(1796)

சோத்தென நின்று தொழவிரங்கான் தொன்னலங் கொண்டெனக்கு இன்றுகாறும்

போர்ப்பதோர் பொற்படம் தந்துபோனான் போயின வூரறி யேன் என்கொங்கை

மூத்திடு கின்றன மற்றவன்றன் மொய்யக லம் அணை யாதுவாளா

கூத்த னிமையவர் கோன்விரும்பும் குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.

 

பதவுரை

என் கொங்கை

-

எனது முலைகள்

அவன்தன்

-

அவனுடைய

மொய் அகலம்

-

அழகிய திருமார்பை

அணையாது

-

அணையப்பெறாமல்

வாளா

-

வீணாக

மூர்த்திடுகின்றன

-

பருக்கின்றன;

(ஆகையாலே)

கூத்தன்

-

மநோஹரமான சேஷ்டிதங்களை யுடையவனும்

இமையவர்கோன்

-

நித்யஸூரிகட்குத் தலைவனுமான பெருமான்

விரும்பும்

-

விரும்பிவர்த்திக்கு மிடமான

குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சோத்தம்+என, சோத்தமென - என்றாக வேண்டுவது ‘சோத்தென’ என்றானது தொகுத்தல் விகாரம். அஞ்ஜலி பண்ணுமவர்கள் அதுக்கு அநுரூபமாகத் தாழ்ச்சி தோற்றச் சொல்லுவதொரு சப்தமாம் சோத்தமென்பது. ஸ்தோத்ரமென்னும் வடசொல்லின் திரிபு என்பாருமுண்டு. சோத்தம் என்பது கடைக்குறையாய்ச் ‘சேர்த்து’ என்று கிடக்கிற தென்பாருமுளர். அப்பெருமானை ஓயாதே அஞ்ஜலி பண்ணி வணங்கி வழிபட்டாலும் அவன் இரங்குவதில்லையே! இரக்கமென்பது குடிபெயர்த்துக் கொண்டு எங்குப் போயிற்றே தெரியவில்லையே யென்கிறாள்.

இரக்கமில்லாமையை விவரிக்கிறாள் மேலே தொன்னவங்கொண்டு இத்யாதியால், என்னுடைய பெண்மைக்கு உரிய நாண்மடமச்சம் முதலிய நலங்களைக் கவர்ந்துகொண்டுபோய் (அதாவது-என்னுடைய ஸர்வஸ்வத்தையுங் கொள்ளைகொண்டுபோய்) தான் எனக்கொரு பொன்மயமான பீதாம்பரம் போர்த்துப் போயினான் என்கிறாள். அதாவது என்னென்னில்; நாயகவிரஹத்தினால் மேனியில் தோன்றும் பசலைநிறமென்ற வைவர்ணியமானது பொன்னிறத்ததாக வருணிக்கப்படும்; அதைச் சொன்னபடி, “பொன்குலாம்பயலை பூத்தன மென்தோள்” என்றாள் திருவிடவெந்தைப் பதிகத்திலும். என்மேனி நிறத்தை யழித்துப்பிரிந்துபோனான் என்றவாறு.

இன்றுதாறும் = இன்றுவரைக்கும், காறு என்பதுபோலத் தாறு என்பதும் எல்லைப் பொருளது. “தனையும் காறும் தாறும் துணையும், வரையும் பிரமாணமும் மாத்திரையும் மட்டும், அளவின் பெய ரென்ளறைந்தனர்புலவர்” என்பது பிங்கலநிகண்டு.

போயினவூரறியேன் =  போனானாகிலும் போன வூரின்பெயரைச் சொல்லிப் போனானாகில் ஒருவாறு ஆறியிருக்கலாமே; அதுதானுஞ் சொல்லாதொழிந்தானென்கிறாள், போனவூர்தெரியாதாகில் “குறுங்குடிக்கே யென்னையுய்த்திடுமின்” என்பானேன்? என்னில் ; அவன் கூடியிருந்த காலத்தில் பலகாலும் திருக்குறுங்குடியின் இனிமையை வாய்வெருவக்கேட்டிருந்தவளாகையாலே அவ்விடத்தே புகுந்திருக்கக்கூடுமோ வென்று கருதிச் சொல்லுகிறாள்போலும்.

அவன் போனது இன்னவூரென்று ஸ்பஷ்டமாகத் தெரியாதிருக்கும்போது இங்குத் தானே விழுந்து கிடந்தாலாகாதோ என்று சிலர்சொல்ல: ஐயோ! இம்முலைகள் படுத்துகிறபாடு பார்த்திலீர்களோ? இங்கே யிருக்கலாம்படியாயோ இவையிருப்பது! என்கிறாள் மூன்றாமடியால். “கொள்ளும்பயனொன்றில்லாத கொங்கைதன்னைக் கிழங்கோடும், அள்ளிப்பறித்திட்டு அவன் மாஜீவிலெறிந்து என்னழலைத் தீர்வேனே” என்றாள் ஆண்டாள் ; அவள் மெய்யே பெண்ணாய்ப் பிறந்தவளாகையாலே முலைபடைத்துப் படுகிற வருத்தமெல்லாந் தோற்ற அப்படி சொன்னாள்; அங்ஙனன்றிக்கே இவ்வாழ்வார்பாவநாப்ரகர்ஷத்தால் மாத்திரம் பெண்மையை ஏறிட்டுக்கொண்டவராதலால் அவ்வளவு ரோஷங்கொண்டு சொல்லமாட்டாமல் இங்ஙனே சொல்லுகிறரென்க.

 

English Translation

Even after I held his feet and begged, he did not relent.  He took all my well-being and left me with a single golden shroud called paleness.  To date I do not even know where he went.  Denied of his beautiful chest;s embrace, my withered breasts are wasting away, carry me now to his abode in kurungudi, which the player, the Lord of gods, prefers

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain