(1508)

ஆளும் பணியு மடியேனைக் கொண்டான் விண்ட நிசாசரரை

தோளும் தலையும் துணிவெய்தச் சுடுவெஞ் சிலைவாய்ச் சரந்துரந்தான்

வேளும் சேயு மனையாரும் வேற்க ணாரும் பயில்வீதி

நாளும் விழவி னொலியோவா நறையூர் நின்ற நம்பியே.

 

பதவுரை

அடியேனை

-

அடியேனை

ஆளும் பணியும் கொண்டான்

-

சேஷபூதனாகவும் நித்யகிங்கரனாகவும் திருவுள்ளம் பற்றினவனும்

விண்ட நிசாசரரை

-

பிரதிகூலரான ராக்ஷஸர்களின்

தோளும் தலையும் துணிவு எய்த

-

தோள்களும் தலைகளும் துண்டு துண்டாம்படியாக

சுடு வெம் சிலை வாய்

-

மிகக்கடூரமான வில்லில் நின்றும்

சரம்

-

அம்புகளை

துரந்தான்

-

பிரயோகித்தவனுமான பெருமான் (யாவனென்னில்)

வேளும் சேயும் அனையாரும்

-

மன்மதனோடும் ஸுபரஹ்மண்யனோடும் ஒத்த அழகிய புருஷர்களும்

வேல் கணாரும்

-

வேல்போன்ற கண்களையுடைய மாதர்களும்

பயில் வீதி

-

வாஸஞ்செய்யப்பெற்ற திருவீதிகளை யுடைத்தாய்,

நாளும்

-

எப்போதும்

விழவின் ஒலி ஓவா

-

உத்ஸவகோலாஹலங்கள் ஓயாதிருக்கப் பெற்றதான

நறையூர்

-

திருநறையூரில்

நின்ற

-

நித்யவாஸம் பண்ணகிற

நம்பி

-

ஸ்வாமி

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (அடியேனை அருளும் பணியுங் கொண்டான்) ஆட்கொள்ளுகையாவதென்? பணிகொள்ளுகையாவதென்? என்னில்; ‘இவன் நமக்கு உரியவன்’ என்னும்படி சேஷத்வத்திலே நிறுத்துகை ஆட்கொள்ளுகையாம்; சேஷத்வத்தின் பயனான கைங்கரியத்தைக் கொள்ளுகை பணிகொள்ளுகையாம்; அடியேனுக்கு சேஷத்வ பாரதந்திரியங்களிரண்டையும் தந்தருளினவன் என்றதாயிற்று.  ‘நான் எனக்கே உரியவன்; பிறர்காலில் தலையை மடுக்கமாட்டேன்’ என்று மார்பு நெறித்திருந்த நிலைமையைப் போக்கியும் இளையபெருமாளைப் போலே எல்லாவகையான கைங்கரியங்களையும் செய்வேனாம்படிதிருத்தியும் வாழ்வித்தவனென்கை.  இப்படிப்பட்ட சேஷத்வ பாரதந்திரியங்களுக்கு இசையாதவர்களிடத்திலே நடத்தும்  சிக்ஷையைச் சொல்லுகிறது விண்டநிசாசரரை என்று தொடங்கி.  விண்ட பொருந்திவாராமல் எதிரம்புகோத்த என்றபடி.  அப்படிப்பட்டநிசாசரரை (அரக்கரை) தோளுந்தலையும் துணிவெய்த்தச்சுடுவெஞ் சிலைவாய்ச் சரந்துரந்தான். விசித்ரா தேஹஸம்பத்திரீச்வராய நிவேதிதும் – பூர்வமேவ க்ரதா ப்ரஹ்மந்! ஹஸ்தபாதாதிஸம்யுதா” என்கிறபடியே நம்மை வழிபடுவதற்கென்றே கொடுத்தகரசரணாதி அவயங்கள் இவர்கட்கு அக்காரியத்தில் உபயோகப்படுகின்றிலவாகில் இவர்கட்கு இவை எதுக்கு? என்று தோள் தலை முதலிய உறுப்புகளை யொழித்தானாயிற்று.

இப்படிப்பட்ட எம்பெருமான் இன்னமும் அடியவர்களை ஆளும்பணியுங் கொள்வதற்காகவும் ஆஸுரப்ரக்ருதிகளைத் தொலைப்பதற்காகவும் நித்யஸந்நிதி பண்ணியிருக்குமிடம் திருநறையூர்.  அஃது எப்படிப்பட்டதெனில்; அழகிற் சிறந்த ஆண்களும் பெண்களும் நிறைந்த; நித்யோத்ஸவ பக்ஷோத்ஸவமாஸோத்ஸவங்கள் இறைப்பொழுதும் மாறாமல் எப்போதும் உத்ஸவ கோலாஹலங்களே மிக்கது.

“ஆளும்பணியு மடியேனைக்கொண்டான்” என்பதைப் பாட்டுக்கு வினை முற்றாகக்கொண்டு உரைக்கவுமாம்.

 

English Translation

The Lord of Naraiyur made me his and took me into his service.  He did crop many heads and arms with his bow and arrow fire.  His streets are filled with beautiful people looking like Manmatha. Daily festival sounds abound, all the year round, never ceasing.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain