(899)

உம்பரா லறிய லாகா ஒளியுளார் ஆனைக் காகி

செம்புலா லுண்டு வாழும் முதலைமேல் சீறி வந்தார்

நம்பர மாய துண்டே நாய்களோம் சிறுமை யோரா

எம்பிராற் காட்செய் யாதே எஞ்செய்வான் தோன்றி னேனே.

 

பதவுரை

உம்பரால் அறியல் ஆகா ஒளி உளார்

-

தேவர்களாலும் (இவ்வகை யென்று பரிச்சேதித்து) அறிய முடியாத தேஜோ மயமான பரமபதத்தை விபூதியாகவுடைய எம்பெருமான்

ஆனைக்காகி

-

கஜேந்திராழ்வானுக்காக

செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி

-

சிவந்த மாம்ஸத்தை புஜித்து வாழ்கிற முதலையின் மேலே சீற்றங்கொண்டு

வந்தார்

-

(மடுவின் கரையிலே) எழுந்தருளினார்.

(இப்படி ஆச்ரித பக்ஷபாதியாய் ரக்ஷிக்குமவனிருக்க;)

நம்பரம் ஆயது உண்டே

-

(நம்முடைய ரக்ஷணத்தில்) நமக்கொரு பளுவுண்டோ?

நாய்களோம் சிறுமை ஓரா

-

நாய்போல் நிக்ருஷ்டரான நம்முடைய தண்மையை ஆராயாதவரான

எம்பிராற்கு

-

எம்பெருமானுக்கு

ஆள் செய்யாதே

-

அடிமை செய்யப்பெறாமல் (இருக்கிற நான்)

என் செய்வான் தோன்றினேன்

-

எதுக்காக பிறந்தேன்!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மடுவின் கரையிலே முதலையின் வாயில் அகப்பட்டு வருந்தின கஜேந்த்ராழ்வான் “நாராயணா! ஓ! மணிவண்ணா நாகணையாய்!” என்று அழைத்தவாறே அரைகுலையத் தலைகுலைய மடுவின்கரையிலே ஓடிவந்தவனன்றோ எம்பெருமான்; இப்படி ஆச்ரித ஸுலபனாய் ஆச்ரித பக்ஷபாதியான எம்பெருமானிருக்க அவனைக் கடகாகப் பற்றாமல் நம்மைநாமே ரக்ஷித்துக் கொள்ளப் பார்ப்பதும் ஒரு காரியமாகுமோ? ஆனால் பரமோத்க்ருஷ்டனான அவன் பரமநிக்ருஷ்டரான நம்மை ஒரு பொருளாக நினைப்பனோ என்று சிறிது சங்கிக்கலாம்; இதுவும் அவனுடைய ஸ்வரூபத்தை அறியாதாருடைய சங்கையாகும்;  ‘இவன் நீசன், இவன் உத்கிருஷ்டன்’ என்று ஏற்றத்தாழ்வுகளைப் பார்ப்பவனல்லன் எம்பெருமான். இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயத்திலே சிறிதும் அடிமை செய்யப்பெறாத பாவியேன் ஏதுக்காக ஒரு மனிதனாகப் பிறந்தேனென்று தலையிலடித்துக் கொள்ளுகிறபடி பரமபதத்தை ஒளி என்ற சொல்லாற் கூறியது வடமொழி வேதப்ரக்ரியையை அடியொற்றியாம்.

“செம்புலாலுண்டு வாழும்” என்று முதலைக்கு இட்ட அடைமொழியின் கருத்து என்னென்னில்; “திர்யக்ஷு நைவஹி விபக்ஷதயோபசார:” (அதிமாநுஷஸ்தவம்) என்றபடி எதிரியாக நினைக்கவும் தகாத ஒரு ஹீநஜந்துவை எதிரியாக்கி அதன்மேல் கோபங்கொண்டது ஆச்ரித பக்ஷபாதத்தலான்றோ என்னுங் கருத்து வெளிவரும்.

நம்பரம் - பளுவு என்னும் பொருளதான பர: என்ற வடசொல் பரமெனத் திரிந்தது. “ந்யஸ்ய த்வத் பாதபத்மே வரத நிஜபரம் நிர்ப்பரோ நிர்ப்பயோஸ்மீ” என்று அநுஸந்திப்பது அறிவுடையார் செயலாதலால் நமக்குப் பரமான தொன்றுமில்லையென்க.

 

English Translation

Even gods cannot understand the radiant Lord. Heeding an elephant, he came rushing against a flesh-eating crocodile. Need we carry our burden! Meaner than dogs, yet we are cared for by him. If I am not to serve him, for what was I born?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain