(895)

வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழி லரங்கந் தன்னுள்

கள்ளனார் கிடந்த வாறும் கமலநன் முகமும் கண்டு

உள்ளமே வலியைப் போலும் ஒருவனென் றுணர மாட்டாய்

கள்ளமே காதல் செய்துன் கள்ளத்தே கழிக்கின் றாயே.

 

பதவுரை

வெள்ளம் நீர்

-

பெருக்கையுடைய காவேரி யானது

பரந்து பாயும்

-

எங்கும் பரவிப் பாய்தற்கு இடமானதும்

விரி  பொழில்

-

விசாலாமான சோலைகளை யுடையதுமான

அரங்கம் தன்னுள்

-

கோயிலிலே,

கள்வனார்

-

அடியவர்களைக் கொள்ளை கொள்ளுமவனான அழகிய மணவாளன

கிடந்து ஆறும்

-

பள்ளிக் கொள்ளும்படியையும்

கமலம் நல் முகமும்

-

தாமரை மலர் போல் அழகிய திருமுகத்தையும்

கண்டும்

-

ஸேவிக்கப்பெற்ற பின்பும்

உள்ளமே

-

ஓ நெஞ்சே!

வலியை போலும்

-

நீ கல்லாகிராநின்றாய் போலும்!

ஒருவன் என்று

-

அவன் ஒப்பற்றவனென்று

உணரமாட்டாய்

 

அறியமாட்டாய் (இவ்விஷயத்தில்)

கள்ளம் காதலே செய்து

-

கபடமான பக்தியையே செய்துகொண்டு

உன் கள்ளத்தே

-

உனது கபடச் செய்கையிலேயே

கழிக்கின்றாயே

-

காலத்தை கழிக்கிறாயே!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் பரமபதத்தில் நித்யஸூரிகளோடு பரிமாறுவதை விட்டுவிட்டு இங்கே வந்து கண்வளர்ந்தருளுவது- உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலத்தவராகிய ஸம்ஸாரிகளை வசப்படுத்திக் கொள்வதற்காக வலை வீககிறபடியாதலால் கள்வனார் எனப்பட்டது. வேசியைக் கண்டு பேசவிரும்பியும், சோறுவாங்கி உண்ணக்கருதியும், திருவிழாக்களிலே திரண்டவர்கள் ஏமாந்திருக்கையில் கொள்ளை கொள்ளக்கருதியும் இவ்வாறு பலவகை எண்ணங்களோடே கோவிலுக்குள்ளே புகுந்தவர்களை, வடிவழகு முதலியவற்றைக்காட்டி  நாளடைவில், தனக்கு அற்றுத்தீர்ந்த அடியவராம்படி, ஆக்கிக்கொள்ளுகிற எம்பொருமானைக் கள்ளனென்னத் தடையுண்டோ? “செஞ்சொற் கவிகாள்! உயிர் காத்து ஆட்செய்மின் திருமாலிருஞ்சோலை, வஞ்சக்கள்வன் மாமாயன்” என்றாரே நம்மாழ்வாரும்.

தன் உடைமையப் பெறுதற்கு இங்ஙனே வந்துகிடக்கிற கிடையையும், தாய்க்கொலை செய்பவனும் மயங்கி நிற்கும்படியான அழகுவாய்ந்த திருமுக மண்டலத்தையும் ஸேவிக்கப் பெற்றபின்பு நெஞ்சே! சிறிதுகூட விகாரப்படாமல் கல்போலத் திண்ணிதாயிருக்கின்றாயே! என்கிறார். “கீழ்ப்பிறந்த விகாரமெல்லாம் விஷய வைலக்ஷண்யத்தைப்பற்ற அஸத் ஸமமாயிருக்கிற தாய்த்து இவர்க்கு” என்பர் பெரியவாச்சான்பிள்ளை.

‘இப்போது எனக்கு வந்த வன்மை என்ன?’ என்று நெஞ்சானது கேட்க; ஒருவனென் றுணரமாட்டாய் என்கிறார்: உண்டு உறங்கும் ஸாமந்யரைப் போலே இவனையும் நினைத்திருக்கிறாயே யொழிய  ‘இஃது ஒரு விலக்ஷண வஸ்து’ என்று விவேகிக்கமாட்டுகிறிலையே! அப்படி விவேகித்திருப்பாயாகில் அவ்விஷயத்திற்குத் தகுதியாக விடாய்பிறந்திருக்கவேணுமே; அது பிறநவாமையாலே உன்னைக் கல் என்னத் தட்டென்? என்கிறார்.

கள்ளமே காதல்செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே- நெஞ்சே! ப்ராக்ருத விஷயங்களை விரும்பிப்போக வாஸநை இவ்விஷயத்திலும் தொடர்ந்து மாத்திரமே யொழிய, இதன் வைலக்ஷண்யத்துக்குத் தகுதியாக நீ காதல் கொண்டாயில்லை; கபடமான காதல்கிடாய் உன்னது. என்கை.

 

English Translation

The Lord with lotus eyes that steal the heart reclines in Arangam where the waters of the river Kaveri flow wide in fragrant blossoming bowers. O Heart, you are indeed hard, you do not realize the Lord. Playing false love games, you pass your life in falsity.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain