(1156)

வேல்கொள் கைத்தலத் தரசர்வெம் போரினில் விசயனுக் காய்,மணித்தேர்க்

கோல்கொள் கைத்தலத் தெந்தைபெம் மானிடம் குலவுதண் வரைச்சாரல்,

கால்கொள் கண்கொடிக் கையெழக் கமுகிளம் பாளைகள் கமழ்சாரல்,

சேல்கள் பாய்தரு செழுநதி வயல்புகு திருவயிந் திரபுரமே.

 

பதவுரை

கைத்தலத்து வேல் கொள் அரசர் வெம் போரினில்

-

கையிலே வேலாயுதத்தை யுடையவராக (துரியோதனன் முதலிய) அரசர்களையுடைய கடூரமான பாரத யுத்தத்தில்

விசயனுக்கு ஆய்

-

அர்ஜூனனுக்குத் துணையாகி

மணி தேர்தலத்து கோல் கொள் எந்தைபெம்மான் இடம்

-

(அவனுடைய) அழகிய தேரிலே கையில் கோல்பிடித்து நின்ற எம்பெருமானுக்கு இடமாவது:

குலவு தண் வரை சாரல்

-

கொண்டாடத்தக்க குளிர்ந்த மலைச்சாரலில்

கால் கண் கொள் கொடி கையெழ

-

வெற்றிலைக் கால்கள் கணுக்கள் தோறும் கிளைக்கின்ற (வெற்றிலைக்) கொடிகள் மிகுதியாக வளரப் பெற்றதும்

கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல்

-

பாக்கு மரங்களின் இளங்குருத்துகள் வாஸனை வீசப்பெற்ற சுற்றுப் பிரதேசங்களையுடையதும்

சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு

-

மீன்கள் துள்ளி விளையாடுகிற அழகிய ஆறானது கழனிகளிலே பெருகப் பெற்றதுமான

திரு அயிந்திரபுரமே-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலரும் எதிரிகளாய் நிறைந்து கிடந்த பாரதயுத்தத்திலே பீஷ்ம த்தோணாதிகளான மஹாவீரர் பிரயோகித்த ஆக்நோயஸ்த்ரம் முதலியவற்றால் அர்ஜூநனது தேர்அழிந்துபோகாதபடி தனது திருவடிகளின் ஸம்பந்தத்தாலே உறுதியாயிருக்கச்செய்து, அந்த அர்ஜூநனால் தாங்கமுடியாத அஸ்த்ர சஸ்த்ரங்கள் வந்தால் தன் மார்பிலே ஏற்றுக் கொள்ளும்படி அவன் தேரின் முன்புறத்திலே ஸாரதியாய்த் தங்கியிருந்து வெற்றி பெறுவித்த வீரன் வாழுமிடம் திருவயிந்திபுரம்.

அஃது எப்படிப்பட்ட தென்னில் வெற்றிலைத் தோட்டங்களும் பாக்குச் சோலைகளும் நீர்வாய்ப்புள்ள கழனிகளும் நிறையப்பெற்றது.

 

English Translation

The Lord who drove the chariot in war for Arjuna resides in cool Tiruvayindirapuram where Betel creepers climb over Areca trees and fish dance inebriated in rivers that irrigate the fields.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain