(1616)

கோவாய் ஐவரென் மெய்குடி யேறிக் கூறை சோறிவை தா என்று குமைத்துப்

போகார், நானவ ரைப்பொறுக் ககிலேன் புனிதா  புட்கொடி யாய் நெடு மாலே,

தீவாய் நாகணை யில்துயில் வானே திருமா லே இனிச் செய்வதொன் றறியேன்,

ஆவா வென்றடி யேற்கிறை யிரங்காய் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.

 

பதவுரை

புனிதா

-

பரிசுத்தனே!

புள் கொடியாய் கருடத்வஜனே!

நெடுமாலே

-

ஸர்வாதிகனே!

தீ வாய் நாக அணையில் துயில்வானே

-

(பகைவர்மேலே) நெருப்பை உமிழ்கிற ஸர்ப்பமாகிய படுக்கையில் சயனித் திருப்பவனே!

திருமாலே!, அடுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!- ;

ஐவர்

-

பஞ்சேந்திரியங்கள்

கோ ஆய்

-

என்னை நியமிப்பனவாய்க்கொண்டு

என் மெய்

-

என் சரீரத்தில்

குடி ஏறி

-

குடிபுகுந்து

கூறை சோறு இவை தா என்று

-

துணியையும் சோற்றையும் கொடு என்று

குமைத்து

-

அடர்த்துக் கொண்டிருந்து

போகார் -

-

விட்டுப்போகின்றனவில்லை;

நான்

-

அடியேன்

அவரை

-

அவ்விந்திரியங்களின் கொடுமைகளை

பொறுக்ககிலேன்

-

ஸஹிக்கமாட்டுகின்றிலேன்;

இனி செய்வது ஒன்று அறியேன்

-

உன்னையே புகலாக நான் அடைந்தேனான பின்பு (என்னுடைய ஹிதத்துக்காக) நான் செய்து கொள்ளத்தக்கது ஒன்றுமறிகின்றிலேன்;

அடியேற்கு

-

அடியேன் விஷயத்தில்

ஆ ஆ என்று

-

ஐயோவென்று

இறை இரங்காய்

-

சிறிது கிருபை செய்தருள வேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “ஐவர் புகுந்து காவல்செய்தவக்காவலைப் பிழைத்துக் குடிபோந்துன்னடிகீழ் வந்து புகுந்தேன்” என்று இந்திரியங்களுக்கு ஒருவாறு தப்பிப்பிழைத்துத் திருவடிவாரத்திலே வந்து சேர்ந்ததாகச் சொன்னார்; அதுதான் இந்நிலத்திலேயாகையாலே இந்திரியங்களின் நலிவு தொடர்ந்தே வருவதாயிருக்கிறபடியைக் கண்டு மீண்டும் கதறுகிறார். அடியேன் உன்னொருவனையே ஸ்வாமியாகக் கொண்டவனே யன்றி ஐவரை ஸ்வாமியாகக் கொண்டவனல்லேன்; அப்படியிருந்தும் ஐவர் என்னை அடக்கியாள்பவராக நின்று என் உடலிலே குடிபுகுந்து தங்களுக்கு வேண்டிய இரைகளைப் பெற வேண்டிக் குமைத்து ஒரு நொடிப்பொழுதுங் கால்வாங்குகின்றிலர்; நான் அவர்களுடைய நலிவைப் பொறுக்க மாட்டுகின்றிலேன்; அழுந்தூர் மேற்றிசை நின்றவம்மானே! நீயோ விரோதிகளைப் போக்கி ஆச்ரிதரை ரக்ஷிப்பதைத் தன்பேறாக நினைக்கும்படியான பரிசுத்தியை யுடையையாயிருக்கின்றாய்; இந்த நிலைமைக்குக் கொடிகட்டி வாழ்கின்றாய்; அடியவர்களோடு நித்யஸம்ச்லேஷம் பண்ணியிருப்பதே உனக்குத் தொழில் என்பது விளங்க அடியவர்களோடு தலைவனான திருவனந்தாழ்வானை விட்டு பிரியாதிருக்கின்றாய்; அடியவர்கட்குப் புருஷகாரம் செய்யவல்ல பிராட்டியிடத்தில் மால்கொண்டிருக்கின்றாய்; நீ இப்படிப்பட்டவனான பின்பு என்னுடைய காரியம் நீ செய்யவேண்டு மத்தனையல்லது நான் செய்வ தொன்றறியேன்; நீ தானும் மிகையாகச் செய்யவேண்டுவ தொன்றுமில்லை; ஐயோவென்று திருவுள்ளத்திலே சிறிது இரங்கியருளினாற் போதுமானது என்கிறார்.

தீ வாய் நாகனை = 1. “ஆங்கார வாரமது கேட்டு அழலுமிழும் பூங்காரரவு” என்கிற படியே பகவத் விரோதிகள் யாரேனும் வந்து புகுந்தார்களோ வென்று அஸ்தாநே பயசங்கை பண்ணி விஷாக்நியைக் கக்குவதே தொழிலாயிருப்பனாம் ஆதிசேஷன்.

நாக + அணை, ‘நாகவணை’ என்றாக வேண்டுவது ‘நாகணை’ என்றானது தொகுத்தல் விகாரம்.

 

English Translation

O Pure One!  O Bird-banner Lord! O Adorable Lord!  O Lord reclining on a serpent that spits fire!  O Lord of Sri!  Five kings attacked me and established their tyrannical resign asking me to pay tributes of food and raiment all the time.  I cannot bear their oppressive rules.  I do not know what to do Alas, You do not show pity on me. O Lord of western Alundur, my Master, I have attained your feet.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain