(1513)

வள்ளி கொழுநன் முதலாய மக்க ளோடு முக்கண்ணான்

வெள்கி யோட விறல்வாணன் வியன்தோள் வனத்தைத் துணித்துகந்தான்

பள்ளி கமலத் திடைப்பட்ட பகுவா யலவன் முகம்நோக்கி

நள்ளியூடும் வயல்சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே.


பதவுரை

வள்ளி கொழுநன் முதலாய

-

வள்ளியம்மைக்கு நாதனான ஸுப்ரஹ்மண்யன் முதலான

மக்களோடு

-

புத்திரர்களோடு கூட

முக்கணான்

-

முகக்ண்ணனான ருத்ரன்

வெள்கி ஓட

-

வெட்கமடைந்து (எதிர் நிற்க மாட்டாமல் முதுகுகாட்டி) ஓடிப்கோக

விறல் வாணன்

-

பலிஷ்டனான பாணாஸுரனுடைய

வியன் தோள் வனத்தை

-

பரம்பி தோள்களாகிற காட்டை

துணித்து

-

அறுத்து

உகந்தான்

-

திருவுள்ளமுவந்த பெருமான்,

கமலத்திடை

-

தாமரைப்பூவிலே

பள்ளி பட்ட

-

போய்ப் படுத்துக்கொண்டு திரும்பிவந்த

பகு வாய் அலவன்

-

பெரிய வாயையுடைய ஆண் நண்டின்

முகம்

-

முகத்தை

நள்ளி

-

பெண் நண்டானது

நோக்கி

-

பார்த்து

ஊடும்

-

பிரணய கலஹம் பண்ணப் பெற்ற

வயல்

-

வயல்களினால்

சூழ்ந்த

-

சூழப்பட்ட

நறையூர், நின்ற நம்பி-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “பள்ளிகமலத்திடைப்பட்ட பகுவாயலவன் முகம் நோக்கி நள்ளியூடும் வயல்சூழ்ந்த” என்ற பின்னடிகட்குப் பட்டர் அருளிச்செய்யும் அர்த்த விசேஷம் குறிக்கொள்ளத்தக்கது.  தாமரைப்பூவில் படுத்துக்கொண்டிருந்த ஆண் நண்டின் முகத்தைப் பெண் நண்டு பார்த்து ஊடல் செய்யப்பெற்ற வயல் சூழ்ந்த நறையூர் என்று மூலத்திலுள்ளது.  இதன் ஆழ்பொருளைப் பட்டர் அழகாக வுரைத்தருள்வராம் : எங்ஙனேயென்னில்; - ஒரு ஆம்பல் மலரிலே நண்டு தம்பதிகள் இனிதுவாழ்கையில் கர்ப்பிணியான பேடைக்கு இனியவஸ்துக்களைக் கொணர்ந்து தரவேணுமென்று அலவன (ஆண்நண்டு)க்கு ஆசையுண்டாயிற்று; பிறகு தாமரைப்பூவிலிருந்து நல்ல மகரந்தத்தைத் திரட்டிக் கொணர்ந்து கொடுப்போமென்று விரும்பி மெல்லமெல்ல நகர்ந்து தாமரைப்பூவிலே சென்று சேர்ந்தது; அவ்வளவிலே ஸூர்யன் அஸ்தமிக்கவே அத்தாமரைமலர் மூடிக்கொள்ள அதனுள்ளே அகப்பட்டது அது; தாமரையை மலர்த்திக்கொண்டு எப்படியாவது வெளிக்கிளம்பிவிட வேணுமென்று எவ்வளவோ முயற்சிகள் செய்துபர்த்த வளவிலும் ஸூர்யோதயமானாலல்லது தாமரை மலராதாயிற்று; உடம்பைக்கொண்டு புரண்டு இரவெல்லாம் அதிலேதங்கியிருந்து.  பொழுதுவிடிந்தவாறே மலர்ந்த அத்தாமரையில் நின்றும் வெளிப்பட்டு, தாதும் சுண்ணமும் உடம்பிலே நிழலிட்டுத் தோற்றத் தன்மனைக்கு விரைந்து வந்து சேர்ந்தது;  பகற்போதில் ஆம்பல்மலர் மூடிக்கொள்ளுமே; ஆண்நண்டு அங்குவந்து சேரும் மையமும் பெண்நண்டு கிடக்கும் ஆம்பல்மலர் மூடிக்கொள்ளும் ஸமயமும் ஒன்றாயிருந்தது; இதனைப்பர்த்தால், ஆண் இரவில் வேறிடத்துத் தங்கிவந்தபடியாலும் உடம்பில் சுவடு இருந்தபடியாலும் பிரணயரோஷங்கொண்டு கதவையடைத்துக்கொண்டதுஎன்னலாம் படி யிருந்ததாம். – ஒரு புறத்தில் மலர்ந்ததாமரை மலர்களும் மற்றொரு புறத்தில் முகுளிதமான ஆம்பல் மலர்களும் விளங்கப்பெற்ற வயலாற் சூழப்பட்டது திருநறையூர் என்று வயல் நிலைமை சொன்னவாறு.

இவ்விடத்துப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான பங்க்திகள் வருமாறு :-

“(பள்ளிகமலமித்யாதி.) பட்டரருளிச்செய்யக் குறிப்பாகக் கேட்டிருப்பதொரு பாட்டு என்றருளிச் செய்வர்; - பகுவாயலவன் கமலத்திடைப் பள்ளிபட்டது; நள்ளியானது கர்ப்பதாரணத்தாலே வெஷித்திருக்க, அதுக்கு இனியது இடவேணும் என்று மதுவுக்காகப் போந்த அலவனானது தாமரைப்பூவிலே வந்திழியக்கொள்ள, போது அஸ்தமிக்கையாலே உடம்பிலே நிழலிட்டுத்தோற்ற, போதுவிடிந்தவாறே வந்தது.  இதுபோனபோதே தொடங்கிக் கதவைத் திறந்து வரவுபார்த்துக்கொடுநின்ற நள்ளியானது இத்தைக்கண்டு, ‘ராத்ரி தங்கினபடியாலும் உடம்பில் சுவடிருந்தபடியாலும் ‘இது வெறுமனல்ல’ என்று முகம்மாறிக் கதவையடைத்து உள்ளே போய்ப்புக்கது. – இத்தை பட்டர் அருளிச்செய்தவநந்தரம் பிள்ளை திருநறையூரையார் ‘ஆராய்ந்து குற்றம் நிரம்பினால் பின்னையன்றோ தண்டிப்பது’ என்ன; ‘என்செய்வோம்? கேள்வியில்லாதபடி பெண்ணரசு நாடாய்த்தே!’ என்றருளிச்செய்தார்.”

 

English Translation

The Lord of Naraiyur then in yore chopped the thousand arms of Bana while the three-eyed Siva and his son and retinue took to flight.   The Pincer-crob mole goes to sleep in the lotus flower buds of water tanks the female waiting all night long quarrels on his return to the fields.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain