(1148)

இருந்தண் மாநில மேனமதாய் வளை மருப்பினி லகத்தொடுக்கி,

கருந்தண் மாகடல் கண்டுயின் றவனிடம் கமலநன் மலர்த்தேறல்

அருந்தி, இன்னிசை முரன்றெழும் அளிகுலம் பொதுளியம் பொழிலூடே,

செருந்தி நாண்மலர் சென்றணைந் துழிதரு திருவயிந் திரபுரமே.

 

பதவுரை

இரு தண் மா நிலம்

-

மிகக் குளிர்ந்த பெரிய பூமியை

ஏனம் அது ஆய்வளை மருப்பு அகத்தினில் ஒடுக்கி

-

வராஹ ரூபியாய் வளைந்த கோரப் பற்களினிடத்தே அடக்கினவனாயும்,

கரு தண் மா கடல் கண்  துயின்றவன்

-

கறுத்துக் குளிர்ந்து பெருத்த கடலில் யோக நித்திரை  செய்தருள்பவனாயுமுள்ள எம்பெருமானுக்கு

இடம்

-

வாழுமிடம் (எதுவென்றால்)

அம் பொழிலூடே

-

அழகிய சோலைகளினுள்ளே

நல் கமலம் மலர்தேறல் அருந்தி

-

நல்ல தாமரைப்பூவின் தேனைக் குடித்து

இன் இசை முரன்று எழும்

-

இனிய ராகங்களைப் பாடிக்கொண்டு கூத்தாடா நிற்கிற

அணி குலம் பொதுனி

-

வண்டுகளின் கூட்டங்கள் நெருங்கி

செருந்தி நாள் மலர்சென்று அணைந்து உழிதரு

-

சுரபுண்ணை மரத்தினுடைய அப்போதலர்ந்த பூவிலே போய்ச் சேர்ந்து ஸஞ்சரிக்கப்பெற்ற

திரு அயிந்திரபுரம்

-

திருவஹீந்த்ரபுரமாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முன்னடிகளில் திவ்யதேசத் தெம்பெருமானடைய சிறப்பும், பின்னடிகளில் திவ்யதேசத்தின் சிறப்பும் சொல்லப்படுகின்றன.  மேற்பாசுரங்கள் தோறும் இங்ஙனமே கண்டுகொள்க.

1 . “உளங்கனிந்திருக்கு மடியவர் தங்களுள்ளத்துள் ஊறிய தேன்”  என்னப்பட்ட பகவத் விஷயமாகிற மதுவை விரும்பியும்,  2. “போந்ததென் னெஞ்சென்னும் பொண்வண்டு உனதடிப்போதிலொன் சீராந் தெளிதேனுன்டு அமர்ந்திடவேண்டி” என்கிறபடியே ஆசார்ய பாதர விந்த ஸேவை யாகிற மதுவைப் பருகுதலையே விரதமாக வுடைத்தாகியும், ஊர்த்த்வகதிக்கு ஸாதநமாகிய இரண்டு சிறகுகள் போன்ற கரிமஞ்ஞாநங்களை யுடையராகியும் ஸாரக்ராஹிகளாயுமிருக்கின்ற ஸ்ரீவைஷ்ணவர் களை வண்டாகச் சொல்லுவது வழக்கம்.  அப்படிப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் பகவத் பாகவத போக்யதைகளை அநுபவித்த ஆநந்தத்திற்குப் போக்குவீடாக, 3. “பண்கள் தலைக்கொள்ளப்பாடி” என்கிறபடியே நாரதமுனிவர் திருப்பாணாழ்வார்தம்பிராம்மார் முதலானாரைலப் போலே இசைபாடுவ துண்டாகையாலே”இன்னிசை முரன்றெழும்”  என்றது.

பகவத் பாகவத குணாநுபவத்துக்கு வாய்த்த இடங்களே ‘பொழில்’ எனப்படும் .  செருந்தி என்று ஒரு வ்ருக்ஷ விசேஷத்தைச் சொல்லி அதன்மலரிலே சென்றணைவதாகச் சொன்னது-- 4. “தன்னொப்பா ரில்லப்பன் தந்தனன் தனதாள் நிழலே” என்றும் “வாசுதேவ தருச்சாயா” என்றும் சொல்லுகிறபடியே ஸம்ஸாரமாகிற கொடிய வெய்யிலிலே தபீக்கப்பட்டவர்களுக்கு நிழல் தந்து விடாய் தீர்க்கும் நன்மரமாகிய வாசுதேவனுடைய பாதமா மலரிற் சென்று சேர்ந்திருக்குமிருப்பைச் சொன்னபடி.  ஆக.  ஸாரக்பாஹிகளான ஸ்ரீ வைஷ்ணவர்கள் கூட்டங்கூட்டமாகத் திரண்டு பகவத் பாகவத குணுநுபவக்களிப்பாலே யாழினிசை  வேதத்தியல்களைப் பாடிக்கொண்டு பகவத் பாதாரவிந்த நிரதர்களாய் வாழுமிடம் திருவயிந்திரபுரம் என்றதாயிற்று.  இவ்வகையான ஸ்வாபதேசார்த் தங்களைப் பாசுரந்தோறும் உய்த்துணர்க.

‘அஹிந்த்ரபுரம்’ என்ற வடசொல் அயிந்திரபுரம் என் விகாரப்பட்டது.  அஹீந்த்ரன்--திருவனந்தாழ்வான்:  அவன் பூஜித்த தலமாதல் பற்றி இத்திருப்பதிக்கு இத்திருநாமமாயிற்றென்பர்.

 

English Translation

The lord who came as a boar and lifted the cool Earth on his tusk teeth reclines in the deep ocean. He also resides in Tiruvayindirapuram where bees in large numbers drink the nectar from lotus flowers, sing and dance, then fly to their hives on the tall Serundi trees in the dense groves around the temple.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain