(894)

கங்கயிற் புனித மாய காவிரி நடுவு பாட்டு

பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழி லரங்கந் தன்னுள்

எங்கள்மா லிறைவ னீசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்

எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையே னேழை யேனே.

 

பதவுரை

ஏழையேன்

-

(எம்பெருமானைக் கிட்டினால் அநுபவிக்க மாட்டாமலும், பிரிந்தால் தரிக்க மாட்டாமலும்) பேதைமைக் குணத்தையுடைய நான்

கங்கையின் புனிதம் ஆய காவிரி நடுவு பாட்டு

-

கங்காநதியிற் காட்டிலும் பரிசுத்தியுடையதாகிய காவேரிநதியினது நடுவிடத்திலே

பொங்கு நீர்

-

பெரிய கிளர்த்தியோடு வருகின்ற (அந்நதியின்) நீர்ப் பெருக்கு

பரந்து பாயும்

-

எங்கும் பரவிப்பாய்தற்கிட மானதும்

பூ பொழில்

-

அழகிய சோலைகளையுடையது மாகிய

அரங்கம் தன்னுள்

-

கோயிலிலே

எங்கள் மால்

-

(அடியவரான) எங்களிடத்தில் பேரன்பு உடையவனும்

இறைவன்

-

ஸர்வஸ்வாமியும்

ஈசன்

-

ஸர்வநியாமகனுமாகிய ஸ்ரீ ரங்கநாதன்

கிடந்தது ஒர் கிடக்கை

-

சயனித்திருப்பதாகிய ஒப்பற்ற பள்ளிகொண்ட திருக்கோலத்தை

கண்டும்

-

ஸேவிக்கப்பெற்ற பின்பும்

மறந்து

-

(அந்தகிடையழகை) மறந்து போய்

எங்ஙனம் வாழ்கேன்

-

எவ்வாறு தரித்திருப்பேன் யான்?

ஏழையனே

-

ஒன்றுஞ் செய்யமாட்டாது திகைத்தவனாகவே நிற்பேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உபயகாவேரி மத்தியிலே ஸ்ரீரங்கத்தில் அழகிய மணவாளனது சயந திருக்கோலத்தை ஸேவிக்கப்பெற்ற பின்பு, யான் அந்தக் கிடையழகிலே மனம் ஈடுபட்டுப்புறம்பே செல்ல மாட்டாது தவித்து வருந்துதலையொழிய அதனை மறந்து தரித்திருக்க உபாயமுண்டோ என்று -தாம் எம்பெருமானது கிடையழகில் ஈடுபட்டமையை இதனால் கூறுகின்றனரென்க.

கங்காநதியானது விஷ்ணுபாத்தில் நின்றும் தோன்றியதலால் பரிசுத்தமானது; என்றாலும், சிவனுடைய சடை முடியில் தங்கியதனால் ‘ரெளத்ரம்’ (ருத்ரஸம்பந்தமுள்ளது- சடைச்சாறு) என்று சொல்லுகிற ஒரு குறைவை அடைந்திட்டது; இந்தக் காவேரியோ அங்ஙனம் குறைபாடு ஒன்றுமில்லாததோடு அந்தக் கங்கையைத் தனது திருவடியில் நின்று முண்டாக்கின பெருமான் தான் மிக்க அன்புபூண்டு தன் நடுவிற் பள்ளிக்கொள்ளும் பாக்யமும் பெற்றது பற்றி, அந்தகங்கையை பார்க்கிலும் இது ஏற்றம் பெற்றதாகுமென்பர் . *பேநைர் ஹஸந்தீவ த்த்கங்காம் விஷ்ணுபதித்துவ மாத்ரமுகராம் ஹேமாபகா ஹந்த்வகம் என்று பட்டரும் அருளிச் செய்தது காண்க.

(பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழிலரங்கம்)கோயிலைக் கிட்டுகின்றோமென்கிற குதூஹத்தினால் பெரிய கிளர்த்திகொண்டு தனது பெருமகிழ்ச்சியெல்லாம் தோற்றுமாறு எங்கும் காவேரிநதி பாய்வதனால் எப்போதும் மலர்கள் மாறாத சோலைகள் சூழ்ந்த பெரிய பெருமாளது ஸெளகுமார்யத்துக்கு அநுகூலமான நீர்வளத்தையும் எப்போதும் இளவேனிற் பருவம்போலத் தோன்றுகிற பூஞ்சோலைகளையுமுடைய ஸ்ரீரங்கம்: இதனால் அத்தேசத்தினது தூய்மையும் .இனிமையும் வெளியாமென்க.

இறைவன் என்பது -அவன் ஸகல பதார்த்தங்களுக்கும் தலைவன் என்பதையும்; ஈசன் என்பது –தனது தலைமைக்குத் தகும்படி ஆளவல்ல திறமையுடையவ னென்பதையும் தெரிவிக்கு மென்ப.

கண்டும் மறந்து எங்ஙனம் வாழ்கேன்- இவ்விஷயத்தைக் கண்டு அநுபவிப்பதற்கு முன்பாகில் மறந்தாலும் மறக்கலாம்; கண்டு அநுபவித்த பின்பு மறக்கும் வழி தெரியவில்லையே! மறக்க மருந்துண்டாகில் கொடுங்கள் என்கிறார்.

கவேரனுடைய மகள் என்னும் பொருளதான காவேரீஎன்ற  வடசொல் காவிரி எனத்திரிந்தது. நடுவு பாட்டு –ஏழனுருபு: இடத்திலே.எங்கள்- தம்மை போன்ற அடி யாரையும் உளப்படுத்திய தன்மைப் பன்மை. மால் –அன்பு;அதனையுடையவனுக்கு ஆகுபெயர். ஏழையேன் – “நுண்ணுணர்வின்மை வறுமை” என்றபடி  ‘அறிவில்லாதவன்’ என்றவாறு.

 

English Translation

Our Lord and master reclines in the midst of the Kaveri, holier than the Ganga, whose gushing waters flow over fragrant bowers in Arangam. Having seen his beautiful form, how can I forget him and alive? O Powerless, hopeless me!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain