(1615)

நெடியா னே கடி ஆர்கலி நம்பீ நின்னை யேநினைந் திங்கிருப் பேனை,

கடியார் காளைய ரைவர் புகுந்து காவல் செய்தவக் காவலைப் பிழைத்து

குடிபோந் துன்னடிக் கீழ்வந்து புகுந்தேன் கூறை சோறிவை தந்தெனக் கருளி,

அடியே னைப்பணி யாண்டுகொ ளெந்தாய் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.

 

பதவுரை

நெடியானே

-

எல்லார்க்கும் மேற்பட்டவனே!

கடி

-

(பூமிக்கு) அரணாகிய

ஆர்கலி

-

ஸமுத்ரத்தில் (பள்ளி கொண்டிருக்கிற)

நம்பீ

-

பூர்ணனே!

எந்தாய்

-

எம்பெருமானே!

அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!-,

நின்னையே நினைந்து

-

உன்னையே தியானித்துக் கொண்டு

இங்கு இருப்பேனை

-

இங்கு இருக்கிற என்னை

கடியார்

-

க்ரூரங்களாயும்

காளையார்

-

(ஹிம்ஸிப்பதில்) யௌவன பருவ முள்ளனவாயுமிருக்கிற

ஐவர்

-

பஞ்சேந்திரியங்கள்

புகுந்து

-

என்னிடம் நெருங்கி

காவல் செய்த அக் காவலை பிழைத்து

-

(என்னை உன்னிடம் வரவொட்டாதபடி)தடை செய்த அந்தச் சிறைக்கு தப்பிவந்து

உன் அடி கீழ்

-

உன் திருவடிகளின் கீழே

குடி போந்து

-

குடியிருக்கக் கருதி

வந்து புகுந்தேன்

-

வந்து சேர்ந்தேன்;

எனக்கு

-

அடியேனுக்கு

கூறை சோறு இவை தந்தருளி

-

துணியும் சோறுமாகிய இத் திருவடிகளைத் தந்தருளி

அடியேனை பணி ஆண்டு கொள்

-

அடியேனை நித்ய கிங்கரனாக்கிக் கொள்ள வேணும்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆர்கலி என்று கடலுக்குப் பெயர்; திருப்பாற்கடலை நினைக்கிறது.  ஆர்த்தர்களுடைய கூக்குரல் கேட்டுப் பதறி யெழுந்து வந்து ரக்ஷிப்பதற்காக நீ திருப்பாற்கடலில் உறங்குவான்போல் யோகு செய்யும் பெருமானா யிருக்கிறபடியை அநுஸந்தித்து அத்திருக்குணத்தில் ஈடுபட்டிருக்கின்ற அடியேனைப் பஞ்சேந்திரியங்கள் சிறைப்படுத்தி நலிந்த நலிவுக்குத் தப்பிப் பிழைத்து உன் திருவடிகளிலே வந்து சேர்ந்தேன்; இனி அடியேனுக்கு வேண்டிய கூறை சோறுகளைக் கொடுத்தருளி நித்ய கைங்கரியங் கொண்டருள வேணுமென்கிறார்.

பஞ்சேந்திரயங்களுக்குக் கொடுத்த ‘காளையர்’ என்னும் விசேஷணத்தின் கருத்தைப் பெரியவாச்சான் பிள்ளை வெளிட்டருளுகிறார் காண்மின் :– “நெஞ்சில் நன்மையின்றிக்கே பிறரை நலியநலிய இளகிப்பதியாநின்ற பருவத்தையுடைய ஐவர்” என்பது வியாக்யான ஸ்ரீஸூக்தி.  “காளையே எருது பாலைக்கதிபன் நல்லிளையோன் பேராம்” என்பது நிகண்டு; நல்லினையோனென்ற பொருள் இங்குக் கொள்ளப்பட்டது; ஹிம்ஸிக்குந்திறத்தில் மூப்பு இன்றியே யௌவனங்கொண்டிருக்கிற இந்திரயங்களென்றபடி.

கூறை சோறிவைதந்தெனக்கருளி = 1. “உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னம் வெற்றிலையுமெல்லாங்கண்ணன்” என்றும் 2. “கூறைசோறிவை வேண்டுவதில்லை” என்றும் சொல்லுமாபோலே கூறைசோறு முதலிய போக்ய போகோபகரணங்களில் விருப்பமற்றிருக்கின்ற இவ்வாழ்வார் கூறை சோறுகளை விரும்ப ப்ரஸக்தி யில்லாமையாலே ‘எனக்குக் கூறையும் சோறுமாயிருக்கிற இத்திருவடிகளைத் தந்தருளி’ என்று உரைக்கப்பட்டது.- வாஸுதேவஸ் ஸர்வமிதிஸ மஹாத்மா ஸுதுர்லப” (எல்லாப்பொருளும் எம்பெருமானே யென்றிருக்கும் மஹாத்மா கிடைப்பதரிது) என்ற கீதாசார்யனுடைய குறை தீரவிறே ஆழ்வார்கள் திருவவதரித்தருளிற்று.

அடியேனைப் பணியாண்டுகொள் = ராஜகுமாரனாய்ப் பிறந்து முடியிழந்து போகும் தௌர்ப்பாக்யசாலிகளைப் போலாகாமே அடியேனான நான் அடிமைத் தொழில் செய்து ஸ்வரூபம் நிறம் பெறுமாறு செய்தருளாயென்கிறது.  ஸ்ரீவிபீஷணாழ்வானுக்கு வந்து புகுரலாம்படி கடற்கரை வெளியிலே வந்து நின்றாப்போலே எனக்கு உறவு முறையார் கைவிட்டவன்று  வந்து கிட்டலாம் படியன்றோ நீ திருவழுந்தூரில் வந்து நிற்கிறது, இந்நிலையிலும் அடியேன் இழந்து போகலாமோ வென்கிறது ஈற்றுவிளியினால்.

 

English Translation

O ancient Lord!  Lord of the ocean, my Master! Constantly thinking of you I escaped from the prison guarded by the five senses and came for refuges to your feet.  For a pittance fee of food and clothing, take me as your devoted servant, you must!  O Lord of western Alundur, my Master, I have attained your feet.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain