எட்டாந் திருமொழி
(3088)
அணைவதரவணைமேல் பூம்பாவையாகம்
புணர்வது, இருவரவர்முதலும் தானே,
இணைவனாமெப்பொருட்கும் வீடுமுதலாம்,
புணைவன் பிறவிக்கடல்நீந்துவார்க்கே.
(3089)
நீந்தும்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும்,
நீந்தும் துயரில்லா வீடுமுதலாம்,
பூந்தண்புனல்பொய்கை யானைஇடர்க்கடிந்த,
பூந்தண்துழாயென் தனிநாயகன் புணர்ப்பே.
(3090)
புணர்க்குமயனா மழிக்குமரனாம்,
புணர்த்ததன்னுந்தியோ டாகத்துமன்னி,
புணர்ததிருவாகித் தன்மார்வில்தான்சேர்,
புணர்ப்பன்பெரும்புணர்ப் பெங்கும்புலனே.
(3091)
புலனைந்துமேயும் பொறியைந்துநீக்கி,
நலமந்தமில்லதோர் நாடுபுகுவீர்,
அலமந்துவீய வசுரரைச்செற்றான்,
பலமுந்துசீரில் படிமினோவாதே.
(3092)
ஒவாத்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும்,
மூவாத்தனிமுதலாய் மூவுலகும்காவலோன்,
மாவாகியாமையாய் மீனாகிமானிடமாம்,
தேவாதிதேவபெருமா னென்தீர்த்தனே.
(3093)
தீர்த்தனுலகளந்த சேவடிமேல்பூந்தாமம்,
சேர்த்தியவையே சிவன்முடிமேல்தான்கண்டு,
பார்த்தன்தெளிந்தொழிந்த பைந்துழாயான்பெருமை,
பேர்த்துமொருவரால் பேசக்கிடந்ததே?
(3094)
கிடந்திருந்துநின்றளந்து கேழலாய்க்கீழ்புக்
கிடந்திடும், தன்னுள்கரக்குமுமிழும்,
தடம்பெருந்தோளாரத்தழுவும் பாரென்னும்
மடந்தையை, மால்செய்கின்றமாலார்க்காண்பாரே.
(3095)
காண்பாரா ரெம்மீசன் கண்ணனை யென்காணுமாறு,
ஊண்பேசி லெல்லா வுலகுமோர் துற்றாற்றா,
சேண்பால வீடோ வுயிரோமற்றெப் பொருட்கும்,
ஏண்பாலும் சோரான் பரந்துளனா மெங்குமே.
(3096)
எங்கும்முளன்கண்ண னென்றமகனைக்காய்ந்து,
இங்கில்லையால் என் றிரணியன் தூண்புடைப்ப,
அங்கப்பொழுதே அவன்வீயத்தோன்றிய, என்
சிங்கப்பிரான்பெருமை யாராயும்சீர்மைத்தே.
(3097)
சீர்மை கொள்வீடு சுவர்க்க நரகீறா,
ஈர்மை கொள்தேவர் நடுவாமற்றெப் பொருட்கும்,
வேர்முதலாய் வித்தாய்ப் பரந்துதனிநின்ற,
கார்முகில் போல்வண்ணனென் கண்ணனை நான்கண்டேனே.
(3098)
கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை,
வண்ட லம்பும்சோலை வழுதி வளநாடன்,
பண்டலையில் சொன்னதமி ழாயிரத்திப்பத்தும் வல்லார்,
விண்டலை யில்வீற்றிருந் தாள்வரெம் மாவீடே