(1790)

காலையும் மாலையொத் துண்டு கங்குல் நாழிகை யூழியின் நீண்டுலாவும்,

போல்வதோர் தன்மை புகுந்துநிற்கும் பொங்கழ லேயொக்கும் வாடைசொல்லி

மாலவன் மாமணி வண்ணன்மாயம் மற்று முளவவை வந்திடாமுன்கோல

மயில்பயி லும்புறவில் குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்.

 

பதவுரை

காலையும்

-

காலைப்பொழுதும்

மாலை ஒற்றுண்டு

-

மாலைப்பொழுதுபோதலு யிருந்து நலிகின்றது;

கங்குல் நாழிகை

-

இரவின் நாழிகை

ஊழியின்

-

கல்பகாலத்திற் காட்டிலும்

நீண்டு

-

பெருகி

உலாவும் போல்வது ஓர்தன்மை புகுந்து நிற்கும்

-

(யமபடரைப் போலே) ஸஞ்சரிக்கிறாப் போன்றத்தன்மை பெற்றிருக்கின்றது,

வாடை சொல்லில்

-

வாடையின் தன்மையைப் பற்றிச் சொல்லப் புகுந்தால்

பொங்கு அழலே

-

எரிகின்ற நெருப்பே போன்றிருக்கும்;

மாலவன்

-

மிகப் பெரியவனாயும்

மா மணிவண்ணன்

-

நீலமணிவண்ணனாயு மிருக்கிற அப்பெருமானுடைய

மாயம்

-

(நம்மைக் கொல்வதற்கான மாயச் செய்கைகள்)

மற்றும் உள

-

இன்னமும் பலவுண்டு;

அவை வந்திடா முன்

-

அவையும் தலைகாட்டுவதற்கு முன்னமே

கோலம் மயில் பயிலும் புறவின் குறுங்குடிக்கே,

-

அழகிய மயில்கள் நெருங்கி வாழ்கிற புறவுகளையுடைய என்னை உய்த்திடுமின்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இராப்பொழுதில் விரஹநோயால் வருந்தின பரகாலநாயகியை நோக்கித் தோழியானவள் ;நங்காள்! வருந்தாதே; சிறிது பல்லைக்கடித்துப் பொறுத்திரு; இதோ காலைப்பொழுது வந்திடும்; ஆறியிருக்கலாம்;, என்று சொல்ல, அதுகேட்ட நாயகி ;அந்தோ! எனக்குக் காலைப் பொழுதாகிலென்? மாலைப் பொழுதாகிலென்? இரண்டும் வாசியற்றிருக்கின்றது காண்; என்கிறாள். இதன் கருத்து யாதெனில்; திருக்குறளில்-1. “காலைக்குச் செய்த நன்றி என்கொலல்? எவன்கொல்யான், மாலைக்குச்செய்த பகை?” என்று ஒரு குறளுண்டு; அதாவது காலைப்பொழுது வருத்துகின்றதில்லை, மாலைப்பொழுது மாத்திரம் வருத்துகின்றது; இப்படியாகுமாறு நான் காலைக்கு என்ன வுபகாரம் செய்தேனோ? மாலைக்கு என்ன அபகாரம் செய்தேனோ? அறியேன் என்பதாம் 2. “காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலருமிந்நோய்” என்று மற்றொரு குறளுமுண்டு; அதாவது- காமநோயாகிய பூ காலைப்பொழுதில் அரும்பிப் பகற்பொழுதெல்லாம் போரும்பாய் முதிர்ந்து மாலைப் பொழுதின்கண் மலராநிற்குமென்பதாம். காலை தூங்கியெழுந்த பொழுதாதலால் கனவிலே புணர்ந்தமை நினைந்து பொறுத்தல் பற்றி ;காலையரும்பி; என்றும், பிறகு பொழுது செல்லச் செல்ல அதுமறந்து பிரிவு நினைத்துப் பொறாளாதல்பற்றிப் ;பகலெல்லாம் போதாகி; என்றும், தம்தம் துணைகளை நினைத்து மீண்டுவந்து சேரும் விலங்குகளையும் மக்களையுமுண்டு தான் அக்காலத்து அநுபவித்த இன்பத்தை நினைந்து பொறாமைமிகுதல்பற்றி ;மாலைமலரும்; என்றும் சொல்லிற்று. ஆகவே, காலைப் பொழுது சிறிது ஆறியிருத்தற்கு உறுப்பானது என்று பொதுப்படையாகக் கொள்ளப்படும்; இக்கொள்கை கொண்டே தோழியானவள் ;நங்காய்! விரைவில் காலைப்பொழுது வந்திடும்; பொறுத்திரு; என்றாள். இப்பரகால நாயகிக்கு இரவில் சிறிதேனும் உறக்கமிருந்தாலன்றோ கனவு நோவும், அதில் எம்பெருமானோடு புணர்ந்தமை பாவிக்கவும், உறங்கி யெழுந்ததும் அதனை நினைந்து பொறுத்திருக்கவும் இவ்வழியாலே காலைப்பொழுதை ஆறியிருத்தற்குடலாகக் கொள்ளவும் ப்ரஸக்தியுண்டாகும்; இவை யொன்றுமில்லாமையாலே மாலையோடு காலையோடு வாசியில்லை என்றாளாயிற்று.

தோழீ! உன் கருத்தின்படியே காலைப்பொழுதை ஆச்வாஸஹேதுவாகக் கொண்டாலும் அந்தப் பொழுது வருவதற்கு வழியொன்றுங்காணோமே; (கங்குல் நாழிகை ஊழியின் நீண்டுலாவும் போல்வதோர்தன்மை புகுந்து நிற்கும்) என்கிறாள். நாயகனைப் பிரிந்த நாயகி ஆற்றதாளாய் அவனில்லாமல் இரவுகழிக்க முடியாதபடியைச் சொல்லும்போது ;ஒரு நாழிகைப் பொழுதானது எத்தனையோ யுகமாய்ப் பெருகிச் செல்லுகின்றதே!; என்று இரவு நீட்டித்தலைச் சொல்லுவது வழக்கம்; அப்படியே இப்பரகால நாயகியும் சொல்லுகின்றாள் ; நாயக நாயகிகள் கூடியிருக்கும் காலத்தில், நீண்ட காலங்களும் ஒருநொடிப் பொழுதாய்க் கழிந்து விடுவமென்பதும், பிரிந்தகாலத்து ஒரு கணப்பொழுதும் பல்லூழியூழிகளாய்க் கழியுமென்பதும் அநுபவஸித்தம் ; “பலபலவூழிகளாயிடும், அன்றியோர் நாழிகையைப் பலபல கூறிட்ட கூறாயிடும்..... அன்பர் கூடிலும் நீங்கிலும்யாம் மெலிதும்” என்ற திருக்குறளையும், “காதலரொடு நாம் இன்புற்ற முன்னாட்களில் குறியவாய், அவர் பிரிவாற்றேமாகின்ற இந்நாள்களிலே நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள்” என்ற அதன் உரையையும் இங்கு உணர்க. நாழிகை - ;நாகொ;; என்னும் வடமொழியின் திரிபு. ஊழியின் நீண்டுலாவும் போல்வதோர்தன்மை புகுந்து நிற்கும் - ஊழிப்பொழுது தான் மிகநீண்டதென்று கேள்விப்பட்டிருந்தேன் ; அதிற்காட்டிலும் நீண்டது போலிருக்கின்றதென்கை.

மாயவன் மாமணிவண்ணன் மாயம் மற்றுமுள ஸ்ரீ நம்மை மாய்ப்பதற்கு அவன் பலபல மாயங்களைப் படைத்து வைத்திருக்கிறான்;  இராப்பொழுது, வாடை என்ற இவ்வளவேயல்ல; அன்றில், தென்றல், கடலோசை, குழலோசை, திங்களம்பிள்ளை என்றாற்போலே மற்றும் பல மாயங்களையும் படைத்திருக்கிறான்; அவையும் நம்மை முடிக்கத் தலைநாட்டுக்கு முன்னமே இவையெல்லாம் நமக்கு அநுகூலமாம்படியான இடத்திலே என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்திடுங்களென்றாளாயிற்று.

 

English Translation

The morning drags heavily into the evening Every hour of the night stretches into eternity with the same destructive power.  The damp breeze is like the leaping flames of the furnace.  Alas, the gem-hued Lord, Mal, has many such wonders.  Before he unleashes them, carry me to his abode in Kurungudi, where beautiful peacocks dance in groves

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain