(3574)

வட்கிலள் இறையும் மணிவண்ணா! என்னும் வானமே நோக்கும்மை யாக்கும்,

உட்குடை யசுரர் உயிரெல்லா முண்ட ஒருவனே என்னுமுள் ளுருகும்,

கட்கிலீ உன்னைக் காணுமா றருளாய் காகுத்தா! கண்ணனே! என்னும்,

திட்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்! இவள்திறத் தென்செய்திட் டாயே?

 

பதவுரை

(இப் பெண்பிள்ளை)

இறையும் வட்கு இலள்

-

சிறிதும் வெட்கமில்லா தவளாகி

மணிவண்ணா என்னும்

-

நீல மணிவண்ணனே! என்று கூப்பிடா நின்றாள்!

வானமே நோக்கும்

-

(யானைக்கு உதவவந்தாப்போல நமக்கும் உதவ வரக்கூடு மென்று வானத்தையே நோக்குகின்றாள்;

மையாக்கும்

-

(எதிர்பார்த்தபடி வந்து தோன்றக் காணாமையினால்) மோஹமடைகின்றாள்;

உட்கு உடை அசுரர்

-

வலிமையுடையவர் களான அசுரர்களினுடைய

உயிர் எல்லாம் உண்ட

-

பிராணன்களை யெல்லாம் கவர்ந்த

ஒருவனே என்னும்

-

அத்விதீயனே! என்கின்றாள்;

உள் உருகும்

-

உள்ளம் நீர்ப்பண்டமாய் உருகப் பெறுகின்றாள்;

கட்கு இலீ

-

கண்களுக்கு விஷயமாக மாட்டாதவனே!

காகுத்தா கண்ணனே

-

ஸ்ரீ ராம க்ருஷ்ணாவதாரங்கள் செய்து எல்லார் கண்ணுக்கும்  விஷயங்மானவனே!

உன்னை காணும் ஆறு அருளாய் என்னும்

-

உன்னை நான் கண்ணா ரக்காணும் விதம் அருளவேணுமென்கின்றாள்;

 

-

 

திண்கொடி மதிள்சூழ் திரு அரங்கக் தாய்

-

திடமான கொடிகள் விளங்கும் மதிள்களாலே சூழப்பட்ட திருவரங்கத்தில் துயிலும் பெருமானே!

இவள் திறந்து

-

இப் பெண்பிள்ளை விஷயமாக

என்செய்திட்டாய்

-

நீ செய்தது என்னே!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

(வட்கிலளிறையும்) இப்பெண்பிள்ளை இப்படிப்பட்ட நிலைமையை அடைந்தவளாம்படி இவளிடத்தில் நீர் செய்திட்டது என்னோ வென்கிறாள். இறையும் வட்கிலன் - ‘நாண்மடம அச்சம் பயிர்ப்பு’ என்னுமிவை நான்கும் மாதர்கட்கு நிரூபகம்; இவற்றுள், நாண்  (வெட்கம்) முந்துறமுன்னம் சொல்லப்பட்டதாதலால் அது மிக முக்கியமாகும்; அந்தோ! அது சிறிது மில்லையாயிற்றே யென்கிறாள். வட்கு-வெட்கம்; லஜ்ஜை. நாணமற்றுப் போயிற்றென்பது எங்ஙனே தெரிந்ததென்ன, (மணிவண்ணாவென்னும்) நான்முடையவளாயிருந்தால் கணவனுடைய நாமத்தைச் சொல்லியழைப்பாளோ? பெற்றதாய் முன்னே வடிவழைகைச் சொல்லுகின்றாளே. காமிநி ஆசைப்படுவது வடிவழகையன்றோ. தான் அகப்பட்ட துறையைச் சொல்லிக் கூப்பிடுகின்றாள்.

மணிவண்ணாவென்று ஸாமாம்யமாகவா கூப்பிடுகின்றாள்; திருநாடாளவும் கேட்கும்படியாக கவன்றோ கூப்பிடுகிறாள். கூப்பிட்டவாறே ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு உதவ மென்றெண்ணி (வானமே நோக்கும்) ஆகாசத்தையே பாராநின்றாள். பார்த்தவளவிலும் வந்து தோன்றுக் காணாமையாலே (மையாக்கும்) மயங்குகின்றாள், அறிவு கெடுகின்றாளென்கை.

சிறிது மயக்கம் தெளிந்தவாறே உட்குடையசுரருயிரெல்லாமுண்ட வொருவனே! யென்கின்றாள். தேவர்களுக்காக உடம்பு நோவக் காரியஞ்செய்து அசுரர்களோடே பொருது வெற்றிபெற்று வருவமனே! என்கிறாள். ஆண்புலிகளுக்கோ காரியஞ் செய்வது! பெண்பிறந்தார்க்குக் காரியம் செய்யலாகாதென்று திருவுள்ளமோ? பிரயோஜநாத் பரர்களுக்கேயா காரியஞ்செய்வது? அநந்ய ப்ரயோஜநர்களுக்குக் காரியம் செய்யலாககாதென்று திருவுள்ளமோ? பெருமிடுக்கர்களுக்கேயோ காரியஞ் செய்வது? அபலைகளுக்குக் காரியஞ் செய்யலாகாதென்று திருவுள்ளமோ? காரியமாகுமளவும் திருவடியைப் பற்றிக்கிடந்து, காரியம் தலைக்கட்டினவாறே மார்பு நெறித்து எதிரிடுமவர்களுக்கேயோ காரியஞ் செய்வது? அருளினபோதோடு அருளாத போதோடு வாசியற உன் திருவடிகளே தஞ்சமென்றிருப்பார்க்குத் காரியஞ் செய்யலாகாதோ? என்கிற நிர்வேதங்கள் இந்த விளியிலே தோன்றும் உட்கு-மிடுக்கு.

உள் உருகும் - அத்தலையிலுள்ள திருக்குணங்களை நினைத்தும், தன்னுடைய மநோரதம் நிறைவேறப்பெறாமை பற்றியும் நீர்ப்பண்டம்போலே யுருகின்றாள்.

கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய் என்னும்-ஒருநாளும் கண்ணுக்கும் இல்க்காதவனென்று சாஸ்த்ரங்களில பேசப்பட்டிருக்குமவனே!  உன்னை நான் காணும் வகை அருள் வேணுமென்கிறாள். நஸந்த்ருசே திஷ்ட்டதி ரூபமஸ்ய ந க்ஷிஷா பச்யதி கச்சநை நம் என்றும் நமாம்ஸசக்ஷூ அபிவீக்ஷ்தே தம் என்றும் ஒருவருடைய கண்ணுக்கும் இலக்காகாதவனென்று ஓதியிருக்கையாலே கட்கிலி யென்றது. கட்கு-கண்ணுக்கு, இலி-விஷயமாகாதவன் என்றவாறு. கண்ணுக்கு இலக்காகப் பெறதவனென்று அறிந்துவைத்து ‘காணுமாறருளாய்’ என்றால் இது அஸங்கதமன்றோ வென்னில், நசக்ஷூஷா பச்யதி கச்சநைநம் என்று ஓதின உபநிஷத்தே தஸ்யைஷ ஆத்மா விவிருணுதே தநூம் ஸ்வாம் என் என்று ஓதி வைத்திருக்கையாலே அப்பெருமான் தானே பரகதஸ்வீகாரமாகக் காட்டியருள்வது உண்டாகையாலும், அவன் தானே கீதையிலே -திவ்யம் ததாமி தேக்ஷூபச்ய மே யோகமைச்வரம் என்று திவ்ய சக்ஷூஸ்ஸைக் கொடுத்துக் காட்டி யருளினமை பரஸித்தமாகையாலும் அது பற்றசாகக் காணு மாறருளாய் என்னக்குறையில்லை. காகுத்தானாயும் திருவவதரித்து அப்படி காட்டிக் கொடுத்ததில்லையோ என்பது ‘காகுத்தா கண்ணனேயென்னும்’ என்பதில் உறையும்.

ஆமாம்; கட்கிலியானவென்னைக் காட்டிக்கொடுப்பதற்கென்றே விபவாவதாரங்கள் செய்தேன்; அப்போது வந்து தோன்றாமல் இப்போது காணுமாறருளாய் என்றால் எங்ஙனேயருளமம்படி? என்று எம்பெருமான் திருவுள்ளமாக, திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்! என்கிறாள் திருத்தாய். அவதாரகாலத்தில் இழந்தொருடையவும் இழவு தீர்க்கவன்றோ இங்கே வந்து சாய்ந்தருளிற்று. ‘வருவாரெல்லாரும் வாருங்கோள்’ என்று கொடிகட்டிக் கொண்டன்றோ கிடக்கிறது.

இவள் திறந்து என் செய்திட்டாய்-இவள் இங்ஙனே பிச்சேறுவதற்கு என்ன மருந்திட்டாய்?

 

English Translation

Shamelessly she calls, "Gem Lord", then sighs and stores into the say, "O My Lord who destroyed the Asuras!", then starts to weep: 'O My Krishna, Kakutsha, come let me see you here!", -O Ranga, surrounded by walls, what have you done to her!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain