(1795)

கேவல மன்று கடலினோசை கேண்மின்கள் ஆயன்கை ஆம்பல்வந்து என்

ஆவி யளவும் அணைந்துநிற்கும் அன்றியும் ஐந்து கணைதெரிந்திட்டு

ஏவலங் காட்டி இவனொருவன் இப்படி யேபுகுந் தெய்திடாமுன்

கோவலர் கூத்தன் குறிப்பறிந்து குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.

 

பதவுரை

கடலின் ஓசை

-

ஸமுத்ரகோஷமானது

கேவலம் அன்று

-

ஸாமாந்யமன்று;

கேண்மின்கள்

-

கேளுங்கள் ;

ஆயன்

-

கோபாலனுடைய

கை

-

கையிலுள்ள

ஆம்பல் வந்து

-

குழலோசை வந்து

என் ஆவி அளவும் அணைந்து நிற்கும்

-

என்னுடைய பிராணன் வரையில் கிட்டி நிற்கின்றது;

அன்றியும்

-

அதற்கு மேலும்

இவன் ஒருவன்

-

(மன்மதனென்கிற) இப்பாவியொருவன்

ஐந்து கணை

-

தனது) பஞ்சபாணங்களை

தெரிந்திட்டு

-

நன்றாக ஆராய்ந்து

ஏவலம் காட்டி

-

பிரயோகிக்க வல்லஸாமர்த்தியத்தைக் காண்பித்து

இப்படியே புகுந்து

-

என்மேல் நோக்கம் வைத்து

எய்திடா முன்

-

பிரயோகிப்பதற்கு முன்னமே

கோவலர்கூத்தன்

-

இடைச்சாதிக்கு ஏற்ற கூத்துகளில் வல்லவனான பெருமானுடைய

குறிப்பு

-

திருவுள்ளக்கருத்தை

அறிந்து

-

தெரிந்துகொண்டு

குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இதுவரையிலும் கடலோசைகள் பலபல செவிப்பட்டிருந்தாலும் இப்போது செவிப்படும் கடலோசை அவைபோல்வதன்று; இதுஇன்று முடித்தே விடுமதாய்ப் பிரபலமாயிராநின்றதென்கை. ஸுக்ஜீவமஹாராஜா; ஸ்ரீராமபிரானை அண்டைகொண்டுவந்து வாலியின் மனைவாசலிலே சென்று அறை கூவினபோது அவருடைய மிடற்றோசைக்கு எப்படிப்பட்ட மிடுக்கு இருந்ததோ, அப்படிப்பட்ட மிடுக்கு இக்கடலோசைக்கு உண்டுபோலும்.

கடலோசை தனக்குப் பாதகாமாயிருப்பது போலவே மற்றையோர்க்கும் பாதகமாகவே யிருக்குமெனக் கருதி ‘கேண்மின்கள்’ என்கிறாள்; இக்கடலோசை உங்கள் காதில் படுகிறதில்லை போலும்; சிறிது உற்றுச் செவிகொடுத்துக் கேட்டுப்பாருங்கள்; இது படுத்துகிறபாடு உங்களுக்கே தெரியவரும் என்கிறாள் போலும்.

இஃது ஒன்றையோ? இடையன் ஊதுகிற புல்லாங்குழலின் ஓசையும் வந்துஎன் உயிரை முடிக்குமளவிலே நிற்கின்றது பாரீர் என்கிறாள் ஆயன் கையாம்பல் வந்து என்னாவியளவுமணைந்து நிற்கும் என்று.

ஆம்பல்-இலைக்குழல்.

அதற்குமேலே,   ‘இவள் கடலோசைக்கும் குழலோசைக்கும் முடிந்தாளாக்கூடாது, நம்முடைய கையிலுள்ள அம்புகளாலே முடிந்தாளகவேணும்’ என்று கருதிய * கருப்புவில் மலர்க்கணைக் காமனானவன் பெண்களை வதை செய்யத்தகாதே என்றும் நோக்காமல் கண்ணற்று முடிக்கவல்ல சில அம்புகளை ஆராய்ந்து தொடுத்துத் தன்னுடைய பிரயோகஸாமர்த்தியத்தைக் காட்டுதற்கு முன்னே என்னைத் திருக்குறுங்குடியிற் கொண்டு சேர்த்திடுங்கள் என்கிறாள்.

ஏவலம் = ஏ-எய்வதில், வலம்-வல்லமை என்றபடி. இவனொருவன் = பெண்களைக் கொலை செய்ய வல்லவர்களை எண்ணத் தொடங்கினால் இவனை யெண்ணிப் பின்னை யெண்ணுதற்கு வேறு ஆளில்லாத அதிவிதீயன் என்றபடி.

‘இப்படியேபுகுந்து’ என்றவிடத்திற்குப் பெரியவாச்சான் பிள்ளையருளிச் செய்வது;- “இதுக்கு இட்டுச் சொல்லலாவதொரு பாசுரமில்லை; புண்ணறைகளைக் காட்டுமித்தனை.” என்று “ஓர்மீனாய கொடி நெடுவேன் வலிசெய்ய மெலிவேனோ” என்றாள் கீழே திருவாலிப்பதிகத்திலும். ஆசை ஆதிகரித்துச் செல்லுவதையும், அதுகைகூடாமையாலே கஷ்டம் மீதூர்ந்து செல்லுவதையும் காமனுடைய ஹிம்ஸையாகச் சொல்லுவது மரபு.

கோவலர்கூத்தன் குறிப்பறிந்து = தான் ஆடுகிற கூத்தின்; இனிமையாலே முரட்டாண்களான கோவலர்களையும் ஈடுபடுத்திக் கொள்பவன் என்பது ‘கோவலர்கூத்தன்’ என்றதன் உட்கருத்து. வன்னெஞ்சர்களான தன்னோடொத்த பருவத்துப் பிள்ளைகளைப் படுத்துகிறபாடே அதுவானால் அபலைகளான நமக்குச் சொல்ல வேணுமோ என்கை. அவனுடைய திருவுள்ளக் கருத்தையறிந்து அங்கே கொண்டு சேர்த்திடுங்கள் என்றதன் கருத்தாவது-அவன் வேணுமென்றிருந்தானாகில் அங்கே கொண்டுபோய்ப் பொகடுங்கோள்; வேண்டாவென்றிருந்தானாகில் இவ்விடத்தே முடித்திடுங்கோள் என்பதாம்.

 

English Translation

Pray head me, the roar of the sea is not alone! The cowherd;s flute melody already throttles my soul.  And then this deft archer Madana, god of love, has his flower-arrows aimed at me.  Before he comes in and shoots, know the cowherd dancer;s mind and carry me to his abode in kurungudi, now

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain