பத்தாந் திருமொழி
(423)
துப்புடை யாரை அடைவ தெல்லாம் சோர்விடத் துத்துணை யாவ ரென்றே
ஒப்பிலே னாகிலும் நின்ன டைந்தேன் ஆனைக்கு நீஅருள் செய்த மையால்
எய்ப்பு என்னை வந்து நலியும் போதுஅங்கு ஏதும்நா னுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
(424)
சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய் சங்கொடு சக்கர மேந்தி னானே
நாமடித்து என்னை அனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன்த மர்கள்
போமிடத்து உன்திறத்து எத்த னையும் புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை
ஆமிடத் தேஉன்னைச் சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
(425)
எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி நமன்தமர் பற்றும் போது
நில்லுமி னென்னும் உபாய மில்லை நேமியும் சங்கமும் ஏந்தி னானே
சொல்லலாம் போதேஉன் நாம மெல்லாம் சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும்
அல்லல் படாவண்ணம் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
(426)
ஒற்றை விடைய னும்நான் முகனும் உன்னை யறியாப் பெருமை யோனே
முற்ற உலகெல்லாம் நீயே யாகி மூன்றெழுத் தாய முதல்வ னேயா
அற்றது வாணாள் இவற்கென் றெண்ணி அஞ்ச நமன்தமர் பற்ற லுற்ற
அற்றைக்கு நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
(427)
பையர வினணைப் பாற்க டலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றி னாய்நான் முகனை
வைய மனிசரைப் பொய்யென் றெண்ணிக் கால னையும் உடனே படைத்தாய்
ஐய இனிஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
(428)
தண்ணென வில்லை நமன்த மர்கள் சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர்
மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும்ஆ காசமு மாகி நின்றாய்
எண்ணலாம் போதேஉன் நாம மெல்லாம் எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு
என்றும் அண்ணலே நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
(429)
செஞ்சொல் மறைப்பொரு ளாகி நின்ற தேவர்கள் நாயக னேஎம் மானே
எஞ்ச லிலென்னு டையின் னமுதே ஏழுல குமுடை யாய்என் னப்பா
வஞ்ச வுருவின் நமன்த மர்கள் வலிந்து நலிந்துஎன்னைப் பற்றும் போது
அஞ்சலை மென்றுஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
(430)
நான்ஏதும் உன்மாய மொன்ற றியேன் நமன்தமர் பற்றி நலிந்திட்டு இந்த
ஊனே புகேயென்று மோதும் போதுஅங் கேதும்நான் உன்னை நினைக்க மாட்டேன்
வானேய் வானவர் தங்க ளீசா மதுரைப் பிறந்த மாமாய னேஎன்
ஆனாய்நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
(431)
குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவ னேஎம் மானே
அன்று முதல்இன் றறுதி யாக ஆதியஞ் சோதி மறந்த றியேன்
நன்றும் கொடிய நமன்த மர்கள் நலிந்து வலிந்துஎன்னைப் பற்றும் போது
அன்றங்கு நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
(432)
மாய வனைமது சூதனன் தன்னை மாதவ னைமறை யோர்க ளேத்தும்
ஆயர்க ளேற்றினை அச்சுதனன் தன்னை அரங்கத் தரவணைப் பள்ளி யானை
வேயர் புகழ் வில்லிபுத் தூர்மன் விட்டுசித் தன்சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தன ராகி வல்லார் தூமணி வண்ணனுக் காளர் தாமே.