(1794)

செங்க ணெடிய கரியமேனித் தேவ ரொருவரிங் கேபுகுந்து என்

அங்கம் மெலிய வளைகழல ஆதுகொ லோ என்று சொன்னபின்னை

ஐங்கணை வில்லிதன் ஆண்மையென்னோ டாடு மதனை யறியமாட்டேன்

கொங்கலர் தண்பணை சூழ்புறவில் குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.

 

பதவுரை

நெடிய செம்கண்

-

நீண்டு சிவந்த திருக்கண்களையும்

கரிய மேனி

-

கறுத்த திருமேனியையுமுடையரான

தேவர் ஒருவர்

-

ஒரு பெருமாள்

இங்கே புகுந்து

-

இங்கு எழுந்தருளி

என் அங்கம் மெலிய

-

எனது உடல் இளைக்கும்படியாகவும்

வளை கழல

-

வளைகள் கழன்றொழியும்படி யாகவும்

ஆது கொலோ என்று சொன்ன பின்னை

-

அப்படிப்பட்ட பிரிவை உணர்த்தினது முதலாக

ஐங் கணை வில்லி

-

ஐந்து அம்புகளையுடைய வில்லை ஆள்பவனான மன்மதன்

என்னோடு ஆடும்

-

என்விஷயத்திலே காட்டுகின்ற

தன் ஆண்மை அதனை

-

தன்னுடைய பௌருஷத்தை

அறிய மாட்டேன்

-

(எடுத்துச்செல்ல) அறிகின்றிலேன் ;

கொங்கு அலர்

-

தேன் ஒழுகுகின்ற

தண்

-

குளிர்ந்த

பணை

-

மரக்கொம்புகளால்

சூழ்

-

சூழப்பட்ட

புறவின்

-

புறவுகளை யுடைய

குறுங்குடிக்கே, என்னை உய்த்திடுமின்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அவருடைய கண்ணழகையும் கண்களின் பரப்பையும் என்ன சொல்லுவேன்!;  கண் ஒரு தலையும் வடிவெல்லாம் ஒரு தலையுமானால் பின்னையும் கண்ணழகே விஞ்சியிருக்குங் காண்மின்;  உள்ளுள்ள வாத்ஸயமெல்லாம் கண்ணிலே தோற்றும்; அக்கண்களுக்கு ஒருவாறு தப்பினாலும் வடிவில் குளிர்ச்சிக்குத் தப்பவொண்ணாது; (தேவர்) கண்ணழகும் வடிவழகும் பேசி முடித்தாலும் அவருடைய வைலக்ஷண்யம் வாசாமகோசரம் ; ‘அவரும் ஒருவரே!’ என்று வாய்வெருவ வேண்டும்படி யிருப்பவர் காண்மின். அப்படிப்பட்டவர் தம்முடைய வடிவழகையும் மேனமையையுங்கண்டு; இவையுடைய நம்மிடத்தே எல்லாரும் வரவேமேயன்றி நாம் ஓரிடத்துக்குப் போகலாமோ?; என்று பரத்வம் பாராட்டியிருக்க வேண்டியிருந்தும் அதுசெய்யாதே தம்முடைய எளிமைக் குணத்தையே விலைசெலுத்தி நானிருக்குமிடத்தே வந்து புகுந்தார் புகுந்தவர் ஒருவார்த்தை சொன்னார் அது சொல்லிப் பிரிந்துபோனது முதலாக மன்மதன் என்னைத் தாய் என்றும் பாராதே என்னிடத்தில் காட்டும் பராக்ரமங்களை நெஞ்சால் நினைக்குவும்கில்லேனானபின்பு வாய்கொண்டு எங்ஙனே சொல்லப்போகிறேன்? இந்த நலிவுக்கென்னை ஆளாக்காதே திருக்குறுங்குடியில் கொண்டுபோய்ச் சேர்த்திடுங்கள்-என்றாளாயிற்று.

ஆது கொலோ வென்று- ‘அது’ என்பது ‘ஆது’ என நீண்டுகிடக்கிறது. கூடியிருந்த காலத்தில்; உன்னை ஒருநாளும் விட்டுப் பிரியமாட்டேன்; என்று காதலர்கூறும் வார்த்தையுண்டே; அதுவே இங்குலிவக்ஷிதம்; ஸம்ச்லேஷரஸம் அநுபவிக்குங்காலத்தில் ‘பிரியேன்’ என்று சொல்லுவதானது, திடீரென்று பிரிந்துபோனால் இறந்துபடுவள் என்று, உலகில் பிரிவு என்று ஒன்று உண்டென்று உபாயமாகப் பிரிவைப்பிரஸ்தாவித்துப் பிறகு பிரியவேணுமென்று கருதியேயாம். ஆகவே, ‘பிரியேன்’ என்ற வார்த்தையில் பிரிவை உணர்த்துவதே முக்கிய நோக்கமாகும் என்பது நாயகியின் கொள்கையாம் அந்த வார்த்தையையும் இப்போது தன்வாயாற் சொன்னால் வாய் வெந்துபோம் என்று நினைத்துப்போலும் ‘ஆதுகொலோ’ என்கிறாளிவள்.

‘பிரியேன்’ என்கிற வார்த்தை செவிப்பட்டவளவிலேயே பிரிவு உண்டானதாகவே நிச்சயித்து மேனி மெலிந்து வளைகழலப் பெறுவது இயல்பாதலால்; அங்கம் மெலிய வளைகழல்; என்றது.

ஐங்கணைவில்லி = ‘பஞ்சபாணன்’ என்பது மன்மதனுக்கு வழங்கும்பெயர் “மதனன் பஞ்ச பாணமாவன, முல்லை யசோகு முழுநீலம் சூதப்பூ, அல்லி முளரியோடைந்தென மொழிப.” என்ற திவாகதநிகண்டினால் பஞ்சபாண வகைப்பெயர் உணர்க.

ஈற்றடிக்குப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானம் காண்மின்:- “அவன்கையிலம்புதானே தாரகமான தேசத்திலே கொடுபோய்ப் பொகப்படப்பாருங்கோள். அவனோடே கூடினவாறே பூக்கொய்கையும் ஜலக்கிரிடை பண்ணுவதுமாய் தாரகமாமிறே.” என்று. (இதன் கருத்தாவது-) மன்மதன் இப்போது நம்மை வருத்துவது புஷ்யமயமான அம்புகளைக் கொண்டுதானே; ஆக அம்பாகிய புஷ்பங்கள் தாமே அவனுள்ளவிடத்தே நாம் சென்று சேர்ந்தபின்பு நமக்குப்பாதமாகாதே போக்யமாகுமன்றோ; இருவருமாய்ச்சேர்ந்து பூப்பறிக்கவும் ஜவக்ரிடைக்கு உபகரணமாகவும் பெற்று அந்தப்பூக்களே போக்யமாகுமே; ஆகையாலே அவ்விடத்திலே கொண்டுபோய்ச் சேர்த்திடுங்கள் என்பதாம் ஈற்றடியில் ‘பணை’ என்பதை ‘பண்ணை’ என்பதன் தொகுத்தலாகக்கொண்டு நீர்நிலையென்று பொருளுரைக்கவுமாம்.

 

English Translation

A dark God with beautiful red eyes entered here, -my limbs grew friend, my bangles fell, -and said, "Is this not it?", then left, Alas, I cannot play a partner to the love games of Madana, the sugarcane-bow wielder anymore.  Carry me now to his abode in kurungudi amid cool graves dripping with nectar

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain