(1793)

எல்லியும் நன்பக லுமிருந்தே ஏசிலும் ஏசுக ஏந்திழையார்

நல்லர் அவர்திறம் நாமறியோம் நாண்மடம் அச்சம் நமக்கிங்கில்லை

வல்லன சொல்லி மகிழ்வரேனும் மாமணி வண்ணரை நாம்மறவோம்

கொல்லை வளரிள முல்லைபுல்கு குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.

 

பதவுரை

ஏந்து இழையார்

-

ஆபரணங்களணிந்துள்ள பெண்கள்

எல்லியும் நல்பகலும் இருந்தே

-

இரவும் பகலும் போதுபோக்கற்று இருந்துகொண்டு

ஏசிலும் எசுக

-

பழிசொன்னாலும் சொல்லட்டும்:

நல்லர்

-

(அவர்கள்) பாக்யவதிகளன்றோ?

அவர் திறம் நாம் அறியோம்

-

அவர்களைப் பற்றி நமக்கு ஆராய்ச்சிவேண்டா;

நமக்கு

-

நமக்கு

நாண் மடம் அச்சம் இங்கு இல்லை

-

பெண்மைக்குணங்கள் அற்றுப்போயின;

வல்லன சொல்லி

-

தங்களாலியன்றவற்றை (வாய் கூசாமல்) சொல்லி

மகிழ்வரேலும்

-

சிரித்தார்களேயாகிலும்

நாம்

-

நாம்

மா மணி வண்ணரை

-

நீலமணிவண்ணரான பெருமாளை

மறவோம்

-

மறக்கமாட்டோம்;

(ஆகையாலே)

கொல்லை

-

தோட்டங்களிலே

வளர்

-

வளர்கின்ற

இள முல்லை

-

இளமுல்லைக் கொடிகள்

புல்கு

-

படரப்பெற்ற

குறுங்குடிக்கே, என்னை உய்த்திடுமின்:-

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஊர்ப்பெண்டுகள் இரவும் பகலும் வேறு போதுபோக்கற்று எனது நிகழ்ச்சியைப் பற்றியே வம்புகள் பேசிப் பழிகூறினும் கூறுக; அவர்களுக்கும் நமக்கும் என்ன சேர்த்தியுண்டு? அவர்களுடைய வகுப்பு வேறு, நம்முடைய வகுப்பு வேறு;  நாமோ விரஹத்தாலே உடலிளைத்து வளையிழந்து வருந்துகின்றோம்;  அவர்களோ ஏந்திழையார் - ஆபரணங்களைச் சுமந்துகொண்டிருக்க வல்லவர்கள். நாம் உற்ற விஷயத்தை அவர்கள் கனவிலும் கண்டறியார்கள்;  தத்தம் நாயகரைப் பிரிந்துமறியார்கள்;  ஆகவே அவர்கள் பாக்யவதிகள்;  அன்னவர்கள் எதைச்சொல்லிலும் சொல்லுக அவர்கள் சங்கதி நமக்குத் தெரியாது; அவர்கள் நாண் மடம் அச்சம் முதலிய பெண்மைக்குணங்களைக் காத்துக்கொண்டு நிலைகுலையாதே யிருக்கவல்லவர்கள்;  நமக்கோ அவை அற்றுப்போயின நம்மைவிட்டுப் போனவன் அவற்றையும் கொள்ளைகொண்டு போயினான் போலும்;  அவர்கள் தங்களாலான மட்டும் வசைகூறிச் சிரிக்கட்டும்;  அவர்கள் தாம் என்னவென்று சொல்லப்போகிறார்கள்? ;அவனை மறந்திலன்; என்றுதானே சொல்லிச் சிரிக்கப்போகிறார்கள்; அப்படியே சொல்லிச் சிரிக்கட்டும்; அவனை நாம்மறக்கக் கடவோமல்லோம்;  மறப்பு நம்கையிலே கிடக்கிறதோ? அவனுடைய மாமணிவண்ணவடிவு நம்மை மறக்கப்பண்ணுமோ? இவர்கள் ஏசுவதெல்லாம் இன்னமும் அவனையே ஸ்மாpப்பதற்கு எருவிட்டதாகுமத்தனைசிரிப்பார்கண்வட்டத்திலே நமக்கு என்ன காரியம்? மறக்கவொண்ணாத வடிவைக் கண்ணாரக்கண்டு அநுபவிக்கலாம்படியான திருக்குறுங்குடியிலே என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்திடுங்கள் என்றாளாயிற்று.

நாண்மடம் அச்சம் = இவை பெண்டிர்க்கு உரிய குணங்கள் ; நாணமாவது-தகாத காரியத்தில் மனமொடுக்கி நிற்பது, மடமாவது-எல்லாமறிந்தும் அறியாதுபோலிருத்தல். அச்சமாவது-மிகச்சிறிய காரணத்தினாலும் மனம் நடுங்குதல். (‘பயிர்ப்பு’ என்பது நான்காவது குணம்; அதாவது-பரபுருஷர்களின் ஆடை முதலியன தம்மேற்பாட்டால் அருவருப்புக்கொள்வது.) நாண்மடமச்சம் நமக்கிங்கில்லை; என்றது-ப்ராவண்யம் மீதூர்ந்தபடியைச் சொன்னவாறு. வரம்புகடந்த அன்பின்மே லெல்லையில் நிற்பார்க்கு நாணம் முதலியவற்றைக் காத்துக்கொள்ளல் ஆகாதன்றோ.

குறுங்குடிக்கு “இளமுல்லைபுல்கு” என்ற விசேஷணமிட்டதற்கு ஒரு கருத்துண்டு; கொடிகள் ஆதாரமற்றுத் தரைக்கிடை கிடக்கவேண்டாமல் கொள்கொம்பிலே படரும் தேசமன்றோ அது; அப்படியே எனக்கும் தரிப்புக்கிடைக்குமே அங்கு-என்றவாறு. “கோல்தேடியோடுங் கொழுந்ததே போன்றதே மால்தேடி யோடும் மனம்,”

 

English Translation

Let them sit and criticise night and day if they wish to, -those jewlled ones are good girls, -we cannot match or counter them, we have no shame or reserve or fear.  Even if they say clever things and laugh at us, we cannot forget our gem-hued Lord.  Carry me now to his abode in Kurungudi, amid groves of fresh Mullai flowers

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain