(903)

ஆர்த்துவண் டலம்பும் சோலை அணிதிரு வரங்கந் தன்னுள்

கார்த்திர ளனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்

மார்க்கமொன் றறிய மாட்டா மனிசரில் துரிச னாய

மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்க னேனே

 

பதவுரை

வண்டு ஆர்த்து அலம்பும் சோலை அணி

-

வண்டுகள் ஆரவாரம் செய்துகொண்டு அலைந்துகொண்டிராநின்ற சோலைகளாலே அழகு பெற்றிருக்கிற

திருஅரங்கம் தன்னுள்

-

ஸ்ரீரங்கத்திலே (பள்ளி கொண்டருளாநின்ற)

கார்திரள் அனைய மேனி கண்ணனே

-

மேகஸமூஹத்தை ஒத்த திருமேனியையுடைய பெருமானே!

உன்னை காணும் மார்க்கம் ஒன்று அறியமாட்டா

-

உன்னை ஸாக்ஷாத்தரிக்கக் கூடிய உபாயமொன்றையும் அறியமாட்டாதவனாய்

மனிசரில்

-

மனிதர்களுக்குள்

துரிசன் ஆய

-

கள்ளனாய்,

மூர்க்கனேன்

-

பிடித்தது விடமாட்டாத மூடனாகிய அடியேன்

வந்து நின்றேன்

-

(வேறு புகலற்று, தேவர் திருமுன்பே) வந்து நின்றேன்;

மூர்க்கனேன் மூர்க்கனேன்

-

என்னுடைய தண்மையை நன்றாகக் கடாக்ஷித்தருள வேணுமென்றபடி.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் ஆழ்வாரைநோக்கி  “ஸம்ஸாரிகளுக்குங்கூட ஆகாதபடி அஸாரமான நீர் என்னிடத்தில் வந்து நிற்பதேன்?” என்று கேட்க; என்னுடைய மூர்க்கத்தனத்தாலே வந்து நின்றேன்காண் என்கிறார்.

வண்டுகள் பலவகைப்பட்ட மலர்களிற் பெருகும் தேனைப் பருகுவதற்காகப் பேராரவாரம் செய்துகொண்டு அலையாநிற்கப்பெற்ற சோலைகள் சூழ்ந்த திருவரங்கம் பெரியகோயிலில் காளமேகங்களெல்லாம்கூடி இங்ஙனே ஒரு உருவெடுத்துக்கிடக்கின்றனகொல் என்று சங்கிக்கும்படியாகப் பரமபோக்யமாய்ப் பள்ளிகொண்டருளாநின்ற பெருமானே! தேவரீரை ஸாக்ஷாத்கரிக்கப் பெறும் உபாயம் இன்னதென்று அறியமாட்டாதவர்களில் பெருங்கள்ளனாகிய அடியேன் என் நிலைமையை நினைத்துப்பார்த்தால் தேவர் திருமுன்பே வந்து நிற்கைக்கு யோக்யதையே இல்லை; ஆயிருக்கச்செய்தேயும் யுக்தாயுக்தம் ஆராயமாட்டாத மூர்க்கனாகையாலே லஜ்ஜாபயங்களற்று வந்து நின்றேனென்கை.

அவனைக் காணும் மார்க்கங்களாவன :- கர்மயோகம், ஜ்ஞாநயோகம், பக்தியோகம், அவதாரஹஸ்யஜ்ஞானம், புருஷோத்தமவித்யை, புண்யக்ஷேத்ரவாஸம், திருநாமஸங்கீர்த்தனம் முதலிய உபாயங்கள்.

 

English Translation

O Gathered-cloud-hue Lord, my Krishna, in the temple of Arangam surrounded by bee-humming groves! I know not how to realize you. Most lowly among men, I foolishly come and stand before you. O Foolish, foolish me!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain