(1511)

ஓளியா வெண்ணெ யுண்டானென் றுரலோ டாய்ச்சி யொண்கயிற்றால்

விளியா ஆர்க்க ஆப்புண்டு  விம்மி யழுதான் மென்மலர்மேல்

களியா வண்டு கள்ளுண்ணக் காமர் தென்றல் அலர்தூற்ற

நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே.

 

பதவுரை

ஒளியா

-

மறைந்து நின்று

வெண்ணெய்

-

வெண்ணெயை

உண்டான் என்று

-

விழுங்கின குற்றத்திற்காக

ஆய்ச்சி

-

யசோதையானவள்

விளியா

-

கோபித்து

ஒண் கயிற்றால்

-

அழகிய தாம்பினால்

உரலோடு

-

உரலோடு சேர்த்து

ஆர்க்க

-

கட்ட

ஆப்புண்டு

-

கட்டுண்டு

விம்மி அழுதான்

-

விக்கிவிக்கி அழுத பெருமான்,-

மெல் மலர்மேல்

-

மெல்லிய பூக்களின்மீது

வண்டு

-

வண்டுகள்

களியா

-

களித்து

கள் உண்ண

-

தேனைப்பருக

காமர் தென்றல்

-

அழகிய தென்றல்காற்று

அலர் தூற்ற

-

புஷ்பங்களை வீசியிறைக்க,

நளிர் வாய்முல்லை

-

குளிர்ந்த முகத்தையுடைய முல்லைப் பூக்கள்

முறுவலிக்கும்

-

புன்சிரிப்புச் செய்யுமாபோலே விகளிக்க்பபெற்ற

நறையூர், நின்ற நம்பி-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- யசோதைப்பிராட்டி தடாக்களிலே சேமித்துவைத்த வெண்ணெய் முதலியவற்றைக் களவுவழியாலே கைப்பற்றி அமுதசெய்த குற்றத்திற்காகத் தாம்பினால் கட்டுண்டு விக்கியழுத பரமஸுலபன் திருநறையூர்நம்பி காண்மின்.

இவ்விடத்துப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் ஒரு ஐதிஹ்ய மருளிச் செய்யப்படுகிறது; அதாவது –

“வங்கிப்புரத்து நம்பி பலகாலும் ‘திருவாராதன மருளிச்செய்யவேணும்’ என்று போருமாய் அவஸரஹாநியாலே அருளிச்செய்யாதே போந்தாராய், திருமலையிலே யெழுந்தருளியிருக்கச்செய்தே, ஆழ்வானுக்கும் நம்பி ஸ்ரீ  ஹநுமத்தாஸர்க்கும் அதுதன்னை யருளிச்செய்தாராய்ச் சமைகிற வளவிலே நம்பி தோற்ற, திருவுள்ளம் துணுக்கென்றஞ்சி அப்போதருளிச்செய்த வார்த்தை:– ‘என்றுமுள்ள இஸ்ஸம்ஸயம் தீரப்பெற்றோமாகிறது; நியாமகன் நியாம்யங்களிலே சிலர்க்கு அஞ்சிக் கட்டுண்டு அடியுண்டு அழுது நின்றானென்றால் இது கூடுமோ என்றிருந்தோம்; இன்று இரண்டு இழவுக்கும் நம்முடைய ஹ்ருதயம் அஞ்சி நொந்தபடியால் அதுவும் கூடும் என்று”. என்பதாம்.

இந்த ஐதிஹ்யத்தின் தாத்யரியம் வருமாறு :– வங்கிப்புரத்து நம்பியென்பவர் உடையவர் ஸ்ரீ பாதத்திலே பலகாலும் அநுவர்த்தித்து ‘அடியேனுக்குத் திருவாராதன ப்ரயோகம் உபதேசிக்கவேணும்’ என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்; ஆனாலும் உபதேசிக்க உடையவர்க்கு அவகாசப்படாமலே போயிற்று; இப்படியிருக்கையில் ஒருநாள் கூரத்தாழ்வானுக்கும் ஹநுமத்தாஸரென்னு மொருவர்க்கும் திருவாராதநத்ரமம் உபதேசிக்க நேர்ந்து உபதேசித்து முடிகிற ஸமயத்திலே வங்கிப்புரத்து நம்பி அங்கேவந்து சேர்ந்தார்; அவரைக் கண்டவுடனே உடையவருடைய திருவுள்ளம் அஞ்சி நடுங்கிற்று; இவர் பலகால் கேட்டுக்கொண்டிருந்தும் இவர்க்கு உபதேசியா தொழிந்தோம்; இன்று இவ்விருவர்க்கு உபதேசிக்கும்போதாவது இவரையும் கூட்டிக்கொண்டு உபதேசித்திருக்கலாம்; அதுவும்  செய்யப்பெற்றிலோம்;  இவ்விருவகைக் குற்றங்களுக்கு ஆளானோமே! என்று அஞ்சிநடுங்கின உடையவர் வங்கிப்புரத்து நம்பியை நோக்கி அழகாக ஒருவார்த்தை யருளிச்செய்தார்; அதாவது – எனக்கு நெடுநாளாக இருந்த ஒரு ஸந்தேஹம் இன்று தீரப்பெற்றது; ‘ஒளியா வெண்ணெயுண்டானெ்னறு உரலோடாய்ச்சி ஒண்கயிற்றால் விளியாவார்க்க வாப்புண்டு விம்மியழுதான்’ என்றும் ‘எழில்கொள்தாம்பு கொண்டடிப்பதற்கு எள்குநிலையும்........அழுகையுமஞ்சிநோக்கு மந்நோக்கும்’ என்றும் ஆழ்வார்களருளிச்செய்கிறார்களே, உண்மையில் இப்படியிருக்குமோ, ஸர்வநியாமகனான எம்பெருமான்  நியாம்யரானாரிடத்தில் அஞ்சிவருந்தக் கூடுமோவென்று ஸந்தேஹமுண்டாயிருந்தது; இப்போது உம்மிடத்தில் நான் அஞ்சி வருந்தினேனாகையால் அது ஸம்பாவிதமேயென்று துணியப்பெற்றே னென்றாராம்.

ஒளியா – ஒளிந்து என்றபடி: ‘செய்யா’ என்னும் வாய்பாட்டிறந்தகால வினையெச்சம். ‘விளியா’ என்றதும் அதுவே.  விளிதல் – கோபித்தல்.  ஆப்புண்டு விம்மியடுதான் ‘ஆய்ச்சி தாம்பினால் நம்மைக்கட்டி வருத்துகின்றாளே’  என்று துன்பம் பொறுத்திருக்கமாட்டாமல் விம்மியழுதானல்லன்; தயிர் பால்வெண்ணெய்களையும் பெண்களையும் களவுசெய்து திரியவேண்டிய காலம் பாழாய்ப் போகிறதே!, கட்டுண்டிருக்குமளவும் அந்தத்தொழில்களைத் தவிர்ந்திருக்க வேண்டியதாயிற்றே!’ என்று வருந்தி விம்மியழுதா னென்க.

(மென்மலர்மேல் களியாவண்டு இத்யாதி.) திருநறையூரின் சோலைவளம் சொல்லுகிறது : வண்டுகள் களித்து மதுபானம் பண்ணும்படி மலர்கள் தேன்மிக்கிருக்கின்றன; தென்றற்காற்று எங்கும் வீசி மலர்களை யுதிர்த்துத் தூற்றுகின்றது; முல்லைப்பூக்கள் மலரத் தொடங்குகின்றன – இதுவாயிற்று அவ்விடத்துச் சோலைகளின் நிலைமை.

பின்னடிகளில் சொற்சேர்க்கை அமைந்த அழகு ஆராயத்தக்கது.  “மென் மலர் மேல் களியாவண்டு கள்ளுண்ணக் காமர்தென்ற லலர் தூற்ற நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்” என்ற வாக்கியத்தொரில் ஒரு அர்த்த விசேஷம் ஸ்புரிக்கும்.  அதாவது – வண்டு என்று ஒரு ஸ்ரீவைஷ்ணவனைச் சொன்னபடியால் அவன் ஏதோவிதிவசத்தால் மதுபானம் பண்ணிவிட்டானென்றும், அதைக் கண்டவொருவன் நாட்டிலே *பழி தூற்றப் புறப்படானென்றும், இவ்விரண்டையுங் கண்ட ஒரு ஸாத்விகன் “ஏதேவிதி வசத்தால் ஒருவன் ஒருகால் மதுபானம் பண்ணிவிட்டால் அதைப்பற்றி இப்படியும் ஒருவன் பழி தூற்றவேணுமோ? இவ்விருள் தருமா ஞாலத்தில் இது ஸஹஜந்தானே யென்று வாளாவிருக்க லாகாதோ வென்று வாய்விட்டுச் சிரிக்கமாட்டாமல், ‘இவையென்னவுலகியற்கை!’ எனறு புன் சிரிப்புச் செய்கிறானென்றும் தோன்றும்.  எப்படிப்பட்ட அதிகாரிக்கும் ஒரு நிஷித்தகாரியம் செய்யநேர்ந்து விடுவது ஸஹஜமென்றும்  அதைப்பற்றி ஒருவன் பழிதூற்ற நேருவதும் ஸஹஜமென்றும், ‘இது ஒரு ப்ரமாதமா?  இதைப் பழிதூற்ற வேணுமா? என்று சிலமஹான்கள் நினைப்பது முண்டென்றுமு் லௌகிகஸந்நிவேசமுணர்த்தியவாறு.

*  ‘அலர் தூற்ற’ என்றது சிலேடை : அலர் – புஷ்பமும் பழியும்.

 

English Translation

The Lord of Naraiyur came as a child and stole the white butter, -when his mother in anger bound him to a mortar, -stood weeping.  Bumble bees drink nectar-wine, the cool breeze blows and tells everyone.  The bearming Mullai flowers hearing this, grin and show their mocking smile.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain