(901)

மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோ ரிஞ்சொ லில்லை

சினத்தினால் செற்றம் நோக்கித்  தீவிளி விளிவன் வாளா

புனத்துழாய் மாலை யானே பொன்னிசூழ் திருவ ரங்கா

எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடைய கோவே.

 

பதவுரை

புனம் துழாய் மாலையானே

-

தண்ணிலததிலே வளர்ந்து செவ்விதான திருத்துழாயை மாலையாக அணிந்துள்ளவனே!

பொன்னி சூழ் திரு அரங்கா

-

காவேரியாலே சூழப்பட்ட ஸ்ரீரங்கத்தில் சாய்ந்தருள் பவனே!

என்னை ஆள் உடைய கோவே

-

அடியேனே அடிமையாகக் கொண்ட ஸ்வாமியானவனே!

மனத்தில்

-

(என்) மநஸ்ஸிலே

ஓர் தூய்மை இல்லை

-

தெளிவு கொஞ்சமும் இல்லை;

வாயில் ஓர் இன் சொல் இல்லை

-

வாயிலே ஒரு நற்சொல்லும் கிடையாது;

வாளா

-

நிஷ்காரணமாக

சினத்தினால்

-

கோபத்தாலே

செற்றம் நோக்கி

-

பகைமை தோற்றப்பார்த்து

தீ விளி விளிவன்

-

மிகக்கொடுமையாக வார்த்தை சொல்லா நிற்பேன்;

எனக்கு

-

இப்படிப்பட்ட துர்க்குணங்கள் நிறைந்த எனக்கு

இனி கதி என் சொல்லாய்

-

இனி மேல் என்ன கதி? அருளிச் செய்ய வேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “குளித்து மூன்றனலையோம்பும்” என்ற பாட்டுத் தொடங்கி ஐந்து பாட்டுகளாலே தம்மிடத்தில் ஒருவித நன்மையும் கிடையாதென்பதை வெளியிட்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! உம்மிடத்தில் ஒரு நன்மையும் இல்லையென்றீர்; இருக்கட்டும், ஒருவித நன்மையுமில்லாதாப் போலே ஒருவித தீமையுமில்லா திருந்தாலும் போதும்; அப்படி உண்டோ?” என்று கேட்க; நநிந்திதம் கர்மததஸ்திலோகே ஸஹஸ்ரசோ யந்நமயாவ்ய தாயி” என்ற ஆள வந்தாரைப்போலே என்னிடத்திலில்லாத தீமை உலகத்திலேயே இல்லை! எல்லா வித தீமைகளும் என் பக்கல் சூடிகொண்டிருக்கின்றன வென்கிறார்.

மனத்தில் ஓர் தூய்மை இல்லை -- காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம் மாத்ஸர்யம் என்று சொல்லப்படும் பல துர்க்குணங்களில் ஒன்றாவது குறைந்தால் கொஞ்சமாவது சித்தசுத்தி ஏற்படும், அப்படியுமில்லை யென்கை.

நெஞ்சு பூர்ணமாகக் கெட்டுப்போயிருந்தாலும் வாயில் நாலு நல்ல சொற்கள் வந்தாலாவது நாலுபேர் பார்த்து ‘இவன் நல்லவன்’ என்று சொல்லக்கூடும், இப்படியுமில்லை; தப்பிப் போயும் ஒரு நல்லவார்த்தை வாயில் வருவதில்லை. ஒருவன் நல்லாடை யுடுத்து நால்வர்க்கு நல்லனாகத் திரிந்தானாகில் அவனுடைய அந்த மேன்மையைப் பொறுக்கமாட்டாமல் நிஷ்காரணமாக நான் அவர்களைப் பழித்துக்கூறும் சொற்களுக்கு எல்லையேயில்லை.

இப்படி தமது தீமைகளைப் பரக்க உரைத்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் “ஆழ்வீர்! பேற்றுக்கு ப்ரதிபந்தகம் எவ்வளவு வேணுமோ அவ்வளவும் உம்மிடத்தில் இருப்பதாகக் கூறுகின்றீர்; இப்படிப்பட்ட உம்மை நான் என்செய்யவல்லேன். உம்முடைய கருமபலனை நீர் அநுபவிக்கக்கடவீர்!” என்று உபேக்ஷை தோற்ற அருளிச் செய்ய, அதற்கு உத்தரமாகப் “புனத்துழாய் மாலை யானே” என்கிறார்; நம்முடைய குறைகளைப் பார்த்து அகலவொண்ணாதபடி, ஒழிக்க வொழியாத உறவே ஹேதுவாகக் கைப்பற்றக் கடவோமென்று காக்கு மியல்வினனாயிருக்கு மிருப்புத்தோற்றத் தனிமாலை யிட்டிருப்பவரன்றோ தேவரீர்; நாங்கள் கருமபலனை அனுபவிப்பதற்கு நீர் தனிமாலை யிட்டுக்கொண்டிருப்பானேன்? என்கை.

 

English Translation

O Fresh Tulasi-garland Lord, Lord of Ponni-surrounded-Tiru-Arangam! O King whom I serve! I have no purity in my heart, no sweetness in my speech. With impotent rage and anxious looks, I have uttered fiery words. What is going to be my fate now?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain