(3760)

அன்னைமீ ரிதற்கென் செய்கேன்? அணிமேருவின் மீதுலவும்,

துன்னு சூழ்சுடர் ஞாயிறும் அன்றியும்பல் சுடர்களும்போல்,

மின்னு நீண்முடி யாரம்பல்கலன் றானுடை யெம்பெருமான்,

புன்னை யம்பொழில் சூழ்திருப் புலியூர் புகழுமிவளே.

 

பதவுரை

அன்னைமீர்! இதற்கு என் செய்கேன்-

அணி மேருவின் மீது உலவும்

-

அழகிய மேருமலையின் மேலே யிருப்பதாய்,

துன்னு சூழ் சுடர்

-

செறித்து சூழ்ந்த சுடரை யுடைத்தான்

நாயிலும்

-

ஸூர்யனும்

அன்றியும்

-

அவ்வளவே யல்லாமல்

பல் சுடர்களும் போல்

-

பலவகைப்பட்ட க்ரஹநக்ஷத்ரங்களினுடைய தேஜஸ்ஸும்போலே யிருக்கிற

மின்னு நீள் முடி ஆரம் பல் கலன் தான் உடை எம்பெருமான்

-

ஒளி பொருந்தி ஓங்கின திருவபிஷேகம் ஹாரம் முதலான பல திருவாபரணங்களை யுடையனான எம்பெருமானுடைய

புன்னை அம்பொழில் சூழ் திருப்புலியூர்

-

அழகிய புன்னைச் சோலைகளாலே சூழப்பட்ட திருப்புலியூரை

இவள் புகழும்

-

இத்தலைவி (நிரநதரமாகப்) புகழ்ந்து கொண்டிராநின்றாள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தலைவியின் இந்நிகழ்ச்சிக்குத் தோழியானதான் உடன்பட்டவளல்லள் என்பதைத் தாய்மார்க்கு மெய்ப்பிக்கவேண்டி அன்னைமீரிதற்கென் செய்கேனென்று அடிக்கடி சொல்லுகிறாள் (தோழி) உங்களையுமறியாமல் என்னையுமறியாமல் நேர்ந்த இந்நிகழ்ச்சிக்கு நான் என்செய்யேனென்கிறாள். திருப்புலிவியூரெம்பெருமானது திவ்யாபரண சோபையிலே தலைவியீடுபட்டுப் பேசும்படிகளை விரித்துறைக்கின்றாள் அணிமேருவின்மீதுலவுமென்று தொடங்கி. மேருமலையின்மீது கதிராயிரமிரவி உதித்தாற்போலே திருவபிஷேகமும், நக்ஷத்ரதார கணங்கள் மின்னினாற்போலே பல ஹாராவளிகளும் மற்றும் திருவாபரணங்களும் ஜ்வலிக்குமழகை என்னவென்று சொல்லுவேனென்று இதுவே வாய்வெருவுதலா யிருக்கின்றாளிப்பெண் பிள்ளை. இவ்வளவோடும் நில்லாமல் அத்திருப்பதியின் பொழில்வளங்களையும் புகழாநின்றாள். இவற்றால் இவளுக்கு அத்தலத்தெம்பெருமானோடு கல்வி நேர்ந்ததாகவே நினைக்கலாகிறது என்பது உள்ளுறை.

 

English Translation

My Dear Ladies!  what shall I do? She sings in praise in the crown and necklace and radiant ornaments.  "Like the bright Sun on Meru, like the stars in the sky", which the Lord wears in Punnai groved sweet Tiruppuliyur

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain