(2022)

மாற்றமுள வாகிலும் சொல்லுவன், மக்கள்

தோற்றக் குழிதோற்று விப்பாய்கொ லென்றின்னம்,

ஆற்றங் கரைவாழ் மரம்போல அஞ்சுகின்றேன்,

நாற்றஞ் சுவையூ றொலியா கியநம்பீ.

 

பதவுரை

நாற்றம் சுவை ஊறு ஒலி ஆகிய நம்பீ

கந்தம் ரஸம் ஸ்பர்சம் சப்தம் என்னும் புலன்கட்கு உரியனான எம்பெருமானே!

மாற்றம் உள ஆகிலும்

(நீ அடியேனை ஆட்கொண்டருளினாயில்லை என்று நான் உன் மேற் குறைகூறும் வார்த்தை கட்கெல்லாம் மாறாக (நீதானே ஆட்பட்டு உய்ந்தாயில்லை என்று என் மேற் குற்றமாக நீ) சொல்லத்தக்க வார்த்தைகள் பல உள்ளனவேயாகிலும்

(அதுயாதெனில்)

சொல்லுவேன்

(அவைநிற்க) யான் ஒன்று கூறுவேன்

மக்கள் தோற்றம் குழி இன்னம் தோற்றுவிப்பாய்கொல் என்று

(உன்னைச்சரணமடையாத ஸாதாரண) மனிதர்கள் (கர்மவசத்தாற்) பிறக்குமிடமான கர்ப்பஸ்தாநத்திலே என்னை இன்னமும் பிறக்கும்படி செய்கிடுவையோ என்று கருதி

ஆற்றங்கரை வாழ் மரம் போல்

ஆற்றில் கரையிலேயுள்ள மரம் போன்றவனாகி

அஞ்சுகின்றேன்

(வரக்கடவதான அபாயத்தைக்குறித்து எப்பொழுதும்) பயப்படுகின்றேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

மாற்றமுளவாகிலுஞ் சொல்லுவன்=மாறாகக் கூறுவது மாற்றம்; மறுவார்த்தை; அதாவது எதிர்மொழி, ப்ரத்யுத்தரம். எம்பெருமானே! என்னுடைய வாதங்களுக்கெல்லாம் நீ பிரதிவாதம் கூறும்படியான ஆற்றலுடையாய் என்பது அறிவேன்; ஆனாலும் ஒன்று சொல்லுவேன் கேளாய் என்கிறார்.

ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் ஸம்வாதம் நிகழும்வகை:-

ஜீவாத்மா-நித்யர்கள் போலவே பரமபதத்தில் எப்பொழுதும் உனையடுத்திருந்து நித்யாந்நதத்தை அநுபவிக்ககூடியவையான ஜீவகோடிகள் அவ்வியல்பைத் தொன்று தொட்டு இழந்து இப்பிரஞ்சத்தில் இழிவடைய வேண்டுவதென்?

பரமாத்மா-இவ்வுலகத்து ஜீவகோடிகள் என்னைப் பராமுகஞ்செய்து பிரபஞ்ச விஷயங்களில் இழிந்து அங்கு ஆழங்காற்பட்டுப் புண்யபாபரூபமான கருமங்களைச் செய்து அக்கர்மபரம்பரையானது ஜந்ம பரம்பரையிலே செலுத்த அவ்வழிகளால் மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்துவருந்துமிடத்தும் அப்பிறவித்துயர்க்கு அஞ்சி என்னைச் சரணமடையாமலே அங்ஙனம் அழிவுறுகின்றன் கருமங்களைச் செய்தவர்களிடத்திலே அவற்றின் பயன்சென்று சேரக்கடவதன்றோ? இதில் என்குற்றம் ஒன்றுமில்லையே;

ரிவாத்மா-விருப்புவெறுப்புகளுக்கு அடியான மனம் உன் அதீனமாதலால் உன் பக்கல் விருப்பங்கொண்டிலோ மென்று எம்மேல் நீ குற்றஞ்சொல்லக் காரணமில்லையே; இன்னமும், கர்மஸ்வரூபத்தைப் பார்க்குமிடத்தில் தொழில் வடிவமாதலால் உடனே அழியுந்தன்மையதான அது உனது நிக்ரஹாநக்ர; ரூபமாய் உன் திருவுள்ளத்தில் நிலைநின்றே பயனை விளைத்தால் ஸர்வேச்வரனான நீ அதனைப் பொறுத்தருளினால் அது தீர்ந்திடுமே; அங்ஙனஞ் செய்தருளுமிடத்து உன்னைத் தடுப்பவருண்டோ? பரதந்திரமான ஜீவகோடிகளுக்கு ஸ்வாதந்திரிய, மில்லையே; உடைமையைப் பாதுகாக்குங்கடமை உடையவனதன்றோ? ஆகவே, எங்களிழவுக்கு உன் அநாதரமே காரணம்;

பரமாத்மா-நீங்கள் சேதநராதலால் நீங்களே முயற்சிசெய்து என்பக்கல் வரவேண்டாவோ? நான் முன்னமே உங்கட்கு ஜ்ஞான சக்திகளைத் தந்துள்ளேனே; அப்படியிருக்க என்மேல் வீண்பழி சுமத்துவது எதுக்கு?

இங்ஙனம் எம்பெருமானால் நல்லறிவருளப்பெற்ற ஆழ்வார்தாமும் முற்றுணர்வுடையனான எம்பெருமானும் வாதிப்ரதிவாதிகள் போன்று வேறுவேதாந்தங்களைக்கொண்டு கர்ம ஸ்வரூபத்தையும் பரப்ரஹ்ம ஸ்வரூபத்தையும் ஜீவாத்ம ஸ்வரூபத்தையும்பற்றி நின்று பேசிக்கொண்டு சென்றால் அதற்கு ஓர்எல்லை யில்லாமையாலும், அவ்வாதம் தமது பிறவித்துயா; தீர்வதற்குக் காரணமாகாதாதலாலும் அதனை விட்டுக் காரியமே கண்ணாக மாற்றமுளவாகிலும் சொல்லுவன் என்ற தொடங்கித் தம் குறையையும் வேண்டுகோளையும் விண்ணப்பஞ்செய்கிறார். “திரையவித்து நீராடலாகா உரைப்பா, ருரையவித் தொன்றுஞ் சொல்லிலை” என்றபடி வாத ப்ரதிவாதங்கட்கு ஒரு முடிவில்லையாகையால் மாற்றமுளவாகிலும் எனப்பட்டது.

ஆற்றங்கரையிலுள்ள மரம் அந்த ஆற்றில் வெள்ளம் பெருகித் தன் வேரை அகழ்ந்திடத் தொடங்கினால் அவ்வபாயத்தைப் பரிஹாரித்துக் கொள்ளவாவது அத்தீங்குக்கு இடமின்றி விலகிநிற்கவாவது அத்தயரைத் தீர்ப்பதற்குப் பிறரைத் துணையாகக் கூப்பிடவாவது மாட்டாம்ல முறிந்து விழுந்து அழிவுக்குள்ளாகும். தமது நிலைமை எப்பொழுதும் அபாயத்துக்கு இடமாதல் பற்றியும் தமக்கு வரும் துன்பத்தைத் தாமே போக்கிக்கொள்ள மாட்டாமைபற்றியும் தமக்கு அந்த மரத்தை உவமை கூறினார். ஆற்றங்கரையின் மரம் எப்போதும் அபாயத்துக்கு இடமாகுமென்பதை “ஆற்றங்கரையின்மரமும் அரசறிய, வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே” என்றதனாலுமறிக.

சேதநரான தமக்கு அசேதநமான மரத்தை உவமை கூறியதனால் தமக்கு உணடான உணர்வு அஞ்சுவதற்கே காரணமாவதன்றி அபாயத்தை அகற்றுதற்குக் காரணமாகா தென்றவாரும். ஆகவே அந்த மரத்தினது நிலைமையிற்காட்டிலும் தமது நிலைமைக்கு உள்ள தாழ்வைப் புலப்படுத்தியபடி. இதுபற்றியே ‘மரம்போன்றேன்’ என்னாமல் ‘மரம்போலஞ்சுகின்றேன்’ என்றார். மரத்துக்கு அபாயமுளதேனும் அச்சமில்லை, அசேதநமாதலால்; தமக்கோ அபாயத்தோடு அச்சமுமுண்டு, சைதந்யமுள்ளமையால்-என வேறுபாடு காண்க.

எம்பெருமானுடைய நியமனத்தால் அவதாரித்து அவனுடைய திருவருளால் தத்துவஞானம் உதிக்கப் பெற்றுச் சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் அவனுக்கே தொண்டு பூண்டிருக்கின்ற ஆழ்வார் இங்ஙனம் அஞ்ச வேண்டுவதில்லை யாயினும், எம்பெருமான் உபேக்ஷித்தால் இங்கேயே கிடந்து வருத்தவும் அவன் ஆதாரித்தால் அங்கேபோய்ப் பேரின்பம் பெறவுமாம்படி பொதுவாகவுள்ள இந்நிலவுலகத்த உடல்வாழ்க்கையின் தன்மையிற் கருத்து ஊன்றியதனாலும், தமக்கு உண்டான ஞானம் விரைவில் வீடுபெறும்படி தூண்டுதலாலும், நஞ்சு இல்லாத நீர்ப்பாம்பும் பாம்பென்று மாத்திரத்தில் அச்சந்தருதல்போலக் கர்ம கார்யமல்லாத தமது பிறப்பும் பிறப்பென்ற மாத்திரத்தால் அச்சந்தருதலாலும், ஸரமாந்யரான மனிதர் அஞ்சுவது போலவே தாமும் அஞ்சுகின்றார். “அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ, தஞ்சலறிவார்தொழில்” அன்றோ?

நாற்றச்சுவையு+றொலியாகிய நம்பி=சப்தாதி விஷயங்களெல்லாம் எம்பெருமானுக்கு அதீனமாகவே யிருத்தலால் அவ்வொற்றுமைநயம்பற்றியதாம் இவ்விளி. ஆங்ஙனமுள்ளவனான நீ, புலன்வழிச்சென்றேனென்று எம்மேற்குரை சொல்லக் காரணமில்லையென்பது உட்கோள். எனவே, “  ????????????        -பயக்ருத் பயநாசந்:” என்கிறபடியே அச்சத்துக்குக் காரணமும் பாரிஹாரமும் நீயே யென்றவாறு; உன்னிடத்தினின்றும் என்னையகற்று கைக்குக் காரணமான சப்தாதி விஷயங்கட்கெல்லாம் நீயே நியாமனென்றபடி.

மாற்றம் என்பது பால்பகா அஃறிணைப் பெயராதலால் ‘உள’ என்னும் பன்மை முற்றைக்கொண்டது. பாட்டின்முடிவில் நம்பீ! என்பதும் பாடம்.

 

English Translation

O Lord! Nambi, manifest as fragrance, taste, touch and sound1 After all is said, I still have something to say; Like the proverbial free growing on the river bank, I contantly dread the thought that you may cast me into the dungeon of birth and worldly life again!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain