் உலகளந்தான் என்று பலரும் சொல்லுகிறார்களே இது எப்படி பொருந்தும்? ஒரு திருவடிக்கும் கீழுலகமும் மற்றொரு திருவடிக்கு மேலுலகமும் சரிசமமாக இடமாகப் போந்துவிட்ட படியால் மாறி மாறி அடியிடுவதற்கு அவகாசமேயில்லையாதலால் அளந்தானென்பது எங்ஙனே சேரும்? என்று ஒரு சமத்காரமாகப் பேசுவார்போல “நீ அளவுகண்ட நெறி அறிகிலேன்” என்கிறார். இதனையே நம்மாழ்வார் திருவிருத்தத்தில்- “கழல்தல மொன்றே நிலமுழுதாயிற்று ஒரு கழல் போய், நிழல்தர எல்லாவிசும்பும் நிறைந்தது,.....அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக் கின்றதே?” (58) என்ற பாசுரத்தினால் விரித்துரைத்தாரென்க. அவ்விடத்து வியாக்கியானத்திலே-”அளக்கைக்கு ஒரு அவகாசம் காண்கிறிலோம்; நின்ற நிலையிலே நின்றாரை அளந்தாரென்ன வொண்ணாதிறே; அடிமாறியிடிலிறெ அளந்ததாவது; இவனிங்கு அளந்தானாக ஒன்றும் காண்கிறிலோமீ!” என்றுள்ள பெரியவாச்சான் பிள்ளையின் ஸ்ரீஸூக்திகளும் இங்கு அநுஸந்திக்கத்தக்கன.

“நீ அளவுகண்ட நெறி அறிகிலேன்” என்பதற்கு மற்றும் சிலவகையாகவும் பொருள் கூறுவர். அளவுகாண்கையாவது அளக்கை.

[சூருருவிற்பேயளவுகண்ட] “ சூருமணங்கும் தெய்வப் பெண்பெயர்” என்பது நிகண்டு, பூதனை யென்னும் பேய்மகள் தெய்வப் பெண்ணுருவாக வந்தாளோ வென்னில்; கண்ணபிரானுக்குத் தாயாகிய யசோதைபோல வடிவெடுத்து வந்தாளாகையாலும், அவ்வசோதை 1. “தெய்வநங்கை” என்று குலசேகரப் பெருமாளால் கூறப்பட்டிருக்கையாலும் சூருருவின் பேய் என்னக் குறையில்லை யென்க. அன்றி, பதினெண் தேவகணத்தில் பேயும் ஒன்றாகக் கூறப்பட்டிருத்தல் பற்றியும் “சூருருவின் பேய்” என்றாகவுமாம்.

பேயளவு காண்கையாவது அவளுடைய ஆயுளின் அளவைக்கண்டுவிடுதல்; கொல்லுதலைக் கூறியவாறு. கண்ணபிரானைக் கொல்லுமாறு கம்ஸனாலேவப்பட்ட பூதனை யென்னும் பேய்ச்சி தன் முலையிலே விஷத்தைத் தடவிக்கொண்டு யசோதைபோல வடிவெடுத்துத் திருவாய்ப்பாடிக்கு வந்து தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த ஸ்ரீ கிருஷ்ண சிசுவையெடுத்து நஞ்சுதீற்றிய முலையை உண்ணக்கொடுக்க பேயென்றறிந்த பெருமான் முலைப்பாலோடு அவளுயிரையும் உறிஞ்சி உண்டிட்டனனென்ற வரலாறு ப்ரஸித்தம்.

 

English Translation

You took the Earth, will one foot straddling the space and one foot placed on the ocean's edge. Your grew and grew, I know not how!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain