இரண்டாந் திருமொழி
(2392)
வாழ்த்துகவாய் காண்ககண் கேட்க செவிமகுடம்
தாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால், - சூழ்த்த
துழாய்மன்னும் நீண்முடியென் தொல்லைமால் தன்னை
வழாவண்கை கூப்பி மதித்து.
(2393)
மதித்தாய்போய் நான்கின் மதியார்போய் வீழ
மதித்தாய் மதிகோள் விடுத்தாய், - மதித் தாய்
மடுகிடந்த மாமுதலை கோள்விடுப்பான், ஆழி
விடற்கிரண்டும் போயிரண்டின் வீடு.
(2394)
வீடாக்கும் பெற்றி யறியாது மெய்வருத்திக்
கூடாக்கு நின்றுண்டு கொண்டுழல்வீர், - வீடாக்கும்
மெய்ப்பொருள்தான் வேத முதற்ப்பொருள்தான், விண்ணவர்க்கு
நற்பொருள்தான் நாரா யணன்.
(2395)
நாரா யணனென்னை யாளி, நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால்தன் - பேரான
பேசப் பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு
ஆசைப்பட் டாழ்வார் பலர்.
(2396)
பலர்த்தேவ ரேத்தப் படிகடந்தான் பாதம்
மலரேற விட்டிறைஞ்சி வாழ்த்த - வலராகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர்
நீர்க்கண்டன் கண்ட நிலை.
(2397)
நிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று, தேவர்
தலைமன்னர் தாமேமாற் றாக, - பலர்மன்னர்
போர்மாள வெங்கதிரோன் மாயப் பொழில்மறைய
தேராழி யால்மறைத்தா ரால்.
(2398)
ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு
மேலை யுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்,- ஞாலம்
அளந்தானை யாழிக் கிடந்தானை, ஆல்மேல்
வளர்ந்தானைத் தான்வணங்கு மாறு.
(2399)
மாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு
கூறாகக் கீறிய கோளரியை, - வேறாக
ஏத்தி யிருப்பாரை வெல்லுமே, மற்றவரைச்
சார்த்தி யிருப்பார் தவம்.
(2400)
தவம்செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம்செய்த ஆழியா யன்றே,- உவந்தெம்மைக்
காப்பாய்நீ காப்பதனை யாவாய்நீ, வைகுந்தம்
ஈப்பாயு மெவ்வுயிர்க்கும் நீ.
(2401)
நீயே யுலகெலாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தவத்தேவ தேவனும் - நீயே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்
திருசுடரு மாய இவை,