(3572)

கங்குலும் பகலும் கண் துயி லறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும்,

சங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும் தாமரைக் கண் என்று தளரும்,

எங்ஙனே தரிக்கே னுன்னைவிட்டு என்னும் இருநிலம் கைதுழா விருக்கும்,

செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய். இவள்திறத் தெஞ்செய்கின் றாயே?

 

பதவுரை

செம் கயல் பாய் நீர் திரு அரங்கத்தாய்

-

அழகிய மீன்கள் துள்ளி திருக்காவேரி சயனித்த தருள்பவனே!

(இம்பெண்பிள்ளை யானவள்)

கங்குலும் பகலும்

-

இரவும் பகலும்

கண் துயில் அறியாள்

-

கண்ணுறங்கப் பெறுகின்றிலள்;

கண்ண நீர் கைகளால் இறைக்கும்

-

கண்ணீரைக் கைகளாலே இறைக்க வேண்டும்படி தாரை தாரையாய்ப் பெருகவிடாநின்றாள்;

சங்கு சக்கரங்கள்

-

திருவாழி திருச்சங்குகள் இதோ ஸேவை ஸாதிக்கின்றன

என்று கை கூப்பும்

-

என்று சொல்லி அஞ்ஜலி பண்ணி நின்றாள்;

தாமரை கண் என்றே தளரும்

-

(என்னைக் காடக்ஷித்த) தாமரைக் கண்களன்றோ இவை! என்று சொல்லித் தளர்கன்றாள்;

உன்னைவிட்டு எங்ஙனே தரிக்கேன் என்னும்

-

(பிரானே) உன்னைவிட்டுப் பிரிந்து தரிக்கவும் முடியுமோ? என்கின்றாள்;

இரு நிலம்

-

விஸ்தீர்ணமான பூதலத்தை

கை துழவிருக்கும்

-

கைகளாலே துழாவாநின்றாள் (ஸ்ரீ ரங்காநாதனே!)

இவள் திறந்து

-

இப் பெண்பிள்ளை விஷயத்தில்

என் செய்கின்றாய்

-

ஏது செய்வதாகத் திருவுள்ளம் பற்றியிருக்கிறாய்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

(கங்குலும் பகலும்.) பேச்சுக்கு நிலமல்லாதபடி தன் மகளுக்குண்டாயிருக்கிற நிலைமையைப் பெரியபெருமானுக்கு அறிவித்து இவள் விஷயமாக நீர் செய்தருள் நினைக்கிறது என்னோ? என்று கேட்கிறாள் ஸ்ரீபராங்குச நாயகியின் திருத்தாய்.

கங்குலும் பகலும் கண்துயிலறியாள்- கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே என்று (திருவித்தத்தில்) அருளிச் இவ்வாழ்வாரேயாதலால் இரவோடு பகலோடு வாசியறக் கண்துயிலாதே இவர்க்கு. ஸம்ஸாரிகள் உறக்கமே யாத்திரையாயிருப்பர்கள். ஆழ்வார் இந்நிலத்திலிருந்துவைத்தே இமையோர் படியாயிருப்பர். விசாரமுள்ளவர்கட்குக் கண்ணுறங்குமோ? என்றுகொல் சேர்வாந்தோ என்றும் எந்நாள்யானுங்னையினிந்து கூடுவனே என்றும் இடையறாத விசாரங்கொண்ட விவர்க்குக் கண்ணாறங்க விரகில்லையன்றோ. “கண்துயில் அறியாள்’ என்றதன் கருத்தை நம்பிள்ளை காட்டியருளுகின்றார் -“ஸம்ச்லேஷத்தில் அவன் உறங்கவொட்டான்; விச்லேஷத்தில் விரஹவ்யஸநம் உறங்கவொட்டாது; ஆகையாலே இவளுக்கு இரண்டு படியாலும் உறக்கமில்லாமையாலே அறியாளென்கிறது.”

கண்ணநீர் கைகளாலிறைக்கும்-தூராதமனக்காதல் தொண்டர் தங்கள் குழாங் குழுமித் திருப்புதழ்கள் பலவும்பாடி ஆராத மனக்களிப்போடழுத கண்ணீர் மழைசோர எனறும், ஏறாடர்த்ததும் ஏனமாய் நிலங்கீண்டதும் முன்னிராமானய் மாறடாத்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடி வண்பொன்னிப் பேராறு போல்வருங் கண்ணநீர் கொண்டு அரங்கன் கோயில் திருமுற்றஞ் சேறு செய் தொண்டர் என்றும் சொல்லுகிறபடியே எம்பெருமானுடைய ஒவ்வொரு குணசேஷ்டிதங்களை நினைத்துத் தாரை தாரையாய்க் கண்ணீலீ பெருகவிடுவது பக்தாகளுக்கு ஒரு நித்யக்ருத்யமாதலால் அதனைச் சொல்லுகிறது. கைளாவிறைக்கு மென்றது கண்ணீரின் மிகுதி சொன்னபடி.

சங்கு சக்கரங்கனென்று சைகூப்பும் - கண்ணீர்;  பெருகாநிற்கச்செய்தே சங்கும் சக்கரமும் சிரித்த முகமும் தொங்கும் பதக்கங்களுமாய் நம்பெருமாள் ஸேவை ஸாதிக்கிற அழகு காண்மின் காண்மின! காண வாரீர்! என்று சொல்லி பாவநாப்ரகர்ஷத்தாலே சங்கு சக்சரங்களை நோக்கிக் கை கூப்புகின்றாள். இன்னாரென்றறியேன் என்று பரகாலநாயகி அஸாதாரண லக்ஷ்ணங்களைக் காணநிற்கச் செய்தேயும் இன்னாரென்று அறுதியிடமாட்டாதே பேசுகிறாள்; இப்பராங்குச நாயகி திருவாழி திருச்சங்குகளைச் காணாதவளவிலும் கண்டதாக நினைத்து வாயால்மொழிந்து அஞ்ஜலி பந்தம் பண்ணாநின்றாள்.

தாமரைக்கண்ணென்றே தளரும்- “தாமரைக் கண்களால் நோக்காய்” என்று சொல்ல வேணுமென நினைத்துத் தொடங்கினாள்; தாமரைக்கண் என்ற வளவிலே விகாரப்பட்டு மேலே சொல் எழமாட்டாமல் தளர்கின்றாள். (திருவிருத்தத்தில்) பெருங்கேழலார் தம்பெருங்கண் மலர்ப்புண்டரீகம் நம்மேல் ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம் என்று அத்தலையில் திருக்கிண்ணோந்தமடியாகவே தாம் ஒரு பொருளாகப் பெற்றதாக அருளிச் செய்தாராகையாலே அந்தத் திருக்கண்களை நினைத்து என்னை இவ்வளவனாக ஆக்கின திருக்கண்களுக்கு இப்போது உபேக்ஷிக்கை பணியாயிற்றோ!” என்கிறளாகவுமாம்.

உன்னைவிட்டு எங்ஙனே தரிக்கேன் என்னும்- உண்டியே உடையே உகந்தோடுமிம் மண்டலத்தவரிலே என்னையும் ஒருத்தியாக (-ஸம்ஸாரியாக) வைத்திருந்தால் நான் சூது சதுரங்கமாடியும் விஷயாந்தரங்களிலே மண்டியம் உறங்கியும் ஓடிய முழன்றும் ஒருவாறு போதுபோக்கி;த் தரித்திருக்கமாட்டேனோ? வேறொன்றால் தரிக்கவொண்ணாதபடி என்னை இப்படியாக்கி இப்போது கைவாங்கிநிற்கிறயே! பிரானே! இது  தகுதியோ வென்கிறாள். கார்கலந்தமேனியான் கைகலந்தவாழியான் பார்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான் சீர்கலந்த சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையினாழ்; துயரை என்னினைந்து போக்குவரிப்போது என்று அடியிலே பேசினளரன்றோ இவர். கார்கலந்த சொல்லும், பார்த்தை வல்வயிற்றான் சீர்கலந்த சொல்லும, பாம்பணையான் சீலீகலந்த சொல்லும், பார்த்தை போதுபோக்கலாமேயன்றி வெறொன்றால் போதுபோக்கலாஜீது என்று அறுதியிட்டார். எப்போதும் சீர்கலந்த சொல்நினைத்த போதுபோக்க வொண்ணுமோ? இடையிடையே காட்சியும் வேண்டாவோ? காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன் என்று பேசுவதற்கும் இலக்குக் கிடைத்தாலன்றோ தரிக்கலாவது என்றிருக்கிறாள் போலும்.

எங்ஙனே தரிக்கே னென்றவுடனே வரக்காணாமையாலே இருநிலம் கைதுழா விருக்கும். “மஹாப்ருதிவி ஒரு பீங்கானுக்குட்பட்ட சத்தனபங்கம்பட்டது படாநின்றது” என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி ‘துழாவியிருக்கும்’ என்பது தொக்கு ‘துழாவிருக்கும்’ என்று கிடக்கிறது. நிலத்தைத் துழாவியிருத்தல் ஒருவகையான உந்மாத க்ருத்யம்.

செங்கயல்பாய்நீர்த் திருவரங்கத்தாய்!-இங்கே கயலை நினைப்பூட்டுவது ஒரு கருத்தாலேயாம். ந ச ஸீதா த்வயா ஹீ நு ஹீநா ந சாஹமபி ராகவ!, முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலாத் மத்ஸ்யாவிவோத்த்ருதௌ என்று பண்டே சொல்லிக் கேட்டிருக்கின்றயே, நீரை விட்டுப் பிரிந்த மீன் பட்டது படுமிவள் என்பதை யறிந்துவைத்தும் இங்ஙனே பிரிந்திருத்தல் தகுதியோ வென்று காட்டுகிறபடி. என் செய்கின்றாயென்றது-என்ன செய்வதாக ஸங்கல்பித்திருக்கிறாய் என்றபடி. “உன்மனத்தால் என்னினைந்திருந்தாயென்கிறபடியே ப்ராப்திக்கு உபாயம் அவன்னினைவு என்கிற ஸ்ரீவசநபூஷண திவ்யஸூக்தி இங்கே அநுஸந்தேயம்.

 

English Translation

O Lord of Tiruvarangam reclining on fish-dancing waters, what have you done to my girl? She knows no sleep through night and day, she doles out tears by the handfull. She folds her hands, and says "discus", then "lotus-Lord", and swoons.  "How can I live without you?", she weeps then feels the Earth

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain